Monday, October 30, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 2

The Edge Of Heaven


மரணம் ஒருவகை பிறப்பு.

ஒருவரது மரணம் மற்றுமொருவரில் எத்தகைய தாக்கத்தத்தை ஏற்படுத்துகின்றதென்றால், அவரை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கான ஒரு ஆணித்தனமான நோக்கத்தை விடாப்பிடியான முனகலுடன் வழங்கிவிடுகின்றது.

எவரும் எதிர்பாரமால் செய்யும் தவறுகளும் அதனால் ஏற்படும் குற்றவுணர்வுகளும் அத்தவறை சரி செய்து குற்றவுணர்வை நீக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித மனங்களுக்கே என்றும் உரித்தானவை.இந்த “குற்றவுணர்வை சரி செய்தல்”என்னும் உணர்விழை ஒவ்வொரு மனிதனுக்குப்பின்னாலும் ஓடிக்கொண்டிருக்கும்.

உடல்,நிறம்,நாடு,மொழி,இனம்,மதம் இவற்றால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் அனைவரையும் இணைத்துவிட ஓர் உணர்வுப்புள்ளி போதுமானது.

நன்கறிந்தவரையே சாதாரணமாக புறக்கணித்துவிடும் பிறரது உணர்வானது,முன் பின் பாரதூரமாக அறியப்படாதவரால் நுண்ணுணர்வுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பெரும்பாலும் அசாத்தியமானதாக இருந்தாலும் சில தருணங்களில் சாத்தியமானதுதான்.அத்தகையை சில தருணங்களையும் மனிதத்தின் ஆழமான உணர்வு வெளிப்பாடுகளையும் ஒருங்கே கொண்டமைந்தது “The Edge Of Heaven”.

பன்மைத்துவ கலாச்சாரம் மற்றும் உலமயமாக்கலின் விளைவு போன்றவைகள்,அரசுசார் ஆக்கிரமிப்புகள் தனிமனித வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகையில், அவர்களுக்கே உரித்தானவைகளை இழக்க நேரிடும்போது அதை எவ்வாறு அவர்கள் எதிர்த்து சமாளித்து தன்பக்கத்தை தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை எளிமையான காட்சி நடைகள் மூலம் காண்பிக்கும்.

வளர்ந்து வரும் ஐரோப்பா முழுவதும் “பன்முக கலாச்சாரவாதம்” எழுச்சிக்குட்பட்டிருக்கையில் ஏற்படும் பதட்டம் மற்றும் ஒருங்கிணைந்த நாடான ஜெர்மனியில் குடியேற்றத்தின் விளைவால் அதன் மக்கள் தொகையின் அதிகரிப்பு போன்றவைகள் இடையிடையே படம் பேசிச்செல்லும்.

இக்கதையினூடே மதம் தொடர்பான சிக்கல்களும் சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.குறிப்பாக துருக்கிய ஜெர்மானியர்கள் சிலரின் இஸ்லாமிய தீவிரப்போக்கு,தனி நபர் அடக்குமுறைகள் என்பன பாரிய வன்முறையாகவே தென்பட்டன.இவ்வாறான அடக்குமுறை பெரும்பாலும் நாம் அறிந்ததே.பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெய்ரந்தவர்கள், குடியேறியவர்கள் பன்மைத்துவ கலாச்சார மற்றும் நாகரீகங்களினுள் உள்வாங்கப்படும் போது அதனை ஏற்றுகொள்ள மறுப்பது.இன்னும் பாரம்பரிய அடையாளங்களை பேணுவதில் அதீத கவனம் செலுத்துவது.அதிலும் பெண்கள் தான் பாரியளவில்அடக்கி ஒடுக்கப்படுவது போன்ற விடயங்கள் பேசப்பட்டிருக்கும்.

இத்திரைப்பட இயக்குநர் பதிஹ் அகின் (Fatih Akin) இன் மற்றுமொரு திரைப்படமான “Head-on”(2004) இவ்வாறன அடக்குமுறையை வேறு பாணியல் வேறு வகையான உணர்வெழுச்சிச்சிகளைக்கொண்டு ஆழமாக பேசிச்செல்லும் தவற விடக்கூடாத திரைப்படம்.

“The Edge Of Heaven” திரைப்படம் கதையை விட கதாப்பத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான காரணம் பின்னிப்பூட்டப்பட்ட கதையாடல்.இது ஒரு சிறந்த Hyperlink Movieக்கான அணுகுமுறை என்று கூட சொல்லலாம்.நிச்சயமாக இயக்குநர்”Alejandro Gonzalez Inarritu” வின் Babel,21grams,Amores perros போன்ற திரைக்கதை சொல்லும் பாணி இன்னும் இயக்குநர் Wong Kar-waiயின் Fallen Angels திரைக்கதை கூட நினைவுக்கு வரலாம்.

படத்தினுள் கதாப்பாத்திரங்கள் கதைக்கருவின் இழைகளினூடாகமட்டுமே இணைகிறார்களே தவிர நேரடியாக யாரும் யாருடனும் இணையவில்லை.
அங்கு அனைவரும் ஒரவரை ஒருவர் அறிந்து அடையாளம் காணப்பட்டிருந்தால், அனைத்தும் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுவாரஷ்யம் நீங்கி நடிப்பு அர்த்தமற்று போயிருப்பதுடன் இயக்குநர் பார்வையாளருக்கு ஏற்படுத்த நினைக்கும் உணர்வு இல்லாமலே போய்விட்டிருக்கும்.

படத்தின் ஒவ்வொரு நிகழ்வும் முன்னரே தலைப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும்.உதாரணமாக Yeter’s Death என்னும் தலைப்பின் பின் படம் நகரும்.முன்னதாகவே யத்தர் இறக்கப்போகிறாள் என்பது எமக்கு தெரியும்.இருந்தாலும் அது எவ்வாறு நிகழப்போகின்றது என்பதற்கான துணுக்குகளை ஆராய்ந்தபடி சுவாரஷ்யம் குன்றாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.அது போலவே Lotte’s Death என்னும் தலைப்பும்.

இது தவிர இரு பெண்களுக்கிடையிலான உணர்வுப்பூர்வமான காதல் உருவாக்கம் மற்றும் அதன் ஏக்கம் என்பன பிரதான கருப்பொருளாக தூக்கிப்பேசாமல் அதன் போக்கிலேயே நிகழ விடப்பட்டிருக்கும்.

இவ்வாறாக மனித மனதின் நுண்ணுணர்வுகள்,நாட்டின் அரசியல் சிக்கல்கள்,புவியியல்காலநிலை மற்றும் தலைமுறை இடைவெளி போன்ற பல்வேறு அம்சங்களை நுணுக்கமாக ஆராய்வதற்கு இயக்குநர் தவறவில்லை.

The Edge of Heaven  (2007 Turkish-German Drama)
Director : FatihAkin


The dreamers



ரசனை மற்றும் சிந்தனைத்தளத்தில் பெரும்பாலும் ஒருமித்து இருப்பவர்களுடன் நம்மை அறியாமலே எந்த அளவு நெருக்கமும் ஈடுபாடும் கொள்கிறோம் என்பதை சிந்தித்துத்துப் பார்த்ததுண்டா?

இத்தகையவர்களுக்கு கருத்துமுரண்பாடுகள் வரவே வராது என்றல்லாம் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.இவர்கள் கலைவிரும்பிகள்.அதே நேரம் முரண்களின் காதலர்கள்.

ஒரு திரைப்படம் எந்தளவுக்கு நம் ஆன்மாவை நெருங்குகின்றது என்பதில்தான் அந்த திரைப்படத்தின் உயிர்ப்பையும் வெற்றியையும் எம்மால் நிர்ணயிக்க முடியும். “The dreamers” என் ஆன்மாவை தொட்டது என்பதை விட என்னை பல இடங்களில் பிரதி  பலித்தது என்றே கூறலாம்.நீண்ட நாட்களின் பின் விநோதமாக ரசித்து நெகிழ்ந்து பார்த்த ஒரு திரைப்படம்.

“Film Buffs are sick people” (Francois Truffaut) என்னும் வாசகம் நான் அடிக்கடி நினைவுகூறிக் கொள்வது.இத்தகைய “திரைப்பட ஆர்வலர்கள்” (Film buffs) என்னும் அடையாளம் மட்டுமே இவர்களை ஒன்றிணைத்து விடுகிறது.திரைப்படத்தால் வெகுவாக கவரப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களது வாழ்வியலை, திரைப்படத்தின் கதாப்பாத்திரத்திற்குள் நுழைந்து அதனை அனுபவிக்கும் மனோபாவம் எத்தகைய அலாதியானது? அத்தகையவர்களைத்தான் நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.

இத்திரைப்பட கதாப்பாத்திரங்கள் மிகவும் ஆச்சர்யமூட்ட கூடியவர்கள். இவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர்ச்சியாக தங்களுக்கு பிடித்த திரைப்படங்களுடன் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.மேலும் அந்த படங்கள் “சினிமா ஆர்வலர்களின்” வாழ்க்கையை தொடுவதில் எந்த அளவு வெற்றி அடைந்துள்ளதோ அதே அளவு “The dreamers” திரைப்படமும் வெற்றி அடைந்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட காலகட்டத்தில் கடுமையாகவும், மக்களுக்கு காண்பிக்கப்பட்ட ஒரு குற்றமாகவுமே கருதப்பட்டது.இன்னும் MPAA (Motion Picture Association of America) என்னும் அமைப்பால் இத்திரைப்படம் கலைக்கப்பட்டதில் இருந்து சமூகம் எவ்வளவு குறுகிய மனப்பான்மையில் இருந்தது என்பதற்கான தெளிவான ஒரு சாட்சியை எமக்கு முன்வைத்தும் விட்டது. இது ஒரு அருவருப்பான படம் என்பதெல்லாம் மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு.

நாவலாசிரியரான Gilbert Adair இன் ”The holly innocents” என்னும் நாவலை தழுவிய இத்திரைப்படத்தின் Screen play யும் இந்நாவலாசிரியரால் எழுதப்பட்டது. இயக்குநர் “Bernardo Bertolucci” சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையிலான பாலியலின் கடுமையான பார்வையை பார்வையாளர்களிடம் கொடுத்து தேவையற்ற மெருகூட்டல்கள் இல்லாமல் இயல்பாக இயங்க விட்டிருக்கிறார்.

மூன்று நபர்களும் கட்டமைக்கப்பட்ட வாழ்க்கைக்குள்ளிருந்து அதை உடைப்பதற்கும் (Free Life) கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வாழ்க்கையை எவ்வாறு நடை முறைப்படுத்தலாம் என்பதிலும் போராடுகிறார்கள். ஒரே எண்ணக்கருக்களைக்கொண்ட இரட்டையர்களுடன் இணையும் Matthew என்னும் கதாப்பாத்திரம் எவ்வளவுதான் அவர்களுக்குள் நுழைய முயற்சித்தாலும் அவன் வேறு ஒருவன்தான் என்னும் உணர்வு அவனை விட்டுவைக்கவில்லை. அந்த இரட்டையர்களின் உறவு நிலையை பார்த்து அதிர்ச்சியுறும் Matthew உம் சரி பார்க்கின்ற பார்வையாளர்களும் சரி அவர்களுடைய உறவை இன்ஸஸ்ட் (Incest) என்று எண்ணினால் அது அவர்களுக்கு பாரிய ஏமாற்றம் தான்.

மூன்றாவது நபரைப் பொறுத்தவரையில் Théo, Isabelle கதாப்பாத்திரங்கள் மிகவும் கொடூரமானவர்கள்,அருவருப்பானவர்கள்.பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக ஒருவரை ஒருவர் சவால் விட்டுக் கொள்ளக்கூடியவர்கள். இதற்குள் Matthew அவர்கள் இருவரையும் மீளாய்வு செய்கிறான். பாரம்பரியமாக நாம் பார்த்துப்பழகிய சகோதரர்களை விட போட்டியாளர்களாகவும் அன்யோன்யமாகவும் எவ்வித திரையற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பிறருக்கு இது கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்றுதான் என்றால் கேள்விக்குட்படுத்தி விடைதேட முயற்சிக்கலாம். என்னைப்பொறுத்தவரை இங்கே அனைத்தும் புரிதலுடன் நிகழ்ந்தேறுகிறது. ஆக கேள்விகளுக்கு அவசியமேயில்லை.

அடுத்து சகோதரர்களுக்கிடையிலான மற்றும் காதலர்களுக்கிடையிலான possessive மன நிலை பற்றிய புரிதலுக்கும் இங்கு தெளிவு கிடைக்கும்.

நடிகை Eva Green இன் அழகு மற்றும் நடிப்பு பற்றி புதிதாதக வர்ணிக்க ஒன்றுமே இல்லை.அவர் தான் இந்த படத்தை நகர்த்திச்செல்லும் விசை.இன்னும் பிரதானமாக திரைக்கதையில் எழுதப்படாமல் இருந்த ஒரு நிகழ்வு திரைப்படத்தில் காட்சியாக்கபட்டிருக்கிறது.ஒரு சமயம் Matthew இன் அருகில் பேச வரும் போது Eva Green இன் கூந்தலில் எதிர்பாராமல் தீப்பற்றும்.அதை பொருட்படுத்தாமல் அவர் அதனை தட்டி அணைத்து விட்டு கடந்து செல்வார்.முகத்தில் கூட எந்தவித கலகமும் இருக்காது.அந்த சம்பவத்தை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர்.

வாழ்க்கை,காதல்,இருத்தலியல்கொள்கை (existentialism), அழகு, பாலியல் உறவு என்பவற்றைக்கொண்டு திரைப்படத்தை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கி உள்ளார் இயக்குநர். குறிப்பாக திரைப்பட விரும்பிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒரு படம்.
The Dreamers (2003 Drama/Romance)
Director : BernardoBertolucci


Things to Come


தனிமை பற்றிய விவாதம் சபைக்கு வந்தால் நிற்கவே இடம் இருக்காது.ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தனிமையின் தாக்கம், ஏக்கம் பல விடயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கும் அல்லது கொன்று புதைத்திருக்கும்.

தனிமை இயற்கைக்கு மிக நெருக்கமானது. அது நம் சுயத்தை நாமே ஆய்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. அதை கடக்கப்பழகிவிடுதல் என்பது, "மரணத்தின் ஒரு பகுதியை ச்சுவைத்து மீண்டெழுவது போல” எம்முள் ஞானத்தின் ஒளி சுடர் விட ஆரம்பிக்கும்.

தனிமையில் சதா உழன்று கொண்டிருப்பதும், அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முயற்சி செய்வதும் உலக நியதி.அதை மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் பேசும் படம் இது.

இன்னும் ஒன்று. பற்றற்று இருத்தல்தான் வாழ்க்கையில் பிரதானமானது. மனித உறவுகளில் அதீத பற்றற்று இருத்தல் பற்றி என்னை யோசிக்க வைத்தது இப்படம்.இன்னும் பல உணர்வுகளை இலக்கியப்போக்கில் பேசிச்செல்கிறது.

மோனிக்கா பெல்லூசியின் பின் என்னை கடந்த சில நாட்களாக பிரம்மிக்கவைத்த நடிகைதான் இசபெல்லா (Isabelle Huppert). The Piano Teacher திரைப்படத்தின் மூலம் மனதின் அடி ஆழத்தில் இறங்கியவர். உடல் மொழி பற்றி இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

கணவன் தன்னை விட்டு போகிறான் என்றதும்,அவருக்கே உரிய பாணியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு வார்த்தை மூலம் நம் மனதை பிசைந்து விடுவார்.

“I thought you would Love me forever”


வழக்கமாக நம் சமூகத்தினருக்கான பெரிய குறைதான் பெண்கள் ஏன் எப்போதும் உடலரசியலில் சார்ந்து மட்டுமே பேசுகிறார்கள்? என்பது.அவர்களை எதன் பெயர் சொல்லி அடக்க முற்படுகின்றீர்களோ அதை பேசுவது தானே நியாயமும் கூட.இருந்தாலும் இங்கு மாற்றாக மனதின் நுண்ணுணர்வுகளை பேசும் இப்படம் இளம் பிரஞ்சுப் பெண் இயக்குனருடையது என்பது மிகச்சிறப்பு.

Things to Come (2016 Drama Film)
Director : MiaHansenLove
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |