Wednesday, February 28, 2018

Peepingtom - 60களின் ஒரு தலை சிறந்த திரைப்படம்

திரைப்பட விரும்பிகள் மற்றும் இயக்குனராக ஆர்வமிக்கவர்கள் தவற விடக்கூடாத திரைப்படம் “Peepingtom”.


மனிதர்களுக்கு அடிப்படையிலேயே பிறரது அந்தரங்கம் அறிந்து கொள்வதில் தீராத ஆர்வம் இருந்து வந்துகொண்டிருக்கிறது. இதை Voyeurism என்றும் சொல்லலாம். திரைப்படங்களும் இதற்கு பாரிய உதவி புரிந்திருக்கிறது. திரைப்படங்கள் எப்படி voyeurism என்ற பகுதிக்குள் அடங்கும் என்ற கேள்வியே தேவையற்றது. 

உண்மையில் நாம் பிற மனிதர்களின் வாழ்வியல் அந்தரங்கங்ககளை இருட்டில் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து பார்ப்பதற்கு எப்போதுமே தயார் நிலையில் உள்ளோம். அதன் மூலம் பல்வேறு புரிதல்கள் மற்றும் உணர்வெழுச்சிகளை அனுபவிக்கிறோம். நாமும் அந்த திரைப்படத்துக்காக நமது நேரத்தையும் பணத்தையும் அர்ப்பணிக்கிறோம். 

1960ஆண்டு காலப்பகுதியில் Hitchcock இன் Psycho திரைப்படம் பரவலாக விமர்சிக்கப்பட்ட அதே நேரம் Michael Powell இனால் இயக்கி வெளியிடப்பட்ட Peepingtom திரைப்படமும் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

Director  Michael Powell
இருந்தாலும் பல்வேறுபட்ட நிறங்களுடனான அழகியலுடன் காட்சிப்படுத்தப்பட்டமையால் இதன் கவர்ச்சி இன்றும் கூட ஈர்க்கின்றது. வன்மமான சம்பவங்களை காட்சிப்படுத்தும்போது எழக்கூடிய அத்தனை விமர்சனங்களும் இயக்குனருக்கும் இருந்தது.

Psychological thriller,serial killer,psycho killer, snuff movie என்ற பல்வேறு பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு கலைஞனுக்கான கட்டற்ற ஆர்வமும் வெறித்தனத்துடன் கூடிய தேடலாகவே எனக்கு தோன்றியது. உளவியல் ரீதியாக மனிதனது பய உணர்வுகளை ஆய்வு செய்ய தன் சொந்த மகனை வைத்தே பரிசோதனை செய்யத்துணிந்து அதில் பயம் சார்ந்து உளவியல் மேதையாக பிரதான கதாப்பாத்திரமான Mark இன் தந்தை இருந்தார். படத்தில் தந்தையாக இயக்குநர் Michael Powell ஒரு கட்டத்தில் தோன்றி இருப்பார். 

சிறு வயது முதல் தனக்கு தந்தையால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவுதான் Mark இன் இருத்தல் என்று சொல்லிவிடலாம். தூக்கமில்லாமல்,தனிமையில் உலகத்தை அந்நியமாகவும் மனித உணர்வுகளை ஒரு பரிசோதனையாகவும் பார்த்து அதனை தன் கேமராவில் அவர்களுக்குத் தெரியாமலே ஆவணப்படுத்தும் கதாப்பாத்திரமாக அவன் மாறிவிட்டிருந்தான். காமம்,வலி,பயம் போன்றவற்றை படம்பிடிப்பதில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. 


கூச்ச சுபாவமுள்ள பாலியலில் ஆர்வம் இருக்கும் அதே வேளை பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டவனாகவும் சித்தரிக்கப்படும் இக்கதாப்பாத்திர உருவாக்கம் இன்னும் இன்னும் பிரம்மிப்பூட்டிக்கொண்டிருக்கிறது.


எனக்கு Peepingtom பார்க்கும்போது Mark கதாப்பாத்திரத்தின் சில செயற்பாடுகள் Kieslowski இன் camera buff திரைப்பட பிரதான கதாப்பாத்திரம் fillip mozs இன் கதாப்பாத்திரத்திற்குமான ஒற்றுமைகள் மற்றும் கேமரா மீதான Madness அங்கங்கே அடையாளப்படுத்தியிருப்பத்தை பார்க்க கூடியதாக இருந்தது.

From 'Camera buff' film 

Camera buff இல் தன் கேமராவினால் கலை ஆர்வத்தினால் தன்னையே மறந்து தன்னுள் அந்த camera மீதான காதல் திரைப்படம் எடுக்கவேண்டும்,மனித உணர்வுகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அந்த கதாப்பாத்திரத்தினுள் கண்மூடித்தனமாக நுழைவதை Kieslowski அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்.

camera buff இல் fillip mozs இன் மனைவி சண்டைபிடித்து கோபமாக திரும்பிச்செல்லும்போது அவள் தன்னை விட்டுப்பிரிந்து செல்கிறாள் என்பது கூட புரியாமல் தன்னை அறியாமலே அவளது பின்புறத்தை தன் கைகளைக் கொண்டு frame போட்டுப்பார்க்க ஆரம்பிப்பார். அதேபோன்று தன் கேமரா மீதான கண்மூடித்தனமான காதலை peepingtom திரைப்படத்திலும் காணக்கிடைத்தது. 

Mark தன் காதலியுடன் வெளியில் செல்லும்போது கேமராவை விட்டு தனியாக வருமாறு காதலி கேட்க குழப்பமான மன நிலையுடன் முழு மனமில்லாமல் கேமராவை அவளது அறையில் விட்டு செல்வான். போகும் வழியில் ஒரு காதல் ஜோடி கட்டிப்படித்து முத்தமிடுவதைப்பார்த்ததும் சடுதியாக அவ்விடத்தில் நின்று அவர்களைப்பார்த்துக்கொண்டே காதலி தன்னுடன் இருப்பதைக்கூட மறந்து வழக்கமாக தன் கேமராப்பை இருக்கும் இடத்தை தடவ ஆரம்பிப்பான். 

அதே போல camera buff ஆரம்பத்தில் தன் மகளின் ஒவ்வொரு பருவத்தையும் படம்பிடிக்க ஆரம்பித்தவன் இறுதியில் தன்னைத்தானே நோக்கி கேமராவை திருப்பி தன்னைப் படம்பிடிக்க ஆரம்பிப்பான்.peepingtom இல் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு பெண்களின் பய உணர்வுகளையும் படம்பிடித்தவன் இறுதி தருணம் தன்னை நோக்கி கேமராவை திருப்பி தன்னுடைய பய உணர்வுகளை படம்பிடித்து தன் ஆவணப்படத்தைப் பூர்த்தி செய்வான்.


peepingtom இல் இன்னுமொரு காட்சியில் தன் காதலிக்கு பிறந்த நாளுக்கு கொடுத்த பரிசான ஒரு சட்டைப்பின் அதை அவள் சட்டையின் நடுப்பகுதியில் குத்துவதா அல்லது தோள்பட்டை இடது பக்க மேல் மூலையில் குத்துவதா என்று சரி பார்த்துக் கொண்டிருக்கையில் Mike அந்த நேரத்தில் தன்னை ஒரு கேமராவாக உருவகப்படுத்தி அவள் செய்வது போலவே தன்னை அறியாமல் தன் கைகளை கொண்டு தன் உடலை தொட்டு அசைத்து தான் ஒரு கேமராவாக இருந்து அவளது செய்கைகளை பதிவு செய்வான். 

இன்னும் காதலி தன்னை முத்தமிடுகையில் அவளை அணைத்து திருப்பி முத்தமிடாமல் அதற்குப் பதிலாக கேமரா லென்சை முத்தமிடுவான். 

இவை மூலம் அவன் எந்தளவுக்கு கேமராவுடன் பின்னிப்பிணைந்திருக்கிறான் என்பதை திரைமொழியூடாக வெளிப்படுத்தபட்டிருக்கும். 

அந்தக்காலகட்டத்தில் பலவாறு விமர்சிக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட இப்படம் தற்போது Cult திரைப்பட ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவும் பிரிட்டனின் ஒரு சிறந்த படைப்பாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.


Movie: Peepingtom (1960)
Director: Michael Powell

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |