Wednesday, December 27, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 3

Solino (2002)




Fatih akin திரைப்படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று Solino(2002).

இத்திரைப்படம் இயக்குனர் Tornatoreவின் "Cinema paradiso" மற்றும் இயக்குனர் kieslowskiயின் "Camera buff" திரைப்படங்களை வெகுவாக நினைவூட்டிக் கொண்டிருந்தது.

வழக்கமாக தன் படங்களில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்துவது இப்படத்திலும் தவற விடப்படவில்லை.

இரு சகோதரர்களுக்கிடையிலான அன்பு எனும் நிலையை தாண்டி  பொறாமையுணர்வெழுச்சிகளும், அந்த பொறாமையின் உந்துதலில் மேற்கொள்ளும் தவறுகளும் குற்றவுணர்வுகளை கடக்கும் மனநிலகளும் விரவிக்கிடக்கின்றது.

நீண்ட நாள் குடும்பத்திற்காக உடலுழைத்து திடீரென நிகழ்ந்த ஏமாற்றத்தை விழுங்க முடியாமல் சொந்த நாட்டிற்கு திரும்பிய தாயின் தனிமைக்கு முன்னுரிமை அளித்து தன் கனவுகளை அடக்கிக்கொள்ளும்  மகனின் அந்த மெல்லுணர்வு தான் அவன் ஒரு கலைஞன் என்பதற்கான சான்றாக தென்பட்டது.

திரைப்பட இயக்குனராக வேண்டிய வெறி வறுமையுடனும் இருந்தது.

"Fire and passion"இறுதிவரை அவனுக்குள் எரிந்து கொண்டே.

Solino (2002) 
Director Fatih Akin

Revelations - (2016) 




திருமண, மற்றும் குடும்பக்கட்டமைப்பின் மீதான பல்வேறான விமர்சனங்களை எவ்வளவுதான் விவாதித்தாலும் அது சார்ந்து தீர்க்கமான முடிவை மேற்கொள்வதில் பலரும் தோற்றே போய்விடுகின்றனர். குடும்பக்கட்டமைப்பு பலருக்கு பாரம்பரிய பாதுகாப்பான வாழ்க்கை முறையாக இருந்தாலும் அது பொருளாதார ரீதியல் பல்வேறு நெருக்கடிகளை வழங்குவதோடு தனிமனித சுதந்திரத்தை பறித்து விடுவதும் நாம் அறிந்ததே. 

உண்மையில் நாம் வாழும் சூழலில் காமத்தை அவ்வளவு எளிதில் பருகிவிட்டு கடந்து விட முடியாது.கலாச்சார மாயைகளாலும் திருமணம் என்னும் கட்டமைப்பாலும் அது இறுக்கி கட்டப்பட்டிருக்கிறது.சில பல காதல்,காமங்களை கடந்த பின் இருவர் தங்களுக்கான நீண்டகால அல்லது குறுகியகால உறவை அமைத்துக்கொள்ளவதற்கான அடுத்தகட்டத்திற்குள் நுழையலாம். ஆனால் எவ்வளவுதான் தெளிவிருந்தாலும் குடும்ப திணிப்பிற்குள் சிக்குண்டு சீரழிகிறது.இன்னும் தனிமையும் வெறுமையும் மனிதனை உணர்வுரீதியாக எங்கெங்கோ கொண்டு சென்றும் விடுகின்றது.

இந்த இறுக்கமான குடும்பக்கட்டமைப்பு மற்றும் காமத்தின்பால் செல்லும் உடல் பங்கீடு நம்மை பதைபதைப்புகளுக்குள்ளாக்குகிறது. இன்னும் இந்த உடல் பங்கீட்டின் விளைவால் வன்மங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய திருமணக்குடும்பக்கட்டமைப்பையே அப்பட்டமாக விமர்சிக்கும் வகையில் மனிதனது சிக்கலான அக உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் எளிய மனிதர்களின் வாழ்வியலைக் கொண்டு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்ட திரைப்படம் “Revelations”.

இந்த திருமண உறவு ,குடும்பக்கட்டமைப்பு விவகாரத்தை அணுகும் இயக்குனர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு.ஏனெனில் இதனை அவ்வளவு எளிதாக போகிற போக்கில் தெரிந்த கேள்விப்பட்ட சம்பவங்களையெல்லாம் வைத்துக்கொண்டு படத்தை வடிவமைத்து விட முடியாது. இவ்வாறன உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த அவ்வளவு முதிர்ச்சி வேண்டும்.நீண்ட நாட்களின் பின் உலகத்தர தமிழ்ப்படம் ஒன்றை பார்த்து மனம் முழுவதும் நெகிழ்ந்திருக்கிறேன். 

திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஜெயபால் “திரைமொழியின் தீராக்காதலன்” என்றுதான் சொல்வேன். அத்தனை பெரிய விடயங்களை நுணுக்கமான காட்சிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இவர்தான் கலைஞன். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு மொழி. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கொண்டு தமிழ் சினிமா திரை மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம். திடீரென நிகழ்ந்துவிடும் குற்றங்களும் அக்குற்றங்களை சரி செய்ய மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித உணர்வின் அடிப்படை. அத்தகைய மனிதனித உணர்வை அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்திருப்பார் இயக்குநர்.

மனதின் இருண்ட பக்கங்கள் அழகாக வெளிக்கொணரபட்டிருக்கும். என்னைப் பொறுத்தவரை பெண்களின் பாலியல் தேவையை ஒரு புறம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆண்களின் அக உளச்சிக்கலையும் கேள்விக்குட்படுத்தியிருப்பார். கதையில் புதைந்திருக்கும் ஒவ்வொரு மர்மமும் அதன் போக்கில் இலகுவாக அவிழ்க்கப்படுவது கூடுதல் சுவாரஷ்யம். 

இன்னும் படம் பார்த்து முடியும் வரை ஒரு சிறு சோர்வோ உங்களைத்தாக்கிவிடாது. பிரதான நான்கு கதாப்பாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட இப்படம் நடிகர் தேர்வுகளையும் சிறப்பாகவே செய்துள்ளது என்றுதான் சொல்வேன். "சேத்தன்” சின்னத்திரையில் நமக்குப்பழக்கமானவர். அந்த குற்றவுணர்வுகேற்ற எளிமையான முகம்.யதார்த்தத்தை புலப்படுத்துவதில் ஒரு சோகமான பார்வையில் நம்மை விழுங்கி விடுவார். அடுத்து “லக்ஷ்மி ப்ரியா” கண்களால் பேசும் ஒரு எளிமையான அம்சமான நடிகை. பிற பாத்திரங்கள் பெரிதாக அறிமுகமில்லாமல் இருந்தாலும் நடிப்பில் சொதப்பிவிடவில்லை. கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லாததாலும் தமிழ்ப்படம் என்பதாலும் படத்தின் ஒரு காட்சியை கூட விவரிக்கவில்லை.படத்தைப் பார்த்து நெகிழ்ந்து கொள்ளுங்கள். வழக்கம் போலவே தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்ட கலைஞனாகவே இயக்குனரும் இருக்கிறார். Netflix இல் பார்க்கலாம்.

Revelations(2016) 
Director: Vijay Jayapal





                                                   On body and soul (2017)



மனித உறவு மற்றும் உணர்வுகளை நுணுக்கமாக கண்டு பிடிக்க முயற்சி செய்யும் காவியம் என்றே சொல்லலாம்.
புனைவுதான் என்றாலும் கதையில் தர்க்க பிழைகள் ஏதுமில்லை.

படத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை காட்சிப்படுத்தும் அதே வேளை இரு மனிதரின் காதல் உணர்வின் வெளிப்பாட்டை காட்சிப்படுத்த இரு மான்களின் காதல் கனவில் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

நடிகையின் இயல்பு தற்காலத்திற்கு பொருத்தமற்று விசித்திரமான ஒன்றாக நமக்கு தோன்றினும் தனிமனித உணர்வு,
அவர்களின் வாழ்வியல் பின்புலத்தையும் தனித்துவத்தையும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இருவரின் ஒருமித்த கனவு மற்றும் செயற்பாடுகள் நிகழும் போது மெதுவாக ஒரு சந்தத்துடன் தனக்கான உடலும் ஆன்மாவும் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.

'கனவு' மனித ஆன்மாக்களின் அந்தரங்கமான வெளிப்பாடு.
'தூக்கம்' ஆன்மாக்களின் தேடல்களை அரங்கேற்றம் செய்யும் இடம்.
நிஜத்தில் ஆன்மாக்கள் ஒன்றிணையும் போது கனவுகளுக்கு இடமில்லாமலே போய் விடுகிறது.

On body and soul (2017)
Director:Ildiko Enyedi









Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |