Saturday, February 11, 2017

" Fifty Shades Of Gery" ("சுயத்தை தொலைக்கும் கண்மூடித்தனமான பின்பற்றல்கள்")

"சுயத்தை தொலைக்கும் கண்மூடித்தனமான பின்பற்றல்கள்"




உலக நாடுகளிலே செக்ஸ் (sex) எனும் வார்த்தையை கூகுளில் தேடுவதில் இலங்கை தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டதாம்.இந்தியா ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதாம்.இதற்கிடையில் உள்ள நாடுகள் பற்றியும் புள்ளி விபரங்கள் பற்றியும் நீங்களே கூகுளில் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.செக்ஸ் என்னும் வார்த்தையை தேடிப்பார்ப்பவர்களுக்கு இந்த புள்ளி விபரங்களைத்தேடிப்பார்ப்பதும் ஒரு வித இன்பமாக இருக்கலாம்.இந்த புள்ளி விபரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு நாடுகளையும் நாட்டு மக்களையும் தரக்குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம் என்று நினைக்கின்றேன்.இது பாலுணர்வு பற்றிய அறிவுக்காகவும் தெளிவின்மைக்காகவும் கூட தேடி இருக்கலாம்.பாலியல் கற்கை நெறிகளை மேற்கொள்ளும் மாணவர்கள் கூட தேடி இருக்கலாம்.எந்த ஒரு நபரையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யக்கூடாது,பாலியல் வன்முறையில் ஈடு பட கூடாது என்று நினைக்கும் நபர்கள் தாங்கள் சுய இன்பம் அடைந்து கொள்வதற்காக கூட தேடி இருக்கலாம்.வேலைப்பளு,மனஉளைச்சலில் உள்ளவர்கள் தங்கள் சிந்தனையை திசை திருப்ப இவ்வாறான விடயங்களை தேடிப்பார்த்திருக்கலாம்.பாலியல் உணர்வு நாட்டமற்றவர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத்தூண்டிக்கொண்டு தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதற்காக தேடிப்பார்த்திருக்கலாம்.இங்கு நான் கூறிய காரணங்கள் அனைத்தும் என் கற்பனையில் விளைந்த ஒன்றல்ல என்பது உங்கள் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி.சிலருக்கு என்ன "இந்த பொண்ணு எப்ப பார்த்தாலும் பாலியல் சார்ந்த விடயங்களைப் பற்றியே உரையாட முன் வருகிறாள்?" என்று என் மீது கோபம் கூட எழலாம்.சிலருக்கு இந்த இடத்தில் எதற்காக இப்படி ஒரு விடயத்தை நான் முன்வைத்திருக்கிறேன்? என்ற கேள்விகளும் எழலாம். என்னிடம் உங்களுக்கான பதில்களை எதிர்பார்க்க வேண்டாம்.உங்களுக்கான கேள்விகளை நான் தயார் செய்து தருவேன்.முடிந்தால் விடைகளைத்தேடிக்கொள்ளுங்கள்.
நம் சமூகத்தில் காணும் ஒரு கவனிக்கப்படாத பிரச்சனையாக "பின்பற்றல்" என்னும் விடயத்தை நான் காண்கிறேன்.நீங்கள் கண்டிருப்பீர்களோ தெரியவில்லை.




18ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதி "ரொமாண்டிக் யுகம்" எனப்பட்டது.இக்கால கட்டத்தில்தான் "உணர்தல், கற்பனை,அனுபவம் ,ஏக்கம்" போன்ற விடயங்களை முன்னிறுத்தி இலக்கியங்கள் எழுந்தன.1774இல் ஜேர்மன் கவிஞர் "கதே"யின் 'இளம் வேர்தரின் துயரங்கள்' என்னும் நாவல் வெளியானது.இதன்போது இந்நாவலைப்படித்த பலர் தற்கொலை செய்து கொண்டனர்.காரணம் இந்நாவலில் வரும் கதாநாயகன் "வேர்தர்" காதல் தோல்வியின் காரணமாக தன்னைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.காதல்,காதல்தோல்வி,கிடைக்காத காதலின் மீதான ஏக்கம்,என்று நீண்டு செல்லும் இந்நாவல் பலரைத்தற்கொலை செய்யத்தூண்டியதால் தடை செய்யப்பட்டதாம்.

இங்கு என்ன நிகழ்ந்துள்ளது? என்று சற்று சிந்தித்து பார்த்தால் உங்களுக்கே புரியும்.நிச்சயமாக "பின்பற்றல்" ஒன்று தான் நிகழ்ந்துள்ளது.அவன் காதலித்து தற்கொலை செய்து கொண்டால் நீயும் காதலித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா என்ன?? நாவலே இவ்வளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றதென்றால் இன்றய காலகட்டத்தை சற்று சிந்து பார்த்தாலே போதும்.பின்பற்றல்கள் எவ்வளவு தூரம் மனிதனை ஆக்கிரமித்துச்செல்கின்றன என்பதை அறிந்து கொள்ள.
இன்றய சினிமாக்களையும் அவ்வாறே மக்கள் பின்பற்றும் நிலையே பாரிய அளவில் காணப்படுகிறது.இல்லை நாங்கள் சினிமாக்களை ஒரு பொழுது போக்கிற்காகத்தான் பார்க்கின்றோம் என்று சொல்பவர்கள் இருக்கட்டும்.இருந்தாலும் நிச்சயமாக அதிலும் மறைமுகமான பின்பற்றல்கள் உள்ளன.காதல்,ரொமான்டிக் சினிமாக்கள் மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது.இப்படித்தான் காதலிக்கணும் ,அதுதான் லவ்,இப்படித்தான் வாழனும்,இந்தமாதிரியான விடயங்களை அதிகமாகவே மனிதன் பின்பற்றக்கூடியவனாக இருக்கிறான்."காதல் ஒரு தடவை தான் வரும்,(F)பஸ்ட் லவ் ஜெஸ்ஸி;அவ்வளவு சீக்கிரம் போகாது"இந்த மாதிரியான வசனங்களைக்கூட தன்னகத்தே வைத்துக்கொண்டு காதல் என்ற வார்த்தைக்குள் அவதியுறும் ஆண்களும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இது போக இன்னும் பலவித பின்பற்றல்கள் உண்டு.அதை எல்லாம் விளக்கிக்கொண்டிருக்கத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.




சரி.இப்போது ஒன்று கேட்கிறேன்.எத்தனை பேர் ஆபாச திரைப்படங்களைப் பார்த்துவிட்டு தனது மனைவியுடனோ கணவனுடனோ அதனைப்பின்பற்ற முயற்சிகள் மேற்கொள்கின்றனர்?(இன்று அதிகமான ஆண் பெண்களின் கைகளிலும் நவீன கையடக்க தோலை பேசி அல்லது மடிக்கணினி உண்டு) இந்தபின்பற்றல்கள் எவ்வாறான விபரீதங்களை தன்னிலை சார்ந்து உளவியல் உடலியல் ரீதியில் கொண்டு வருகின்றன?

எவ்வாறான தாக்கங்களை குடும்பத்திலும் சமுகத்தில் பிரதிபலிக்கின்றன?
கேள்விகளுக்கான விடைகளை சிந்தித்துக்கொண்டே இருங்கள்.

இன்னும் சில உங்கள் பார்வைக்கு தென்பட்டும் வெளிப்படுத்தப்படாத உண்மைகளை கூறிவிட்டுச்செல்கிறேன்.சொந்த வீட்டில் தந்தையால்,சகோதரனால் அல்லது நெருங்கிய உறவினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.எப்படி இவ்வாறான சிந்தனைகள் மனிதர்களின் மனங்களில் தோற்றுவிக்கப்படுகின்றன என்பது பற்றி நீங்கள் சிந்தித்துப்பார்த்ததுண்டா? நிச்சயமாக இதில் பெரும்பாலானவை ஆபாச திரைப்படங்களைப் பார்த்து இவற்றின் பின்பற்றல்களால் நிகழ்த்தப்படுவதே.ஆபாச திரைப்படங்களின் வகைப்படுத்தல்களில் 'தாய் மகனுடனான பாலுறவு,தந்தை மகளுடனான பாலுறவு ,சகோதரன் சகோதரியுடனான பாலுறவு'.. என்றவாறு நீண்டு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கும் தெரிந்த ஒன்றே. இந்த ஆபாச சினிமாக்களின் வகைப்படுத்தல்கள் நிச்சயமாக மனிதனின் உளவியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இதன் பிரதிபலனாகவே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்,பெண்கள்,ஆண்கள் வன்புணர்வு சமூகத்தில் அதிகரித்து காணப்படுகிறது என்று நான் அடித்துக்கூறுவேன்.என்னடா இது.ஆண்கள் எங்கே வன்புணர்வுக்குட்படுத்தப்படுகின்றனர்? என்ற கேள்விகளை பெண்கள் இவ்விடத்தில் எழுப்பலாம்.ஆனால் நிச்சயமாக ஆண்கள் அப்படி ஒரு கேள்வியை எழுப்பமாடார்கள் என்று நினைக்கிறேன்.ஆண் சிறுவர்கள் அதிகமாக ஆண்களால் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர்.இது ஆண்கள் தங்கும் விடுதிகளில்,சிறைச்சாலைகளில்,இன்னும் பல இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.ஆனால் அது பரவலாக எங்கும் பேசப்படுவது இல்லை.அதற்காக எந்தப் பெண்ணும் சரி.ஆணும் சரி கோடி தூக்கிப் போராட முன்வருவதுமில்லை.அது ஒரு புறமிருக்கட்டும்.ஒரு சிலவயது வந்த பெண்களும் சிறு வயது ஆண்களை துஸ்பிரயோகம் செய்கின்றனர்.ஆனால் இந்த நிகழ்வுகள் கூட பெரிய அளவில் வெளிப்படுத்தப்படுவதில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு ஆண் நிச்சயமாக கொண்டாட்டமாகத்தான் கருதுவான்.பெண்களைப்போல கண்களைக்கசக்கிக்கொண்டு நிற்கமாட்டான்.இது வேறு வகையான ஆண்களுக்கான சமூக கற்பிதம் என்றே நான் கூறுவேன்.


இப்போது சமூகத்தில் பெரும்பாலோரை ஈர்த்து அதிகமான வரவேற்பைப்பெற்றதுடன் மட்டுமல்லாது பல்வேறு பட்ட சமூக விமர்சனங்களையும் கண்டனங்களையும் பெற்றுக்கொண்ட 'ஒரு வன்மமானகாமத்துக்கும் மென்மையான காதலுக்கும் இடையிலான உறவுச்சிக்கல்களை வெளிப்படுத்தும் திரைப்படம்' பற்றி சில கேள்விகளையும் புரிதல்களையும் ஏற்படுத்திவிடலாமென நினைக்கிறேன்.

2015ஆம் ஆண்டு வெளியான "பிப்டி ஷேட்ஸ் ஒப் க்ரே"(Fifty Shades of Grey).இந்த திரைப்படம் அதிகமானவர்கள் பார்த்திருக்க கூடும்என நினைக்கிறேன்.இது 2011 இல் E.L.M James எனும் பெண் எழுதிய மிகப்பிரபலமாக பேசப்பட்ட நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமே இது.

இந்த நாவலும் திரைப்படமும்( poronographic) ஆபாச வகைப்பிரித்தலுக்குள் உள்ளடங்கியது.ஆபாச திரைப்படங்கள் சமூகத்தில் எழுப்பும் எதிர்மறையான விளைவுகளை இந்த திரைப்படமும் ஏற்படுத்தாமல் இல்லை.

இத்திரைக்கதையானது,பிரதானமான 3 கதாபாத்திரங்களால் பின்னப்பட்டது.இதில் ஒரு கதாப்பாத்திரத்தின் முகம் காட்டப்படவே இல்லை. தன்வளர்ப்புத்தாயின் தோழி றொபின்சன் (Robinson) என்பவள் சிறுவன் க்ரிஸ்ட்டின் க்ரே (Christian grey )15 வயதாக இருக்கும்போது தன்னை உடலுறவு கொள்வதற்காக 'BDSM' என்னும் உறவு முறையை அறிமுகப்படுத்தி,6 வருடமாக அதன் மூலம் இந்த சிறுவன் துன்புற கிடப்பதும் அதை பார்த்து அந்த பெண் பாலியல் இன்பமுற்றதன் விளைவால் அந்த சிறுவனும் உளவியல் உடலியல் ரீதியாக "பிறரைத்துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவித்தல்" (Sexual Sadism Disorder) என்னும் உறவுக்கட்டமைப்பு நோய்க்குள் உள்ளாக்கப்படுகிறான் என்பது பற்றியும்,தற்போது செல்வச்செழிப்புடன் உள்ள 27 வயது நிரம்பிய அந்த ஆண் தன் வாழ்வில் சந்திக்கும் பெண்களை தான் அனுபவித்த 'BDSM'என்னும் உறவு நிலைகளில் 'Submissive and Dominant 'என்னும் உறவைத் தேர்வு செய்து பெண்களது பிற உணர்வுகளைபுறக்கணித்து உடல்களுடன் உறவு கொண்டாடி வருகிறான் இவன் . கன்னித்தன்மையுடைய எந்த ஆணின் வாசமும் தீண்டாத,பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டே ஆங்கில இலக்கியத்தில் பட்டப்பிடிப்பு மேற்கொள்ளும் ஒரு மென்மையான 21 வயதுடைய (Anastasia Steele) அனஸ்டீசியா ஸ்டீல் என்னும் பெண்ணின் காதலைப் புரிந்து கொள்ள முடியாமல் தான் பட்ட துன்பத்தை அந்த பெண்ணுக்கும் வழங்கி அதில் இன்பம் அனுபவிக்க முனைந்து கொண்டு அவள் பின்னால் ஓடிச்சென்று அவளது காதலைப் புரிந்து கொள்ளாமல் தோற்றும் விடுகிறான்.அந்த பெண்ணும் கூட தோற்றுத்தான் போய் விடுகிறாள்.அவனது காதலற்ற காம உறவு மற்றும் விதி முறைகளைக்கண்டு.


இத்திரைப்படம் பொதுவாக ஒட்டு மொத்தப்பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி காட்டாமல் நடிகை எவ்வாறு அந்த 'BDSM' என்னும் உறவு நிலைக்குக்குள் நுழைகிறாள்,மீண்டு வருகிறாள் என்பது பற்றியே பேசப்படுகிறதே தவிர சாதாரணமாகபொதுவான பெண்கள் எப்படி இதனுள் சிக்கிக்கொள்கிறாள் என்பது பற்றி பேசப்படவில்லை என்று நினைக்கிறேன்.

காதலின்றி காமம் சாத்தியமா? என்று ஒரு கேள்வியை முன்வைத்தால் தற்காலத்தைப்பொறுத்தவரை ஆம் என்றுதான் கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.இல்லையெனில் எதற்காக சமூகத்தில் அதிகமாக பாலியல் தொழில் புரியும் இடங்களும் பாலியல் தொழிலாளர்களும் பாலியல் வன்முறை நிகழ்வுகளும் அதிகரித்துச்செல்கின்றன?? இவை அனைத்தும் காதல் உணர்வுடன் நிகழ்த்தப்படுகின்றனவா? இல்லையே? இது போக இன்று காணப்படும் அதிகமான திருமண வாழக்கை நிகழ்வுகள்கூட காதலின்றிய காமத்துடனேயே பயணிக்கின்றது.


இத்திரைப்படத்தில் BDSM என்னும் உறவு நிலை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.இது பற்றிய மேலதிக தகவல்களை நீங்கள் கூட தேடிப்பார்க்கலாம். Submissive and Dominant என்ற உறவு நிலை பற்றியே இத்திரைப்படம் அதிகம் விவரிக்கப்பட்டுள்ளது.
இதை இவ்வாறு ஓரளவு தெளிவு படுத்தலாம் என்று நினைக்கின்றேன். ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் உறவுகொள்ளலில் எவ்வாறான உறவு நிலையை வழக்கமாக கடைபிடிப்பார்கள்? ஒன்று திருமண வாழ்வு,இரண்டு காதலித்து ஒன்றிணைந்து வாழ்தல்(Living together) இன்னும் பலஉறவு முறைகள் பெயர் வைக்காமல் வெளிப்படுத்தப்படாமல் கூட இருக்கலாம்.ஆனால் இந்த "BDSM" என்னும் உறவு நிலையை பின்பற்றும் 'சமூகமே' மேலைத்தேய நாடுகளில் உண்டு.Submissive என்பது ஒருவர் தன்னை அதிகாரத்தில் உள்ள ஒருவருக்காக அர்ப்பணித்து விடுவது.அடிமையாகி தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை மறைத்து தன் அதிகாரி என்ன கூறுகிறாரோ அதை மட்டுமே பின்பற்றுவது. Dominant என்பவர் அதிகாரத்தில் இருந்து கொண்டு கட்டளைகளைப் பிறப்பிப்பார்.இவருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு"Submissive" நடக்க வேண்டும்.இவ்வாறு கட்டுப்பாடுகள் மீறுமிடத்து (sub) மிகவும் வன்மையாக தண்டிக்கப்படுவார்.இவ்வாறான விதிமுறைகளுடன் கூடிய உடன்படிக்கையை பற்றியும் இத்திரைப்படம் அதிகம் பேசுகின்றது.


இந்த உறவு முறையாவது உடன்படிக்கையின் அடிப்படையில் நிகழ்கிறது.ஆனால் திருமணம் என்ற உடன்படிக்கையில் விழுந்த ஒரே குற்றத்திற்காக நம் சமூகத்தில் உள்ளபெரும்பாலான பெண்கள் பாலியல் பற்றி எவ்வித பிரக்ஞையும் இல்லாமல் தங்களை அர்ப்பணிக்கின்ற நிலை மிகவும் கொடூரமானதாகவே நான் கருதுகிறேன்.அதிகமான விவாகரத்துப்பதிவுகள் கூட கணவன் உடலுறவின்போது மிகவும் வன்மையாக மிருகம் போல் நடந்து கொள்வதாகவும்,அல்லது ஆபாச திரைப்படங்களில் மேற்கொள்வது போல பாலுறவு கொள்ள முற்படுவதாகவும் பதிவாகி உள்ளன.இந்த விவாகரத்து என்னும் போதுதான் மற்றுமொரு விடயமும் நியாபகத்துக்கு வந்தது.ஆபாச திரைப்படங்களைப்பார்க்கும் பெண்கள் கூட அதில் வரும் ஆண்களின் உடலியல் நிலை பற்றிய ஒரு தவறானபுரிதலை மேற்கொண்டுவிடுகின்றனர்.அதனால் கணவன் தனக்குரிய உடலியல் சுகத்தை முழுமையாக தரவில்லை என்ற காரணத்தை மையப்படுத்திய விவாகரத்துகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இதுவும் காதலற்ற வெறுமனே சதைகளின் மீது நிகழும் உடலியல் இச்சையாகவே காணப்படுகிறது.


இந்த திரைப்படம் முற்று முழுதாக பெண்களுக்கு எதிரான ஒரு படமாக பாலவாறு விமர்சித்துப்பேசப்பட்டது.தன் இச்சை கொள்ளும் பெண்ணுடலை அடிமைப்படுத்துவது,அதிகாரம் செலுத்துவது,என்றெல்லாம் பேசியது.ஒரு விதத்தில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வேறொரு வடிவில் கேள்வி ஒன்றயும் மறைமுகமாக ஏற்படுத்தி விடுகிறது.இதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.Christian grey தனது கடந்தகால வாழ்வுபற்றி Anastasia Steele இடம் உரையாடும் போது தன்னை தன் தாயின் தோழி அவளது அதிகாரத்தின் கீழ் தன்னை 6 வருடமாக பாலியல் உறவுகொண்டு புணர்ந்து வருவதாக கூறுகிறான்.அப்போ இந்த இடத்தில் வன்புணர்வு ஒன்றும் நிகழ்த்தப்படவில்லை.அவன் 15 வயதில் இருந்து 21 வயது வரை அவளது கட்டுப்பாட்டின் கீழ் BDSM உடன்படிக்கையுடன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்றுதானே அர்த்தம்.அவனது பாலியல் அதிகாரியாக இருந்த அவனது வளர்ப்புத்தாயின் தோழியின் கீழ் பல்வேறு பட்ட துன்பங்களை அனுபவித்தும் இருக்கிறான்.இது திரைப்படத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுவதைக்காணலாம்.Christian grey யின் உடலின் மார்பகங்களில் தீக்காயங்கள் பட்டிருப்பதை Anastasia Steele தொட முற்பட்டு இவை எவ்வாறு ஏற்பட்டன? என்று வினவுவாள்.அந்த சந்தர்ப்பத்தில் அவனிடம் பதில்கள் கிடையாது.ஏன் எனில் அவை அனைத்தும் அவனுக்கு அவனுடைய அந்த பெண் அதிகாரி (dominant)இனால் கொடுக்கப்பட்ட தண்டனைகள்.மேலும் அவன் ஒருசந்தர்ப்பத்தில் தான் 50 வழிமுறைகளில் பாலியல் ரீதியாக மோசமான முறையில் புணரப்பட்டதாக கூறுகிறான்.இருந்தாலும் தற்போதும் கூட அந்த பெண் அதிகாரி Robinson உடன் பழக்கத்தில் உள்ளதாககூட கூறுகிறான்.அது பாரிய எரிச்சலையம் கோபத்தையுமே பார்வையாளர்களுக்கும் அவனைக் காதலித்துக்கொண்டிருக்கும் Anastasia Steeleக்கும் ஏற்படுத்தி விடுகிறது.ஏன் அவன் இதனைக் கொடுமையாக நினைத்திருந்தால் அப்போதே அந்தப்பெண்ணை விட்டு நீங்கி அவளது உறவை முறித்துக்கொண்டிருக்கலாமே? என்ற கேள்வி எழலாம்.இங்கு தான் (Dominant) அதிகாரியாக இருப்பவர்களின் உளவியலைப்புரிந்து கொள்ள வேண்டும்.அதிகாரி எப்போதும் தன் கீழ் இருப்பவரின் உளவியலைபுரிந்து கொண்டு,ஆதரித்து அன்பு காட்டி ,தன்னை நீங்காதவாறு தன் கீழ் உள்ளவரின் தேவையைப் பூர்த்தி செய்து வைத்துக்கொண்டிருப்பார்.இது அவர்களது 'BDSM' கொள்கைகளில் ஒன்று.அத்துடன் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டிருக்கும்.இந்த உளவியலின் அடிப்படையிலேயே Christian grey தன் கீழ்ப்படிவில் வைத்திருக்க Anastasia Steele ஐ நெருங்கிச்செல்கிறான். அவளுக்கு இலக்கியம் மிகவும் பிடிக்கும் என்பது தெரிந்து,அவளுக்காக ஒரு ஆங்கில இலக்கிய முதல் பிரதி ஒன்றை பரிசளிக்கிறான்.இது போக அவளுக்கு வெளிப்படையாக மகிழ்ச்சியூட்டும் விடயங்கள் சிலவற்றை கொடுக்கிறான்.கார்,மடிக்கணினி,வானூர்தி பிரயாணம் ஆடம்பரமான படுக்கையறை இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது அவனது பரிசுகளும் அவள்மீதான உடலியல் இச்சையும்.


படத்தின் கதாநாயகி அவனை விட்டு விலகிச்சென்றுவிட முடியாத காரணம் அவன் மீது அவளுக்கு தனிப்படட முறையில் இருந்த ஈர்ப்பும்,அவனுக்கு சமூகத்தில் உள்ள அந்தஸ்த்து மற்றும் அவளைச்சூழ உள்ள உறவினர்கள்,நண்பர்களின் அவன் மீதான நல்லபிப்பிராயங்களுமே அவளை அவன் மீது காதல் கொள்ளச்செய்து விடுகின்றது.அவனுடைய நோக்கங்கள் தெளிவாக தெரிந்திருந்தும் கூட அவனுக்காக அவள் தன்னை மறந்து அவன் மீது கொண்ட காதலினால் அவளை அர்ப்பணிக்கிறாள்.இறுதியில் கூட 'ஏன் இப்படி நீ இருக்கிறாய்? சாதாரண மனிதர்களைப்போல் நாமும் வாழக்கூடாதா?? 'என்று அவனிடம் கேட்டதற்கு நான் இதுதான்.என்னுடைய வழி இதுதான்.நான் 50 வழிமுறைகளில் பாலியல்ரீதியாக புணரப்பட்டு துன்பம் அனுபவித்தேன்என்று கூறுகிறான்.இதை கேட்டவள் அதிர்ச்சியுற்று 'என்னிடம் உனக்கு என்ன வேண்டும்? நீ அனுபவித்த துன்பங்களை எனக்கும் கொடு.அந்த ஒரு வழியில் மட்டும்தான் என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூறி அவன் வழங்கும் தண்டனைகளைப்பெற்றுக்கொண்டு அவனைப்புரிந்து கொண்டு பிரிந்து சென்று விடுகிறாள்.எதைப்புரிந்து கொண்டாள் என்று தெரியுமா? அதுதான் (Sexual Sadism Disorder)பிறரை வருத்தி துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவிக்கும் நோய்.இந்த நோய் இன்று நம் சமூகத்திலும் காணப்படுகிறது அதுவும் எவ்வித கொள்கைகள் உடன்படிக்கைகள் ஏதும் இன்றி.


இத்திரைப்படத்தில் உடலுறவு கொள்வதற்காகவே விளையாட்டுஅறை (play room) ஒன்று தயாரித்து காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளது.இதில் பல்வேறு வகையான பாலியல் உபாகரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.BDSM என்னும் இவ்வுறவு முறையில் ஏற்படும் உடலியல் காயங்கள் கூட ஒரு வித இன்பமாக கொள்ளப்பட்டதுடன் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தவருடமும் இந்த பாலியல் உபகாரணப்பாவனைகள் அதிகரித்து காணப்பட்டுள்ளன.இதில் இருந்து புலப்படுவது என்ன? அவரவர் தங்கள் சுயங்களைத் தொலைப்பதனை தாங்களே மறந்த்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.தாங்கள் ஏதொரு சினிமாவின் பின்பற்றலாகவும் ஒரு நாவல் இலக்கியத்தின் பின்பற்றலாகவுமே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.சினிமாவை அல்லது ஒரு இலக்கியநாவலை இங்கு யாருமே புரிதலுடன் அணுகுவதில்லை. பின்பற்றலுடனேயே அணுக முற்படுகின்றனர்.இதை விட ஒரு அறியாமை எங்கே இருக்கக்கூடும்? பார்க்கின்ற சினிமா மற்றும் இலக்கியங்களை எதற்கு அதில் உள்ளவாறே பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொருவருக்கும் எழுந்தாலே போதும்.அந்த இடத்திலிருந்து "புரிந்து கொள்ளல் மூலம் அணுகுதல்"என்னும் செயற்பாடு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ ஆரம்பித்து விடும்.

இந்த திரைப்படத்தில் உள்ள "Love Me Like Do"என்னும் பாடல் நான் உட்பட இன்று பெரும்பாலானோரை கவர்ந்த பாடல்களில் ஒன்றாக உள்ளது.இத்திரைப்படத்தின் பாகம் 2 fifty shades darker என்னும் பெயரில் 2017 பெப்ரவரி 2ஆம் திகதி வெளியிடப்பட்டதாககூறப்பட்டது.நான் இன்னும் பார்க்கவில்லை.

- அத்தியா -
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |