Thursday, August 31, 2017

உலகசினிமா அறிமுகக் குறிப்புகள்

Like Someone In Love : 2012



இந்த வயதில் இவ்வாறான ஆசையெல்லாம் தேவையா ? என்று பொங்குபவர்கள் பொங்கட்டும்.நான் சொல்லவந்ததை சொல்லி விட்டு போகிறேன்என்றவாறு இலக்கிய நயத்துடன் மிகவும் எளிமையாக, இன்னும் மனித மனங்களில் ஆழமான தாக்கங்களைத் தோற்றுவிக்கும் கதையை இறுதியாக சொல்லி விட்டு மறைந்தார் இயக்குநர் (Abbas Kiarostami) அப்பாஸ் கியரோஸ்தமி.

இதில் வரும் காட்சி நுண்ணறிவு உண்மயிலேயே பிரம்மிக்க வைத்தது.திரைப்படத்தில் நாம் ப்ரேமிற்குள் (Frame) பார்க்கும் விடயங்களை விட ப்ரேமிற்கு வெளியில் நடக்கும் நம்மால் பார்க்க முடியாத விடங்கள் மிகவும் முக்கியமானதுஎன்பதை இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சி உணர்த்தியது.

திடீரென ஏற்படும் பெயரற்ற உறவுகளின் அன்பு,கரிசனம்,புரிதல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்த உறவால் வெளியில் இருந்து ஏற்படும் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதென்பது சிரமானதுதான். வழக்கமான காதல் கதை ஒன்றுதான் வெறித்தனமாக பின் தொடர்ந்து வன்முறை நிகழ்த்துகின்றது.

மிக எளிமையான முகமூடிகளைக் கொண்டு மனதின் தீவிரமான சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு சந்தேகமும் நியாயப்படுத்தப்படுகின்றது. இதயத்தின் இருண்டபக்கத்தின் அழகு எந்தவித மாயத்தோற்றத்தையும் தராமல், இருந்தாலும் ஒரு சிறு மயக்கத்தையும் இலக்கியத்திற்கான அழகையும் கொண்டு பேசுகிறது.

Like Someone In Love (2012 Drama film)


Enter the Void : 2009 



மரணத்திற்கு பின்னரான வாழ்வு பற்றிய புரிதல் மதங்களின் நம்பிக்கையற்ற புராண கதைகளை விட போதை தலைக்கேறிய தத்துவவாதிகள் சொல்வது அதீதமான சிலிர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.நிச்சயமாக தத்துவங்களைப் புறக்கணிக்கும் மனப்பான்மை மிகவும் அரிது.மரணித்த பின் எம் ஆன்மா உடலை விட்டு எங்கு போகும்? என்ன செய்யும்? இதை ஒரு பரிசோதனையாகவே,போதை தலைக்கேறிய ஒருவனின் மரணத்தின் பின்னரான அவனது ஆன்மாவின் பார்வையில் இருந்து அவனது உலகை நமக்கு காண்பிக்கிறது.

உலக வாழ்வு பற்றிய முழுமையான புரிதலும் அனுபவமும் கிடைக்கின்ற போது இவ்வுலகிலி்ருந்து சற்று ஆன்மாவை அப்புறப்படுத்திப்பார்க்க ஆசை வரலாம்.சில சமயம் "என்னடா வாழ்க்கை இது?" என்று புரியாமல் புலம்புபவர்களுக்கும் தோன்றலாம்.அந்தவகையில் ஆன்மாவின் ஒரு விடுதலைதான் போதைப்பாவனையாக எனக்குத்தோன்றியது.பெரும்பாலான தத்துவதாதிகளின் இத்தகைய நிலையில் புதுமை ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கும் செயற்பாடுதான் இயக்குனர் மேற்கொண்டது.ஆரம்பத்தில் "The Book of the Dead" என்னும் புத்தகத்தை வாசிக்குமாறு தூண்டபடுவதும்,அதன் பின்னரான எதிர்பாராத மரணமும் மரணத்தின் பின்னுள்ள ஆன்மாவின் தேடலும் என்றவாறு பயணிக்கும் இக்கதை ஆரம்பம் முதல் முடிவு வரை நம்முள்ளே பொருத்தமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி நம்மை ஏற்றுக்கொள்ளச்செய்திருக்கும்.அல்லது மரணத்தின் பின்னரான வாழ்க்கை தொடர்பாக நாமாகவே ஒரு முடிவுக்கு வருமாறு சில கேள்விகளை தூண்டியிருக்கும்.

போதை தலைக்கேறிய ஆஸ்கார் தான் சுடப்பட்டு விட்டான் என்பது தொடர்பாக பிரக்ஞையற்று இப்படி கேட்பது என்னை கவர்ந்த ஒன்று.

“They shot me. Did they kill me? Did they shoot me? I’m just tripping, that’s what it is. It’s the DMT.”

இந்த மரணத்தையும் தாண்டி ரசிக்க வைத்த காட்சி லிண்டா(Linda) ஆஸ்காரின் (Oscar ) அன்பு. சகோதரர்களுக்கிடையிலான அன்பு நிலை கட்டுக்கடங்காமல் வெளிக்காட்டவே வேண்டிய ஒன்று.அது வார்த்தைகளாலோ அல்லது முத்தங்களால்,கட்டியணைத்தல்களால் பூரணப்படுத்த முயற்சி செய்யப்பட வேண்டும்.வழக்கமாக கேஸ்பர் நோ திரைப்படங்களில் காதல் காம விடயங்கள் விதிமீறியிருக்கும்.அதை புறக்கணிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி மனம் ஏற்றுக்கொள்ளும். அதே பதட்டத்தை இந்த சகோதரர்களின் அன்பு நிலையில் ஏற்படுத்தி விட்டிருப்பார்.முக்கியமாக தனக்கு மட்டும்தான் சொந்தம் என்னும் மன நிலை (possessive) இங்கு சகோதரர்களுக்கிடையில் மேலோட்டமாக நிகழ்த்தப்பட்டிருக்கும்.

முடிந்தால் நடிகனின் முகத்தை அவன் கண்ணாடியில் பார்க்கும் போது அவனுக்கே தெரியாமல் ஒரு முறை நீங்களும் பார்த்து விடுங்கள்.

Enter the Void 2009 Fantasy/Drama film

 Shame : 2011



தனிமையின் அந்தரங்கம் குறித்து யாருக்கும் எவ்வித வியாக்கியானங்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

மூன்றாவது நபர் நம் வாழ்வில் நுழையும் வரை, தன்னிச்சையான நம் செயல்கள் குறித்து எவ்விதக் குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டியதுமில்லை. மூன்றாவது நபர் நம்வாழ்வில் நுழையும்வரை, "வெட்கம்" என்றால் என்ன? என்பது குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று இருந்திருப்போம்.

நான் அறிந்து சமூகத்தில் பாதிக்கு மேலானவர்கள் வாழ்க்கை "தனிமையில் அந்தரங்கம் பேணியதாகவே" இருந்துவிடுகிறது. அது வெளிக்கொணரப்படும் தனி மனித,சமூகத்தை பொறுத்து சரியும் தவறும் நிர்ணயிக்கப்படுகிறது. இன்னும் காதலற்ற வெறுமனே சதைகளின் மீதான ஆர்வம் ஒன்றும் இந்த உலகிற்கு புதுமையான ஒன்றுமல்ல.

எந்தவொரு வன்மமும் திணிப்பும் "பாலியல் உறவுச்செயற்பாட்டில்" இல்லாதவரை;இங்கு குற்றம் என்று எதுவுமே இல்லை. வெட்கப்படவும் கூட ஒன்றும் இல்லை. ஏறத்தாழ அண்மித்த வயதிலுள்ள இரத்த உறவுகளின் அன்பு நிலையும்,புரிதல்களற்ற புறக்கணிப்புகளும் என்றுமே நான் தேடிப்பார்த்து அனுபவிக்கும் ஒன்று.

Shame (2011 Drama film/Erotic)
Director Steve McQueen

Blue is the warmest color : 2013



திரையில் என்றாலும் சரி. தெருவில் என்றாலும் சரி. வன்முறை காட்சிகளைப் பார்க்க தாராள மனம் இருக்கும் நமக்கு ஒருவர் மீது ஒருவர் அன்பைப்பரிமாறிக் கொள்வதை காண சகிக்க முடிவதில்லையே..!

அவரவர் உடல் அவரவர் உரிமை.அவரவர் பாலின தேர்வு கூட அவரவர் உரிமைதான்.மூன்றாம் நபரிடம் உரிமை கேட்டு கோஷம் போட்டு அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான் சொல்வேன். அதே வேளை "பிறர் வேறுபட்டு வாழ உடன்படும்" மன நிலையை கூட வளர்த்துக்கொள்ள வேண்டும். வித்தியாசங்கள் கண்டால் கல்லால் அடிக்கும் மன நிலை தமிழரை விட்டகல நாட்கள் பல செல்லும்.

நம் சமூகத்தை பொறுத்த வரை, பெரும்பாலும் பாலியல் வரட்சியில் இருக்கும் ஆண்கள் மன நிலை தான் இங்கு பரிதாபமென தோன்றுகின்றது. "நாங்கெல்லாம் என்ன பாவம் செய்தோம்?" என்ற புலம்பல் இந்த பெண்கள் பெண்களை நாடிச் செல்வது குறித்து இருக்கிறது.

இருந்தாலும் ஆண்கள் ஆண்களை நாடிச்செல்லுதல் தொடர்பான அதிர்வு,பிரமிப்பு பெண்களைவிட குறைவாகத்தான் உள்ளது.மூன்றாம் பாலினம் குறித்து இங்கு யாருக்கும் எந்த கவலையும் இல்லை.

"தனக்கு மட்டுமே சொந்தம்" (Possessiveness) என்னும் உணர்வு இல்லாத காதல் எந்த அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றிய விவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படாத ஒன்றுதான்.

Blue is the warmest color (2013)
Director Abdellatif Kechiche

- அத்தியா -

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |