Saturday, April 15, 2017

திரைப்பட பிரியர்கள்,கலை விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் (பாலுமகேந்திரா வின் "வீடு")

"வீடொன்றை கட்டிப்பாரு;கல்யாணம் ஒன்றை பண்ணிப்பாரு" எங்க ஊர் வழக்கில் இப்படி ஒரு பழமொழியை சிலர் கூற கேள்விப்பட்டதுண்டு.ஏன் இப்படி ஒரு ஒரு பழமொழி உருவானது? என்று இயக்குனர் பாலு மகேந்திராவின் "வீடு" திரைப்படம் எனக்கு பதில் சொன்னது.திருமண நிகழ்வும் சரி,சொந்த வீடு சமாச்சாரமும் சரி,இரண்டுமே நடுத்தர வர்க்கத்தினருக்கு இலகுவான காரியம் அல்ல.சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது பலரின் கனவு.ஆனால் இறுதி வரை கனவாகவே இருப்பதுதான் உலகின் நியதியாக உள்ளது.

மனுஷ்ய புத்திரன் வீடு வாடகைக்கு தேடி அலைந்த சம்பவமாக இருக்கட்டும்,சாரு நிவேதிதா கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து அடையாள அட்டைக்காக காத்திருந்து வீடு மாறிய சமயம் அடையாள அட்டை கிடைத்தும் பயனற்ற சம்பவமாக இருக்கட்டும்.புகழ்பெற்ற இலக்கியவாதிகள் கூட சொந்த வீடின்றி அலைந்து பல இன்னல்களை எதிர்நோக்கிய வரலாறுகள் உண்டு.எழுத்து சோறு போடும் வீதம் குறைவுதானே?


நடுத்தரவர்க்க வேலைக்குச்செல்லும் பெண்,தனக்கு வருகின்ற சாதாரண வருமானத்தை கொண்டு சொந்தமாக ஒரு வீடை கட்ட எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அழகாகவும் செயற்கைத்திணிப்புகள் இல்லாமலும் வெளிப்படுத்தி இருக்கும் திரைப்படமே "வீடு".
"உலகெங்கிலும் உள்ள வீடற்றவர்களுக்கு சமர்ப்பணம்" என்னும் வாசகத்துடன் திரைப்படம் ஆரம்பிக்கும்.


"கறுப்பழகி" அர்ச்சனாவுக்காகவே  இந்த திரைப்படத்தைப்பார்த்தேன்.இறுதியில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ரசிகையாகவே மாறிவிட்டேன்.அவ்வளவு யதார்த்தத்தை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களில் இருந்தும் வெளிப்படுத்தி இருப்பார்.

பாலு மகேந்திரா பற்றிய அறிமுகம் என்னிடம் ஐந்து வருடங்களின் முன்னரில் இருந்து அவர் இலங்கையின் மட்டக்களப்பை சேர்ந்தவர்,ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமே இருந்தது.பின்னர் அவரது ஒவ்வொரு படைப்பையும் அணுகும் போது தமிழ் சினிமாவில் பாரிய மாற்றத்தை நிகழ்த்திச்சென்றவர் என்பது புரிய வந்தது. இத்திரைப்படத்தில் "செயற்கைத்தனம்" என்னும் பேச்சுக்கே இடமில்லை.ஒளியமைப்பு முழுவதுமே இயற்கை ஒளியமைப்பினாலானது.1980 களில் சென்னை நகர சூழலையும்,அப்பிரதேச மக்களின் வாழ்வியலையும் கண்முன் கொண்டுவந்தது.மழைக் கால காட்சியமைப்பில் கூட ஒரு சிறு சறுக்கலும் நிகழவில்லை.கவனமற்ற அரச ஊழியர்கள் கையாலாகாத தனத்தை இறுதிக்காட்சியில் வைத்து பார்வையாளர்களை சிந்திக்கவைத்தவாறே நகரச்செய்து இருப்பார். 

இடையில் என்னை மிகவும் கவர்ந்த பல சம்பவங்கள் உண்டு.அதிலும் அர்ச்சனாவுக்கு துணையாக நிற்கும் "மங்கா" கதாப்பாத்திரத்தின் சரவெடியான சென்னை தமிழ்பேச்சில் வீடு காண்ட்ரேக்டரை வறுத்து எடுப்பார்.முகபாவனை முதற்கொண்டு அத்தனையும் பொருத்தமாக இருக்கும்.

இந்தப்படம் எடுப்பதற்காகவே கட்டிய வீடு இடையில் நிறுத்தப்பட்டு,பின்னர் அது முழுமையாக முடிக்கப்பட்டு தற்போது இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறையாக இருப்பதாக அறியக் கிடைத்தது.பல யதார்த்தங்களை அழகியலுடன் காட்சிப்படுத்தி இருப்பார்.இங்கு சினிமாத்துறையில் பலருக்கு "சினிமா அழகியல் என்றால் என்ன?" என்றே தெரிவதில்லை.இன்னும் சிலர் காட்சி மொழி என்பது அழகாக காட்டுவதை மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டும் திரிகின்றனர்.ஆனால் உண்மையில் காட்சி மொழிதான் கதையை நகர்த்திக்கொண்டு செல்லும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

பணத்திற்கு அவசியமான நேரத்தில்,அன்பாய் தரும் பட்டுச் சேலை பரிசு கூட அனாவசியம் என கோபித்துக் கொள்ளும் அர்ச்சனா,பின்னர் அதே சேலையை அணிந்து கொண்டு, பானுசந்தரை பார்க்க அவர் வீட்டிற்கு போய், அவரை சமாதானம் செய்யும் இடம் அழகு.


முப்பது வருடங்களுக்கு முன், சென்னையில் விலைவாசி விவரங்கள் என்னவெனஅறிந்து கொள்ள முடிகிறது.

இரு படுக்கையறை வசதிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை 800/-
வளசரவாக்கத்தில் ஒரு கிரவுண்ட் விலை 40000 வருங்காலத்தில் குடி தண்ணீர் விற்பனை பிரதானமாய் இருக்கும், என அன்றே சொல்லி இருக்கிறார்கள். முப்பது வருடத்திற்கு முன், அந்தக் காட்சியை எவராவது நகைத்தபடி கடந்திருக்ககூடும்..

இறுதியாக அந்த வீட்டை பார்த்துவிட சொக்கலிங்க பாகவதர் வருவார். கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டின் முன் நின்று,பிறகு உள்ளே நுழையும் முன் தான் போட்டிருக்கும் செருப்பை கழற்றி விட்டு உள்ளே செல்வார். இது வழக்கமான ஒரு செயல்தான் என்றாலும், அந்த ப்ரேம் இன் அற்புத கலாச்சார துணிபு. நமது திரைப்படங்கள் இவ்வளவு நுட்பங்களைக் கடத்துகிறதா அல்லது பயன்படுத்திக் கொள்கிறதா என்பது சந்தேகமே. பாலும்கேந்திரா வெல்ல முடியாத ஓர் எளிமைக் கலைஞன்.

இந்த திரைப்படத்தின் பொருத்தமான பின்னணி இசை (BGM) பெரும் பலம்.இளையராஜாவின் இசை ஞானத்தை இதில் பரவலாக காணலாம்.படத்தின் காட்சிகளை ரசிகனுக்கு மிகச் சிறப்பாய் கடத்திவிடுகிறது."How to name it" ஆல்பம், இதற்கு முன் தனியாய் கேட்டிருந்தாலும், படம் பார்க்கும் போது தான் அதனை முழுமையாக உணர முடியும்  ராஜா - என்றென்றும் ராஜா தான்.

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |