Saturday, January 28, 2017

" Malena" ( சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசுகிசு)

"சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசு கிசு"

நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.இது ஒரு வகை சமூகத்திணிப்பாகவும் பின்பற்றலாகவுமே உள்ளது.அதிகம் படித்த பெண் எனக்கு திருமணத்திற்கு வேண்டாம் என்ற நிலை மாறி பட்டப்படிப்பு மேற்கொண்ட பெண்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும்;ஆனால் வேலைக்குச்செல்லக்கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையிலான திருமணங்களும் மேற்கொள்ளப்படுகிறது.இதனை ஆணாதிக்கம் என்ற போர்வை தாங்கிப்பார்ப்பதை விட சமூகத்திணிப்பால் ஆண்களே தங்கள் மீது சுமைகளை வாரிகட்டிக்கொண்ட ஒன்றாக நோக்குகிறேன்.ஒரு புறம் ஆண்கள் மீது பரிதாபமும் கொள்கிறேன்.இது இவ்வாறிருக்க திருமணமான பின் கணவன் வெளி நாடு செல்வது பற்றி எவ்வித அபிப்பிராயாயமும் எனக்கில்லை.ஆளுக்கொரு காரணத்தை சொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்க வேண்டாம்.குறித்த மத கலாச்சாரங்களினால் பின்னப்பட்ட சமூகத்தில் வாழும் சுதந்திரமாக வேலைக்குச்செல்லும் பெண்ணோ அல்லது வீட்டில் குழந்தை குட்டிகளைப்பார்த்துக்கொள்ளும் பெண்ணோ கணவன் தன் கண் படாதூரத்தில் உள்ள நிலையில் சமூகத்தில் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதையும் சமூகமே தீர்மானித்தும் விடுகிறது. இதில் விவாகரத்தான பெண்,விதவை பெண்களின் வாழ்வியல் பற்றி விளக்கம் தர வேண்டுமா என்ன??

இதில் என்ன புதிர் என்றால்,பெண்ணைப்பற்றி தான்தோன்றித்தனமாக கற்பனை செய்வதும் சமூகமே.அந்தக்கற்பனைக்கேற்ப கிசுகிசுக்களைப்புனைவதும் சமூகமே.அந்த கிசுகிசுக்களை உண்மைப்படுத்தப் போராடுவதும் சமூகமே.அந்த கிசுகிசு நிரூபிக்கப்பட்டு உண்மைப்படுத்தப்பட்டதை அறிந்தால் அந்த சமூகத்தின் குரலிலும் மனதிலும் எழும் கம்பீரம், உற்சாகம் அவரவர் வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காணமுடியாது.



நான் பார்த்த சமூகம் ,காலகட்டமும் வேறு,நான் பார்த்த பெண்ணும் வேறு."மலேனா"(Malena).அழகிதான் அவள்.அவளது அழகிற்காகவே அந்தப்படத்தைப்பார்த்தேன்.அந்த அழகை முழுமையாக பார்த்ததில் இருந்து பொறாமை ஒன்றும் எனக்கு தோன்றவில்லை.பயமும் பரிதாபமும் மேலோங்கியது.இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு இத்தாலிய திரைப்படம்.இது சமூகப்பார்வையில் 'மேலோட்ட செக்ஸ்'திரைப்படமாகவே கணிக்கப்பட்டது.இத்திரைப்படம் 1940 ஆண்டு காலப்பகுதியில் பாசிச கொள்கையுடைய முசோலினியும்,ஹிட்லரும் இணைந்து யுத்தத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் கணவன் யுத்தத்திற்குச்சென்றதால் 27 வயது நிரம்பிய கவர்ச்சியான உடல் கட்டமைப்பைக்கொண்ட ஒரு ஆசிரியையின் வாழ்க்கை கிசுகிசுக்களினால் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதைப் பிரதிபலிப்பதே இத்திரைப்படம்.

கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக மனிதனது மனதை ஆட்க்கொண்டு விடுகின்றன?அதிலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களது கிசுகிசு என்றாலே பார்வையாளர்களது நாவுக்கு கொண்டாட்டம் தான். இங்கே கிசுகிசுக்கள் மட்டுமல்ல ஒரு நிலை தாண்டி மலேனாவின் அழகு,பசி,வறுமை,சுற்றி உள்ள ஆண்களின் காம வெறி என்பன அவளை வேறொரு அசாதாரணமான நிலைக்குத்தள்ளி விட்டு வேடிக்கை பார்கின்றது.இப்படியான ஒரு நிகழ்வு தற்காலத்திலும் சாதாரணமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த ஊர் பெண்களிடம் மலேனாவின் அழகின் மீது மேலோங்கிய ஒரு வித பொறாமையும் கோபமும் கூட காணப்பட்டது."ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்" என்னும் பழமொழி இத்திரைப்படத்தில் பொய்யாகவே போய் விட்டது. ஒட்டு மொத்த பெண்களும் சேர்ந்து அடித்து துன்புறுத்தியும் அங்குள்ள ஆண்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஆண் சமூகத்தைப்பார்த்து ரத்தக்காயங்களுடன் மலேனாவின் கதறல் கண்ணீர் ஆதங்கம் அங்குள்ள எந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை அந்த சிறுவனைத்தவிர. எந்த பெண்ணுக்கும் தன் வீட்டில் இருக்கும் ஆணை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியவில்லை.கணவனாக இருந்தாலும் சரி,பிள்ளையாக இருந்தாலும் சரி.பழி எல்லாமே மலேனா(பெண்) மீதுதான்.


இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச்செல்லும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று உண்டு.
ரெனாடோ( Renato ).இவன்தான் இத்திரைப்படத்தின் கதை சொல்லி.முன்கட்டிளமைப்பருவத்தில் பல்வேறு உடலியல் உளவியல் மாற்றங்களை தன்னகத்தே கொண்டு அதற்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் 12 வயது சிறுவன். இவனது கனவுக்கன்னி மலேனா.அவனது சுய இன்பத்திற்கு அவளது முகமும் உடலும் கற்பனையில் அவனுக்குச்சொந்தமானவை.இதையும் தாண்டி அவனுக்கு அவள் மீதான காதல் வார்த்தையால் விபரிக்க முடியாதவை.அவளை வற்புறுத்தி அடைந்து கொள்ள வேண்டும்,அனுபவிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இன்றி அவனைச்சுற்றி உள்ளவர்கள் கூறும் கிசுகிசுக்களைப்பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அவளைப்பின் தொடர்கிறான்.சுற்றி உள்ள அவனது சமூகத்தையும் மலேனாவின் துன்பத்தையும் அவளது அசாதாரண மாற்றத்தையும் 12 வயதிலே புரிந்து கொள்கிறான்.

சிறுவனின் பழிவாங்குதல் என்னும் செயற்பாடானது(தேநீரீல் எச்சில் துப்பி கொடுத்தல்,அவதூறு பேசும் பெண்களின் கைப்பையில் சிறுநீர் கழித்தல்) சிரிப்பை மூட்டினாலும் மலேனாமீது கொண்ட அன்பையும் சமூகத்தவரின் மீது கொண்ட வெறுப்பையும் இலகுவாகவே வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆண்கள் வயதுக்கு வருதல்,மற்றும் பிற செயற்பாடுகள் அனைத்தும் ஆண் உடல் மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது.சில இடங்களில் ஆண்களுக்கு சிரிப்புக்கூட வந்திருக்கலாம்;ஆனால் வெட்கப்பட வாய்ப்பே இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

சிறுவனின் தந்தையின் செயற்பாடு சில சமயம் கோபமூட்டினாலும் மகனைப்பற்றிய உடலியல் ரீதியான,உளவியல் ரீதியான புரிந்துணர்வு ஒவ்வொரு தந்தைக்குள்ளும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று கூற தோன்றியது.பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் மகனை தந்தை ஒப்படைத்து 'இந்த சிறுவனை வாலிபனாக்கி கொடுங்கள்' என்பதில் உடலியல் தேவை அந்தந்த வயதில் தீர்க்காவிட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களை உடலும் உள்ளமும் சந்தித்திருக்கும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது.ஒரு புறம் இச்செயற்பாடு பாலியல் தொழிலை ஆதரிப்பது போல தோன்றினாலும் காலங்காலமாக ஏன் பாலியல் தொழில் முற்றாக தடை செய்யப்படவில்லை? இன்னும் பல நாடுகளில் அரசாங்க அனுமதியுடனேயே ஏன் நடாத்தப்படுகின்றன?போன்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளதால் பாலியல் தொழில் பற்றி விவாதிக்கத்தோன்றவில்லை.

வழக்கமான என் கேள்வி ஒன்றையும் முன்வைத்து விடுகிறேன்.இதே இடத்தில் ஒரு பெண் பருவ வயதை அடைந்து உடலியல் உளவியல் ரீதியாக சிக்கல் கொண்டால் இதை ஒரு தாய் அல்லது தந்தை எவ்வாறு முகம் கொடுத்து இருப்பார்களோ ? திருமணம் ஒன்றே இதற்கான தீர்வாக இருந்திருக்கும்.பதிலில் கூட எந்த மாற்றமும் இல்லை.


தமிழ் சினிமாவில் வருவது போல அந்த அழகிக்கான ஏதும் தனிப்பட்ட கவர்ச்சிக்காட்சிகள் இருக்குமா என்று சிலர் ஏங்கி தவித்து இருக்கலாம்.இல்லவே இல்லை.சமூகப்பார்வையில் இருந்து விலக்கி சிறுவனது கண்வழியே மட்டுமே பார்வையாளர்களுக்கு மலேனாவின் வாழ்வியலைப் புரிய வைத்துப் பார்க்கச்செய்து இருக்கிறார் இயக்குநர்(Giuseppe Tomatore).இப்படி ஒரு பார்வை வழி நம் சமூகத்திற்கு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே! அது தனிமையில் வாழும் பெண்ணாக இருந்தாலும் சரி,கணவனை இழந்த அல்லது கைவிட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.இந்த திரைப்படத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா இந்த சமூகத்தையும்
பெண்ணையும் புரிந்து கொள்ளப்போகிறார்கள்??.

திரைப்படம்- Malena,(2000),Italy
இயக்குனர்-Giuseppe Tomatore

- அத்தியா -

Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, January 17, 2017

Memories Of A Machine (மனிதனின் பாலியல் நடத்தைச்சிக்கல்கள்)

"மனிதனுடைய பாலியல் நடத்தை இவ்வளவு
சிக்கலானதா ?"

சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் வயது வந்த ஒரு பெண் அவளது பெற்றோர் பார்வைக்கு வந்தால் உடனடியாக அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையாக எது இருக்கும்? திருமணம்??

இதுவே ஒரு ஆண் சுயஇன்பம் அனுபவிப்பதனை பெற்றோர் பார்வையில் மட்டுமல்ல சமூகப்பார்வையில் கூட தவறாக தெரியாது இல்லையா?

சம வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் முதன் முதலில் காதல் வயப்பட்ட நிலையில் நேரில் சந்தித்து உடலியல் ரீதியாக ஸ்பரிசித்துக்கொள்கையில் அந்த பெண் தன் பாலியல் விருப்பங்களை வெளிப்பட கூறுகையில் அந்த ஆணிடம் இருந்து வெளிப்படும் வெறுப்பு நிலை,அந்தப்பெண்ணை காமவெறி கொண்ட அருவெறுப்பானவளாக நினைத்து அவளை அவமானப்படுத்திவிட வைக்கிறது,இதனையே அந்த ஆண்தன்பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்தினால் ஒரு சாதாரணமான ஒரு விடயம் இல்லையா?

பாலியல் கல்வி பாடசாலைகளில் கட்டாயமான ஒரு பாடமாக நிறுவாமல் பின்வாங்க காரணம் என்னவாக இருக்கும்?

மேலே உள்ள கேள்விகள் தோன்ற காரணமாக ஒன்பது நிமிடத்தை கொண்ட,ஒரேயொரு கதாபாத்திரம் நடித்திருக்கும் ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட் ட ஒரு குறுந்திரைப்படம் காரணம் என்றால் நம்ப முடியுமா? யூடியூப் வலைத்தளத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகவும் பல்வேறு சர்ச்சைகளையும்,பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள ஒரு குறுந்திரைப்படம் "Memories of a Machine". இந்த திரைப்படத்தின் முன் பின்னால் காண்பிக்கப்படும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் பெயர்களை நீக்கிவிட்டு இதனை வெறுமனே காணொளி போல பார்க்க நேருமாயின் நான்கூட பின்வருமாறு கூறியிருப்பேன் என்று நினைக்கிறேன்."இது கணவன் மனைவி இருவருக்கிடையில் நிகழும் அந்தரங்க உரையாடலை கணவன் கேமராவில் பதிவு செய்து மனைவிக்குத்தெரியாமல் வேண்டும் என்றே பதிவிட்டான் ."அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பை கொண்டுவந்துள்ளார் இயக்குநர் Shailaja Padindala.இயக்குனரை மிகச்சரியாகப்புரிந்து கொண்டவர் மலையாள நடிகை KaniKusrutiயை கூறலாம்.மொத்தப்படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் அந்த நடிகை கதை சொல்லும்போது point of view இல் நாமே கதையை கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றது.இது கேமரா மேன் Sandeep.PS இன் திறன் என்றே கூறலாம்.


இக்குறுந்திரைப்படமானது,திருமணமான ஒரு பெண் தன் கணவனிடம் ' எவ்வாறு தான் முதல் முதலில் பாலியல் இன்பத்தை அனுபவித்தார் அல்லது பாலியலைப் புரிந்து கொண்டார் ? என்பது குறித்த கதையே இது.இத்திரைப்படத்தில் கதாநாயகி தான் 8 வயதாக இருக்கும் போது,தன்னை வயது வந்த வேலையாள் தொட்டது பற்றி எவ்வித பதட்டமும் இன்றி சாதாரணமாக பேசுகிறார்.இந்த சம்பவம் பாலியல் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் சிறுவர்மீதான பாலியல் இச்சை கொண்டவர்கள் மீது கடினமற்றதன்மையை உருவாக்கி இருப்பதாகவும் பல்வேறு பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.இதைப்பற்றி இயக்குநரிடம் வினவயில் அவர்கூறும் பதில் நானும் ஒரு பெண் என்ற வகையில் பெண்கள் ,சிறுவர்பாலியல் வன்முறைக்கு நானும் எதிரியே.மேலும் அது தொடர்பான எந்தவிதமான கற்பனைகளையும் உருவாக்கும் உத்தேசமும் இல்லை."ஒரு சிறுமி பாலியல் தொடர்பான சமூக விதிமுறை மற்றும் கலாச்சார விழுமியங்களை குடும்பத்திலிருந்து அறிந்து அதனை எதிர்கொள்ள முன்னர்,அந்தச்சிறுமியின் உணர்வு எவ்வாறு இருக்கும்? என்பதை சித்தரிக்கும் முயற்சியே" இத்திரைப்படம்.

நான் இவ்விடத்தில் ஒரு வினாவை முன்வைக்கிறேன்,நீங்கள் பார்க்கும் திரைப்படங்களை பின்பற்றவேண்டும் என்ற கோட்ப்பாடு எங்காவது உங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளதா? திரைப்படங்களை புரிந்து கொள்ள தெரியாதவர்கள் யாருக்கு சாதகம் பாதகம் பார்த்து விமர்சிக்கின்றனர் என்றுதான் எனக்கு புரியவில்லை.என்னைப்பொறுத்தவரையில் இங்கே இயக்குநர்Shailaja Padindala என்ன விடயத்தை சொல்ல நினைத்தாரோ அதை மட்டுமே தெளிவுற கூறி இருக்கிறார்.மேலும்,"ஒரு பண்பட்ட சமூகத்தில் எதனைப் பேச வேண்டும்?,எதனைப்பற்றி உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்? என்று காலங்காலமாக சமூகத்தில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளதோ அதற்கு சற்று புறம்பாக சில கேள்விகளை மறைமுகமாக எழுப்பி ஒரு சிறிய புரட்சியை உருவாக்கி சிந்திக்க வைத்துள்ளார்.

இன்றய உலகில் மனிதர்கள் உண்மையாகவும் யதார்த்தமாகவும் இருப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.சில விடயங்கள் பற்றி சிலருக்கு தெளிவு இருக்கும் போது அதனுடைய தாக்கத்தை சகித்துக்கொள்வது சமூகத்திற்கு கடினமானதாகவே உள்ளது.ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி இலகுவாக வெளிப்படுத்த முயற்சிக்கும் இந்த படத்தை சுற்றி ஏன் பெருவாரியான பதற்ற நிலை காணப்படுகிறது??

இந்த இடத்தில் சமூகத்தவர்களின்,பார்வையாளர்களின் சிக்கல் என்னவென்றால்,அந்தப்பெண் பாதிக்கப்பட்ட அல்லது வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் பேசுவது போல வெறுப்படைந்து,அழுதுகொண்டு,ஆவேசம் கொண்டு பேசவில்லை.மாறாக சுய இன்பம் காணுதல் பற்றி ஒளிவு மறைவின்றி நகைச்சுவையாக பேசுகிறாள்.இங்கு சமூக மக்கள் ஏன் கிளர்ச்சிக்குள்ளாகி கோபம் கொள்கின்றனர் என்றால்,வெவ்வேறு நபர்களுடன்,விடயங்களுடன்,தங்களது நடைமுறை வாழ்வுடன் இணைத்துப்பார்த்து கூச்சமும் அருவருப்பும் கொள்கின்றனர்.இங்கு மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இது சரி பிழை என்ற விவாதத்திற்குரிய விடயம் அல்ல.இது வெளிப்படையாக கூறப்பட்டுள்ள உண்மையின் நிழல்களாகவே உள்ளது.மேலும் இது (pedophile) குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான இச்சையை நியாயப்படுத்தும் ஒரு படமும் அல்ல. என்னை பொறுத்தமட்டில் "இது மனிதனுடைய பாலியல் நடத்தை எவ்வளவு சிக்கலானது என்பது பற்றி புரிந்து கொள்வதாகும்"

மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.ஒவ்வொருவரது அனுபவமும் அதனை அவர்கள் கூறுகின்ற விதமும் யாரையும் தாழ்த்தி விடாது.பிறரின் பார்வையில் நாம் யாரென்பதில் எந்த நிஜமும் இல்லை.அப்படி இருப்பதற்காக சுய விருப்பங்களை மறைத்து போலியான வேஷங்களைப் போட்டுக்கொண்டு நாம் சாதித்து விட போவது ஒன்றும் இல்லை.

இன்னும் ஒரு முறை இயக்குநர் Shailaja Padindala வின் தெளிவினையும் தைரியத்தையும் மலையாள நடிகை Kani Kusruti யின் இயலப்பான யதார்த்தமான நடிப்பையும் கேமரா மேன் Sandeep.PS ஐயும் பாராட்டிடாமல் இருக்க முடியவில்லை.


- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

"அவள் அப்படித்தான்" (ருத்ரைய்யா எனும் தமிழ் சினிமா இயக்குனர்)

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான பல்வேறு விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டு தமிழ்ரசிகர்களை ஆட்டம் காண வைத்து  இன்று கூட விடை காண முடியாத ஒரு யதார்த்தமான,புதுமையான படைப்பே சி.ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்"திரைப்படம்.ஒற்றைத்திரைப்படத்துக்காக,தமிழ் சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களில் விமர்சகர்களாலும் நல்ல படைப்பை எதிர்பார்ப்பவர்களாலும் இன்று வரை நினைவுகூர வைத்த பெருமை சி.ருத்ரய்யா அவர்களையே சாரும்.


1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கறுப்பு வெள்ளையில் வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் படைப்பு என்றே கூறலாம்.இத்திரைப்படம் எழுந்த காலகட்டத்தையும் பின்னணியையும் வைத்து நோக்கும் போது இத்திரைப்படத்திலுள்ள குறைகளையும் போதாமைகளையும் தாண்டி இது ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் எவரும் சந்தேகிக்க இயலாது.


இத்திரைப்படத்தில் அந்தக்காலத்திலேயே மிகவும் புகழப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்று நட்ச்சத்திரங்களான ரஜனிகாந்த்,கமலஹாசன்,ஸ்ரீப்ரியாவைக்கொண்டு உருவாக்கப்பட்டது.அந்த வகையில் மஞ்சு (ஸ்ரீப்ரியா) எனப்படும் கதாப்பாத்திரம்தான் பிரத்தியேகமான தனித்தன்மையுடன் தமிழ் சினிமாவில் யதார்த்தமாக  உருவாக்கப்பட்ட முதல் பெண் கதாநாயகி என்று கூறலாம்.அதுவரைகாலமும் கவர்ச்சி பொம்மையாக நடிக்கப்பயன்படுத்தப்பட்ட  ஸ்ரீப்ரியா எனும் நடிகையின் இயல்பான,திறமையான நடிப்பை இப்படத்திற்கு முன்னும் பின்னும் எவரும் முழுமையாக பயன்படுத்தவில்லை.இதிலிருந்தே சி.ருத்ரய்யா அவர்களின் கதாபாத்திரங்களைக் கையாளும் திறனைக்கண்டு கொள்ள முடியும்.


அவள் அப்படித்தான் திரைக்கதையை நோக்கினால்,மஞ்சு எனப்படுகின்ற ஒரு பெண், தாயின் தவறான ஆண்களுடனான பாலியல் தொடர்புகளைக்கண்டும்,ஆண்களின் தொடர்ச்சியான ஆணாதிக்கம் மற்றும் கயமைத்தனங்களால் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டும், சமூகத்தில் உள்ள ஆண்களின் மீதும், குடும்ப உறவுகளின் மீதும் நம்பிக்கையற்ற தன்மை,வெறுப்புணர்ச்சி மேலோங்கி  காணப்படுகின்ற ஒரு புரிந்து கொள்ள முடியாத  இயல்பானவளின் வாழ்க்கை கதை என்றே கூறலாம்.சுருக்கமாக கூறின் படத்தின் மையக்கரு மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடே.நம்பிக்கைதான் உண்மை நிலையை உருவாக்குகின்றது என்பதற்கிணங்க ஒரு உறவின் மீது நம்பிக்கை ஏற்படும் போது அவள் பிறக்கிறாள்;மேலும் அதே நம்பிக்கை ஏமாற்றப்பட்டு உடைந்து போகும் போது அவள் இறக்கிறாள் இதனையே ஒரு கவியாக படத்தின் இறுதியில் கூறப்படுகிறது "அவள் பிறப்பாள் இறப்பாள்,இறப்பாள் பிறப்பாள் அவள் அப்படித்தான்"எனும் இறுதி வரியுடன் படம் முற்றுப்பெறுகிறது.




இப்படத்தின் சிறப்பம்சங்களை சொல்லப்போனால்,கமல்ஹாசன், ரஜனி இருவரும் அக்காலகடடத்தில் பிரபல்யமான கதாபாத்திரமாக இருந்த போதும் படத்தின் கதையின் தன்மை உணர்ந்து  எந்த ஒரு நிலையிலும் தங்களது சுய ஆதிக்கம் வெளிப்படாமல் யதார்த்தமாக
​நடித்துள்ளனர்.

ரஜனி-யதார்த்தமான ஆண்களின் நிலையை விளக்குவதாகவும் பழமையில் இருந்து மாறாத ஒரு ஆணாகவும் பெண்களை ரசிக்கும் ஆராதிக்கும் ஆணாக இருந்தாலும்கூட  வன்முறையில் பெண்ணை அடைய விரும்பாத ஒரு சாதாரண ஆண்.

கமல்-பெண்களுக்கு சார்பாக,பெண் விடுதலைக்காக முயற்சிக்கும் ஆவணப்படங்களை உருவாக்கும் ஒரு புதுமையான நபர்.மஞ்சுவின் வித்தியாசங்களால் கவரப்படடவர். இவ்வாறாக திரைப்படக்கதாபாத்திரங்கள் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் பதிலடி கொடுக்கும் வகையில் வித்தியாசமான வசனங்கள்,நுனி நாக்கில் ஆங்கிலம்,அதுவும் பச்சையாக,தமிழில் கூட பச்சையாக வார்த்தைப்பிரயோகம்,இசைஞ்ஞானி இளையராஜாவின் இசை இவ்வாறானவற்றை உள்ளடக்கி இத்திரைப்படம் அமைந்துள்ளது

இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்ணியம்,பெண்சுதந்திரம்,ஆணாதிக்கம்,சமூக கண்ணோட்டம்,பெண் பற்றிய சமூக விமர்சனங்களைப்பற்றியும் திடீர் திடீர் என யதார்த்தமாக பேசி விடுகிறது.அவற்றில் சிலவற்றை அடையாளப்படுத்தலாம்.பெண்கள் வேலைக்குச்செல்லல்,முஸ்லீம் பெண்களின் ஆடை நிலை,குடும்பக்கட்டுப்பாடு,திருமணத்திற்கு முன் உடலுறவு,கருக்கலைப்பு ,பெண்கள் கல்வி நிலை,ஆண்கள் பல திருமணம் முடித்தல்,பெண்களின் ஆடை நிலை,நடிகைகள் பற்றிய சமூகத்தின் நிலை.

"அவள் அப்படித்தான" திரைப்படத்துக்கு முதலில் அங்கீகாரமே கிடைக்கவில்லையாம்.தமிழ் திரையுலமும் ரசிகர்களும் எப்போதுமே திறமை சாலிகளை எப்போதுமே அடையாளம் கண்டு கொள்ள மாடடார்கள் என்பதற்கு இப்படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா ஒரு எடுத்துக்காட்டு.ருத்ரைய்யாவின் கதையை கேட்டு அவரது திறமையை புரிந்து கொண்ட கமலஹாசன்,அவரே முழுவதும் பொறுப்பெடுத்து முன்னின்று ரஜனிகாந்த்,ஸ்ரீப்ரியா,இளையராஜா ஆகியோரைத்தெரிவு செய்து படத்தில் பணி புரிய வைத்துள்ளார்.எப்போதெல்லாம் ஓய்வாக இருப்பார்களோ அந்த சந்தர்ப்பங்களில் படப்பிடிப்புகள் நடை பெற்றது.கமலஹாசன் வீடு,ஸ்ரீப்ரியா வீடு,தயாரிப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே படப்பிடிப்புகள் நடை பெற்றன.இப்படக்கூட்டணி நடித்த "இளமை ஊஞ்சலாடுது" திரைப்படம் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றதனால் இப்படமும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.படம் முடிந்து தியேட்டரில் திரையிட்ட போது ரசிகர்கள் பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டு ரகளை செய்திருக்கிறார்கள்.படத்தை தியேட்டரை விட்டே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.படத்திற்கு மார்க் போடும் கூட்டம் கூட குறைவான மார்க்குகளைப்போட்டு படத்தை புறக்கணித்ததாம்.இது இவ்வாறிருக்க இந்திய திரை உலகின் மேதைகளுள் ஒருவரான "மிருணாள்சென்"ஒரு வேலையாக சென்னை வந்தபோது யதேர்ச்சையாக அவள் அப்படித்தான் படம் பார்த்திருக்கிறார்.இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன் அவரே பத்திரிகையாளர்களை அழைத்து படத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் கூறியிருக்கிறார்.அதன் பின்னர்தான் பத்திரிகைகளும் அவற்றைப்பாராட்டி வெளியிட்ட பின்னர் படம் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன்  ஓட ஆரம்பித்தது.இந்தியாவின் பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடியுள்ளது.ஒரு சிறந்த தமிழ் இயக்குனர் திறமை பற்றி எங்கிருந்தோ வந்த ஒருவர் கூறித்தான் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அதே நிலைதான் தற்காலத்திலும் தொடர்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 




ருத்ரைய்யா அவர்களின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயம்"சரியாக பேசப்படவில்லை என்றாலும் அவரின் ஒரே ஒரு படைப்பே போதும் தமிழ் திரையுலகம் அவரது படைப்பை  காலங்காலமாக போற்றி துதி பாடிட. 

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |