Friday, June 16, 2017

"அவரவர் உடல் அவரவர் உரிமை" (Pink)

"அவரவர் உடல் அவரவர் உரிமை" (Pink)

அவரவர் விருப்பம் போல அவரவர் வாழ்க்கை. அறக்கருத்து சொல்லி அறிவுரை கூறி அதை முற்று முழுதுமாக பின்பற்றும் எந்த 'ஞானப்பழங்களும்' இந்த கால கட்டத்தில் இல்லை. யார் கூறும் அறிவுரையை யார் பின்பற்ற வேண்டும்? இங்கே பலர் 'உத்தமர்கள்' என்னும் வார்த்தைக்குள் தங்களைக் கொண்டுவர முற்படுகின்றனர். "செக்ஸ்" என்னும் வார்த்தையை பொது வெளியில் கேட்டால் காதுகளை மூடிக்கொள்வார்கள். மன்னிக்கவும். "உத்தமர்" என்னும் வார்த்தைக்கு தெளிவான அர்த்தத்தையும் உத்தமராக வாழ்ந்து கொண்டிருக்கின்ற "உதாரண புருஷர்களையும்" முடிந்தால் நினைவுக்கு கொண்டுவந்து முன்வைக்கவும்.

மத கலாச்சாரங்களால் வெகுவாக பின்னப்பட்ட கிராமப்புற ஊர்களில் இரவு வேளை உங்களது நண்பர்களுடன் ஒரு சுற்று சுற்றி வந்து பார்க்க. எத்தனை வீட்டுக் கூரைகள் மற்றும் யன்னல்கள் திறந்தவண்ணம்  காமத்தைப் பருக காத்துக்கொண்டு இருக்கின்றது என்று?

இது சங்ககால முதல் கொண்டு நாம் (தமிழர்கள்) கற்றறிந்த ஒன்று தானே? இந்த "காதல் காமகளவொழுக்கம்" இந்த நவீன யுகத்தில் இது அலட்டிக் கொள்ளும் அளவு ஒரு மிக முக்கியமான விடயமும் இல்லை. இதில் என்ன புதிதாக அதிர்வு வேண்டி இருக்கிறது?



"இருவர் விரும்பி மேற்கொள்ளும் உறவில் தவறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை. "வன்புணர்வு"  நிகழ்வாக இருந்தால் மட்டுமே எதிர்ப்பதும் கண்டனங்களை வீசுவதும் பொருத்தமானதாக இருக்கும். ஒருவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி உறவு கொள்வதென்பது "கொலைக்குச் சமமான" ஒரு செயல். கண்டிப்பாக இதற்குத்தண்டனை வழங்கல் அவசியம். இங்கு மனிதன் பிற மனிதன் மீது அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்புக்களை திணிக்கும் போதுதான் சிக்கல்களும் எதிர்ப்புகளும் மேலோங்கிவிடுகின்றது.

இருவர் விரும்பி மேற்கொள்ளும் உடலுறவை தற்கொலைக்குச்சமமான ஒன்றாகத்தான் நாம் கருத முடியும். இதில் யாருக்கு நாம் தண்டனை வழங்க முடியும்? தண்டனை வழங்க முதலில் நாம் யார்? தற்கொலையை நிறுத்த முயற்சிக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியை தழுவியதாகவே இருக்கும்.

பிறரது அனுமதி இன்றி அவர்களது படுக்கையறைக் காட்சி அல்லது அவர்களின் உடலியல் செயற்பாடுகள் மற்றும் அந்தரங்க புகைப்படங்கள் வெளியிடப்பட்டால் அதை பார்த்து 'கடந்து போவதை' தவிர வேறு வழிகள் இல்லை.பெரும்பாலும் நம் தமிழர்களுக்கு "கடந்து போதல்" என்னும் செயற்பாடு சற்று சிக்கலான ஒன்றாகத்தான் இருக்கும். எந்தப்பெரிய பிரபலங்களாக இருப்பினும் அவர்களும் சாதாரண மனிதர்கள் என்னும் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர். அவர்களுக்கும் எல்லாவித உணர்வுகளும் உண்டு என்பதை பெரும்பாலர் மறந்து விடுகின்றனர். இங்கே சிக்கல் என்னவென்றால், நாம் திரையில் பார்க்கும் கதாபாத்திரங்கள் இன்ன பிற பிரபலங்கள் தங்கள் இயல்பு வாழ்வில் ரசிகர்களின் மனவிருப்பப்படி அல்லது திரையில் காணும் போலி கதாப்பாத்திரங்கள் போல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது. நடிகர்களிடம் நாட்டை ஒப்படைத்தது முதற்கொண்டு எத்தகைய முட்டாள் தனங்கள் இவை? பிறரது அந்தரங்கம் பார்த்து வாய் பிளப்பவர்கள் தங்களது  ரகசியப் பக்கங்களையும் சற்றுப் புரட்டிப் பார்க்கவும். பொதுவெளியில் தங்களது படுக்கையறைக்காட்ச்சி அல்லது நெருங்கிய உறவுகளின் உடலுறவு காட்ச்சியை கற்பனை செய்து பார்க்கவும். எவ்வளவு அருவருப்பான மன நிலையில் இருக்கிறோம் என்பது புரியும்.

அவரவர் உடல் அவரவர் உரிமை.

உரிமை மீறல்கள் கண்டு இன்பம் கொண்டு குதூகலிப்பது பெரும்பாலும் நம்சமூகமாகத்தான் இருக்கும். இன்றய நவீனயுகத்தில் பல பிரபலங்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் நடந்தேறிக்கொண்டிருக்கும் அவமானப்படுத்தும் நோக்கில் அல்லது சமூகத்தை குறிப்பாக தமிழ் நாட்டில் அரசியலை விட்டு  திசைதிருப்பும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு அருவருப்பான "பிறரது அனுமதி இன்றி அந்தரங்கம் வெளியிடல்" தொடர்பான  எனது பார்வைதான் மேலே குறிப்பிட்டவை. பிறரது உடலை பார்ப்பது, குறிப்பாக பெண்கள் உடலை பார்ப்பது என்பது இன்றய காலக்கட்டத்தில்  ரசகசியமான ஒரு ஆசையாக உருவெடுத்து விட்டது.சரி இது ஒரு புறம் இருக்கட்டும்.

இவ்வாறான சிந்தனைக்கு முழுக்க முழுக்க ஒரு இந்திய ஹிந்தி மொழி திரைப்படம்தான் காரணம் என்பேன். 

                                                                                          

என்னைப் பொறுத்தமட்டில் திரைப்படங்கள் என்பன வெறுமனே கேளிக்கை கூத்து நிகழ்ச்சிகளால் மட்டுமே பின்னப்பட்ட ஒன்றல்ல என்பதை அடிக்கொருமுறை நல்ல திரைப்படங்கள் நிரூபித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் (Aniruddha Roy Chowdhury) அனிருத் ராய் சவுத்ரி  இயக்கிய 2016 செப்டெம்பர் மாதத்தில் இந்தோனேஷியாவில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வணிக மற்றும் (Court Drama) நீதிமன்ற நாடக வகையைச்சார்ந்த திரைப்படம்(Pink) "பிங்க்".

இந்த திரைப்படமானது மூன்று பெண் கதாப்பாத்திரங்களைக் கொண்டு பெண்களின் உரிமை மற்றும் சமூகத்தவர்கள் காலங்காலமாக பெண்களின் மீது சுமத்திய கற்பிதங்களை கேள்விக்குள்ளாக்கி சாட்டையடி பதில்களை கொடுத்திருக்கிறது என்று கூறலாம். "பாலின பாகுபாட்டிற்கு அப்பால்"  சிந்தித்து பேச வேண்டிய கால கட்டத்தில் இருந்து கொண்டு இன்னும் கூட பெண்ணியம்பற்றி விவாதிக்கிறோம் என்றால் நம் சமூகத்தைப் பொறுத்த வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் ஒரு துளியளவினும் குறைந்த பாடில்லை என்பது கண்கூடு. காலங்ககாலமாக பெண்ணியம் பெண்ணியம் என்று பாரதி கண்ட புதுமைப்பெண்களோ, பெரியாரிஸ வாதிகளோ, தொண்டை கிழிய கத்தினாலும் அதற்குள்ளும் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலும் பல்வேறு குறைகளை கண்டுபிடித்து பெண்களின் மீதே வழக்கமாக பழிசுமத்த ஆணாதிக்க சமூக நிலை காத்துக்கொண்டுதான் இருக்கிறது. ஒன்று அவளது ஆடை அமைப்பில் அல்லது உடல் கட்டமைப்பில் தவறு என்று பழி சொல்வார்கள். இல்லை என்றால் நல்ல குடும்பப் பெண்கள் இரவில் தனிமையில் நடமாடமாட்டாள் என்றும் கூவுவார்கள். இதையெல்லாம் நாம் மன்னித்து விட்டாலும் கூட ஒரு ஐந்து வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றதென்றால் இறுதியில் நகைச்சுவையாக குழந்தைகள் மீது பெற்றோரின் கவனக்குறைவு என்பார்கள். இல்லை என்றால் தொடுகை பற்றி சொல்லிக் கொடுக்கவில்லையா? உங்கள் பெண்குழந்தைக்குநல்ல தொடுகை (Good touch) ,கெட்ட தொடுகை(Bad touch) பற்றி தெரியாதா ? என்று சாதாரணமாக சொல்லி விட்டு செல்கின்றனர். அட  நம்  குழந்தைகளை கூட பூட்டி வைக்க வேண்டுமா? என்ன? நல்லதொடுகை, கெட்டதொடுகை குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். முதலில் இன்னொருவரின் உடலில் அந்தரங்க பகுதியை அவரின் உரிமை இன்றி  கைவைக்க எந்த பண்பாடு சொல்லிக் கொடுத்தது? என்றுதான் தெரியவில்லை. இந்த கால கட்டத்தில் சிறுபெண் பிள்ளைகளை ஆண் உறவுகள் அன்பாக தூக்கி முத்தமிடும் செயற்பாடு கூட கேள்விக்குரிய ஒன்றாகத்தான் இருக்கின்றது இல்லையா? இங்கே 'ஆணாதிக்க சமூகம்' என்பது ஆண்களை மட்டுமே சுட்டிடவில்லை. அந்த வார்த்தைக்குள் பாலினபாகுபாடின்றி மரபுவழி  சார்ந்த பழமைவாத மற்றும் கலாச்சாரங்களால் பின்னப்பட்ட ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. இதை கவனத்திற்கொள்ள வேண்டும்.இங்கு என்ன பிரச்சனை என்றால் சமூகமே மறைமுகமாக ஆணாதிக்க தொனியில் செயற்படுகின்றது என்பது ஒரு முரண்நகையாக இருப்பதை அறியாமல் இருப்பது தான்.

சரி இப்போ பிங்க் திரைக்கதைக்கு வருவோம்.

மீனல் அரோரா (Taapsee Pannu), பலக் அலி  (Kirti Kulhari) and ஆண்ட்ரீயா தரியங்  (Andrea Tariang) என்னும் மூன்று சாதாரணமாக வேலைக்குச்செல்லும் பெண்கள் ஒரு நாள் (Rock concert) இரவு இசை நிகழ்ச்சிக்கு தனக்கு ஓரளவு அறிந்த நண்பனை நம்பி இன்னும் இரு ஆண்களுடன் செல்கின்றனர்.அங்கு ராஜ்வீர்  என்னும் இளைஞன் மீனல் ஐ சந்தர்ப்பம் பார்த்து வன்புணர எண்ணுகையில் மீனல் ராஜ்வீரை தாக்கி விட்டு தன் தோழிகளையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகின்றாள். காயப்பட்ட ராஜ்வீர் சிறிது நாட்களில் எம்.எல்.ஏ யின் மகளை திருமணம் செய்ய வேண்டி இருப்பதால் அவனுக்கு அடிப்படையிலேயே ஒரு பணத்திமிரும் ஆண் என்னும் அதிகார திமிரும் மேலோங்கியே இருந்தது.இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பெண்களை பின்தொடர்ந்து வரும் துன்பங்களும் அவமானங்களும் மற்றும் முக்கியமாக அவர்களுக்கு உதவி புரிய முன்வரும் ஆஸ்த்துமா நோயை தன்வசம் கொண்ட (Amitabh Bachchan) தீபக் ஷேகல் என்னும் வயோதிப வழக்கறிஞரின்  சமூகத்திற்கான கேள்விகளுமே கதை அம்சங்கள் என்று கூறலாம்.

பெண்களின் சமூக சிக்கல்கள்,மற்றும் பெண்ணிய சிந்தனைகளைப் பேசும் திரைப்படங்கள் தமிழிலும் பிறமொழிகளிலும் அதிகமாகவே வந்திருக்கின்றன .ஆனாலும் ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையை தைரியமாக முன்மொழிந்து அடித்துக்கூறிட சற்று பதட்டமாகத்தான் இந்திய திரைப்படங்களின் நிலை காணப்படுகிறது.தமிழ்த் திரைப்படத்துறையைப் பொறுத்தவரை, அண்மையில் வெளிவந்த "இறைவி" திரைப்படம் வெளிப்படையாக குறித்த தமிழ்க் கலாச்சாரத்திற்கேற்றால் போல பெண்ணின் பிரச்சனைகளைப் பேச முனைந்து தோற்றும் போய்விட்டது. காரணம் ஆணாதிக்கத்தொனியில் பெண்ணியம் பேசும் ஒரு படமாக கருதப்பட்டது. அதில் வரும் பூஜா தேவார்யா (மலர்) கதாப்பாத்திரம் தவிர அனைத்து கதாப்பாத்திரங்களும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அந்த மலர் கதாபாத்திரத்திரத்திற்கே சமூகத்தில் பயங்கரமான விமர்சனங்கள். ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் என்னை பொறுத்த மட்டில் இறைவி திரைப்படம் தமிழ்க்கலாச்சார சமூகத்தில் பெண்ணியம் பேச முயலும் ஒரு அணுகு முறை என்றுதான் கூறுவேன்.எப்படித்தான் ஒரு பெண் தான் சுயமாக முடிவுகள் எடுக்க முனைந்தாலும் அந்த வழக்கமான ஆணாதிக்க  சமூக கட்டமைப்பும்  சூழலும் எந்த வகையிலும் ஒரு பெண்ணுக்கு இடமளிப்பது மிகவும் சிரமாமன ஒன்று என்பதைப் புலப்படுத்த முனைந்த ஒரு திரைப்படமாகவே நான் கருதுகிறேன்.எனவே அந்த சமூகத்தில் வாழும் பெண்கள்  தங்கள் சுதந்திரத்தை தாங்கள் வாழும் சமூகத்தை மையப்படுத்தி தீர்மானித்துக்கொள்வதாகவே இறைவி திரைப்பட காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

வழக்கமாக பெண்ணுரிமை மற்றும் பெண் தொடர்பான சிக்கல்கள் பேசும் படங்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். தமிழ் திரைப்படங்களில்  இயக்குனர் கே.பாலச்சந்தர் முதற்கொண்டு கார்த்திக் சுப்புராஜ் வரை.இந்த பிங்க் படத்திலும் சரி இதற்கு பின் வந்த பார்ச்ட்படத்திலும் சரி.பெண்களின் சமூக சிக்கல்களை ஒருமைப்படுத்திவிட முடியாது. அந்தளவிற்கு மலிந்து கிடக்கின்றன பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளும். அதற்கேற்றாற் போல சிக்கல்களை விவரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை இயக்குனர்கள் தெரிவு செகிறார்களோ என்னவோ?.

தமிழ்த்திரைப்படத்தில் தனிப்பட்ட ரீதியில் என்னை கவர்ந்த  மற்றும்  அழுத்தமாக பெண் அவளது உரிமையை பேசிய திரைப்படமாக இயக்குனர் ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்" திரைப்படத்தை பெருமையுடன் கூறுவேன். அந்த திரைப்படத்தின் "மஞ்சு" கதாபாத்திரம் இன்றும் என்னால் நினைவுகூரத்தக்க ஒரு தைரியமான கதாபாத்திரம். இந்த திரைப்படத்திலும் பல பெண்களின் வெவ்வேறு பட்ட நிலையை தர்க்க ரீதியாக சமூகத்திற்கு காட்டி இருப்பார் ருத்ரய்யா.

இந்த பிங்க் திரைப்படத்தைப் பொறுத்தவரை எனக்கு மிகவும் பிடித்த விடயம் கதை சொல்லும் பாங்கு (Screenplay).

எடுத்த எடுப்பிலேயே உரிய சம்பவத்தை இலகுவாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் ஒரு சோம்பலை ஏற்படுத்தாமல் நீதி மன்றத்தில் நடாத்தப்படுகின்ற விசாரணைகள் முதற்கொண்டு நடைபெறும் அத்தனை சம்பவங்கள் மூலமும் ரசிகர்களை படம் முடியும் வரை  சிந்திக்கவைத்தது என்றே சொல்லலாம். "அதாவது அன்றய தினம் (Rock Concert) இசை அரங்கு நிகழ்ச்சியில் என்ன சம்பவம்தான்  நிகழ்ந்தது?" என்ற கேள்வியும் கற்பனைகளும் ஒவ்வொரு பார்வையாளனின் மனத்திற்குள்ளேயும் கண்டிப்பாக நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கும். இத்தனைக்கும் எந்த வித வெளிப்படையான ஆபாச காட்சிகள் என்று எதுவுமே இல்லாத நிலையில்.

பெண்கள் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உடலியல் ரீதியாக அதாவது, பாலியல் உறுப்பு சார்ந்தே காலங்காலமாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அதற்கான உதாரண சம்பவம் ஒன்றை இந்த திரைப்படத்தில் காணலாம். மீனல் அரோராவிடம் (தப்சியிடம்) தொலைபேசியில் மிரட்டும் ராஜ்வீரின் நண்பர்களுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக பேச,அவர்கள் கூறுவார்கள் "அவமானப்பட தயாராக இரு" என்று.அதைப் போலவே தப்சியை வாகனத்தில் கடத்தி சென்று அந்த நாள் முழுவதும் அவளது பெண்ணுறுப்பில் நாணயக்குற்றிகளை போட்டு துன்புறுத்தி விளையாடி விட்டு அவளை தெருவில் மறுபடியும் கடத்திய இடத்திலேயே விட்டுச் செல்லும் காட்சி மிகவும் உருக்கமானது. பெண்ணாக பிறந்து பெண்ணுறுப்பைக்கொண்ட ஒரே காரணத்திற்காக காலங்காலமாக பெண்கள் இதை விட பல மோசமான நிகழ்வுகளை அனுபவித்து வருவதனை நாம் இன்று கூட காணக்கூடியதாக உள்ளது.

காலங்காலமாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட, பெண்களால் மாத்திரம் பின்பற்றபட வேண்டும் என வலியுறுத்தப்படும் 'பெண்கள் பாதுகாப்பு கையேடு"       (Rule Book Of the Girl's Safety Manual) பற்றிய தெளிவான பகுத்தறிவாதம் ஒன்றை சமூகத்தை நோக்கி முன் வைத்திருக்கின்றார் வழக்கறிஞர் (அமிதாப்) தீபக் ஷேகல்.

காலங்காலமாக பெண்களை வன்புணர்ந்து விட்டு அதற்கு காரணம் "பாவப்பட்ட ஆண்கள்" கிடையாது; சுதந்திரமாக வெளியில் திரியும் பெண்களின் நடத்தைக்கோலம் தான்  பெண்களை ஆண்கள் வல்லுறவுக்குட்படுத்த காரணாமாக இருக்கின்றது என்றும் மேலும் பெண்களின் நடை,உடை,பாவனைகளை அவர்கள் சீர் செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே சமுதாயம் குறியாக உள்ளது என்பதை வெளிப்படுத்த எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதங்கள் அமைந்துள்ளது.

பெண்கள் தரப்பு வழக்கறிஞர் தீபக் ஷேகல் (அமிதாப்) அந்த பெண்களை சாதாரணமான சமூகம் பார்க்கும் பார்வை நிலையை மீளாய்வுக்குட்படுத்தி இருப்பார். ஆண்ட்ரியாவை விசாரிக்கும் போது அவளது ஊர் பெயர் கேட்கப்படும். (Northeast-Meghalaya-Manipur) வடகிழக்கு-மெகலாயா-மனிபூர்  தன்  ஊர் என்று அந்த பெண் கூறுவார். அதற்கு அமிதாப் இதற்கு முன் விசாரிக்கப்பட்ட ஆண்களிடம் சொந்த ஊர் பற்றி விசாரிக்கபடவில்லை. ஆனால் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரியா விடம் மட்டும் சொந்த ஊர் எது? எனக்கேட்டதில் ஏதோ உள்நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்று கூறுவார். உடனே  அந்தப்பெண்  "சாதாரண இந்தியப் பெண்கள் சந்திக்கும் பாலியல் அச்சுறுத்தல்தொல்லைகளை விட வடகிழக்கு மாநில பெண்ணாக  நான் வீதிகளில் அதிகமான தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகிறேன் என்று நினைக்கிறேன்" என்று கூறுவார். இந்த விடயம் எனக்கு புதுமையான ஒன்றாக இருந்தது. இதைப்பற்றி அறிய முற்பட்ட போது பின்வரும் விடயங்கள் பதிலாக கிடைத்தன. "மெகலாய பிரதேசத்தில் அதிகளவில் வறுமை காரணமாகவும் யுத்தநெருக்கடி காரணமாகவும் இளம்பெண்கள் விபச்சாரத்திற்குள் வற்புறுத்தி தள்ளப்படுகின்றனராம். அத்தோடு யுத்த கள நிலையில் பெண்கள் அதிகமாக இந்திய ராணுவங்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்த பட்டனராம். மேலும் இந்த இடம் "உயிர்கடத்தி  விபச்சாரம் செய்யும் மற்றும் விநியோகம் செய்யும் பிரதான தளமாகஇருப்பது அறியக்கிடைத்தது. எனவே வன்புணரப்படும் பெண்கள் வாழும் ஊரில் இருந்து ஆண்ட்ரியா வருவதால் அவளுக்கு பாலியல் அச்சுறுத்தல் எல்லாம் ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கமாட்டாது என்பதை நிறுவுவதற்காகவே எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஊரின் பெயரை அடையாளப்படுத்தி கேட்டிருப்பார். ஆக ஊரின் நிலைப்பாட்டை வைத்து ஒரு பெண்ணின் குணங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பார்த்தால் பம்பாய்,டெல்லி,கல்கத்தா போன்ற ஊர்களில் "சிவப்பு விளக்கு பகுதி"(Red light area) என்று அரச அனுமதியுடனேயே பாலியல் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இந்த ஊர்களில் வசிக்கும் அல்லது கல்வி கற்கும் பெண்களை நாம் எத்தகைய கண்களைக் கொண்டு பார்ப்போம் என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ஊரின் ஒரு சில இடங்களில் நடக்கும் செயற்பாடுகளை கவனத்திற்கொண்டு ஒட்டு மொத்த ஊர்  பெண்களின் குணங்ககளையும் தீர்மானிப்பது எவ்வளவு மடத்தனமான ஒன்று என்பதை சிந்தித்துப்பார்த்ததுண்டா? இலங்கையில் கூட நாகரிக வளச்சியடைந்த ஒரு சில நகரங்களில் வெளிப்படையாகவே  பாலியல் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அந்த நகரங்களுக்கு கல்வி  கற்க செல்லும் பெண்களை ஏளனமாக பார்க்கும் சமூகமும் இருக்கத்தான் செய்கின்றன. இது என்ன? பல்கலைக்கழகம் சென்ற மாணவி என்றாலே "அவள் கன்னித்தன்மையை இழந்த பெண்" என்று வாதிடும் அடி  முட்டாள்தனமாக சிந்திக்கும் அறிவு மேதையான ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றனர் .(பெண்களுக்கு மட்டுமான கன்னித்தன்மை பற்றிய சிக்கலை வேறு கட்டுரையில் பார்ப்போம்)  "இங்கு நம் சமூகத்தில் பெண் வெளியில் செல்வதே சிக்கலான ஒன்று. வீட்டில்தான் பூட்டி வைக்க வேண்டும். இல்லை எனில் அவசரமாக திருமணம் செய்து கொடுத்து பாரத்தை இறக்கி விட வேண்டும்". இது இன்றும் பெண்களுக்கு மாத்திரம் விதிக்கப்பட்ட புழக்கத்தில் இருக்கும் மடத்தனமான பாதுகாப்பு அறம்.

இந்த திரைப்படத்தில் வழக்கறினராக வரும் அமிதாப்பின் ஒரு வித குரல் நடுக்கத்துடன் கூடிய ஆணித்தனமான பேச்சில் இயல்பான பெண்ணின்  நடத்தையை ஆண்மனம் எவ்வாறு புரிந்து கொள்கிறது? என்பது பற்றி படம் முழுக்க உரையாடி இருப்பார். ஆண் மனம் மட்டும் அல்ல முழு சமூகமும் எவ்வாறு புரிந்து கொள்கின்றது?. சமூகத்தை நையாண்டி செய்தவண்ணம் சமூகத்தால் திணிக்கப்பட்ட 'பெண்கள் பாதுகாப்பு கையேடு" (Rule Book Of the Girl's Safety Manual) என்று கூறி பட்டியலிட்டுக்கொண்டு போவார். அந்த பட்டியலை இன்றய நம் சமூக நிலைப்பாட்டை தெளிவு படுத்த இலகுவாக  இங்கு  முன்வைத்து விடுகிறேன்.

1.ஒரு பெண் ஒரு ஆணுடன் எந்த ஒரு இடத்திற்கும் தனியாய் செல்லக்கூடாது. அது ஒரு விடுதியாக இருக்கட்டும் அல்லது ஒரு கழிவறையாக இருக்கட்டும்.அவ்வாறு அந்தப்பெண் ஒரு ஆணுடன் அவசரத்திற்கு என்றாலும் செல்லுவதானது சமூகத்தின் பார்வையில் அந்த பெண் அவளை விரும்பியவாறு உடலியல் ரீதியாக உடன் வந்த ஆண் அனுபவிக்க அனுமதி அளித்தது போலாகும்.

2.எப்போதும் பெண்கள் ஆண்களிடம் பேசும் போது சிரித்துப்பேச கூடாது .வெளிப்படையாக பேசக்கூடாது. செக்ஸ் நகைச் சுவைகள் பேசக்கூடாது. அவ்வாறு சிரித்துப் பேசிக்கொண்டே அவர்களை தொட கூடாது. இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும்,குறிப்பாக அந்த பெண்ணின் சிரிப்பு "தனக்கு உடலியல் ரீதியாக ஓர் ஆண் என்ன செய்தாலும் 'ஆம்' என்று அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் பெண் இருக்கிறாள்என்று அருகிலுள்ள ஆண்களும் சமூகமும் கருதுகின்றது.
3.ஒரு பெண்ணின் குணத்தை கடிகாரம் தீர்மானித்துவிடுகிறது.ஒரு பெண் இரவில் நேரம் தாழ்த்தி வந்தால் அவள் ஒரு தவறான நடத்தை கொண்ட பெண்.

4.ஒரு பெண் எப்போதும் ஆணுடன் "மது" அருந்த கூடாது. அவ்வாறு ஒரு பெண் ஆணுடன் மது அருந்தினால் அவள் அவனுடன் படுக்கைக்குச்செல்ல அந்த ஆணுக்கு அனுமதி அளித்தது போலாகும்.

5.ஒரு பெண் தனியாக வாழ முடியாது,மேலும் அவள் விருப்பம் போல ஆடை அணிகலன்கள் அணிய முடியாது.

மேலே கூறப்படட அனைத்தும் காலங்காலமாக பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு சமூகத்தால் கொடுக்கப்படும் விதிமுறைகள்,மற்றும் சமூகம் பெண்களின் குணங்களை கணக்கீடு செய்யும் முட்டாள்தனமான ஆணாதிக்க கையேடு.


 நாம் தெளிவுற வேண்டிய ஒன்று, நவ நாகரீகமாக வளர்ந்து வரும் இந்த உலகில் ஆண்கள் மாத்திரம் நாகரீகத்தினுள் உள்வாங்கப்பட வேண்டும் பெண்கள் உள்வாங்கப்படக்கூடாது என்பது எல்லாம் எத்தகைய சாத்தியமான வார்த்தைகள் என்று தெரியவில்லை. மது அருந்துவது  பெண்களுக்கு குணக்கேடான ஒரு விடயம்; ஆனால் ஆண்களுக்கு வெறும் உடலில் தீங்கு விளைவிக்கும் ஒரு செயற்பாடு.இது என்ன வகை சமூக நியாயம்?.குடிப்பது உடல் நலத்திற்குக்கேடு.அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. "நல்ல குடும்பத்தில் பிறந்த பெண் குடிக்க மாட்டாள்" என்பதெல்லாம் மூட நம்பிக்கை வாதங்களாகவே தெரிகிறது.

புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகள், இன்ன பிற சமூக நிகழ்வுகளில் பெண்களின் மாரைக்கசக்கிய சம்பவம்,பெண்ணுறுப்பைக் கூட்டத்தில் வைத்து அழுத்திய சம்பவங்கள் என்று பல பரவலாக கேள்விப்படக்கூடியதாக தான் இருக்கின்றது. இன்றய நவநாகரீக உலகில் "சுதந்திரமான ஒரு பெண்ணை பற்றி" ஆண்கள் தங்கள் மனதுக்குள் போட்டு  குழப்பிக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. ஆனால் பெண்கள் தங்கள் உடலளவிலும் மனதளவிலும் பெண்களாகவேதான் இருக்கின்றனர். இப்படி ஒரு நிகழ்வை கற்பனை செய்து  பார்க்கவும்."புது வருட கொண்டாட்ட நிகழ்வொன்றில் ஒரு பெண் ஒரு ஆணின் ஆணுறுப்பை கூட்டத்தில் வைத்துக் கசக்குகிறாள்" என்றால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. அப்படி என்றாலும் அந்த செயற்பாட்டை பெரும்பாலும் ஆண் என்பவன் ஒரு கொண்டாட்ட மாகத்தான் கருதுவான். இது காலங்காலமாக சமூகத்தில் நிகழ்த்தப்பட்டு வரும் ஒரு கற்பிதம். ஆரம்ப காலத்தில் இருந்தே "ஒரு பெண் தனது  உடலைப் பார்க்கக்கூடாது ,அதனை தொடக்கூடாது ,அந்த பெண் உடலை பிறர் தொடவும் அனுமதிக்ககூடாது என்று தான் பல விதிமுறைகளுடனும் எச்சரிக்கைகளுடனும் ஒரு பெண் வளர்க்கப்படுகிறாள்". ஆனால் ஆணுக்கு அவ்வாறான எந்த வித தடைகளும் கட்டுப்பாடுகளும் சொல்லிக்கொடுத்து வளர்க்கப்படவில்லை என்று தான் கூறுவேன். அவ்வாறு ஒவ்வொரு ஆணுக்கும் "பிறரது  உடல் அவரது உரிமை .அவரது அனுமதி இன்றி அவரது உடலை தொடக்கூடாது". என்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தால் இவாறான சம்பவங்கள் நடக்காமல் இருந்திருக்குமோ என்னமோ?

இதைத்தான் அமிதாப் ஆங்கிலத்தில் கூறுவார்
.
"We Should Save Our Boys;Not Our Girls.Because If we Save Our Boys the our Girls Will be Safe"

நாம் பாதுகாக்க வேண்டியது நம் ஆண் பிள்ளைகளை; பெண் பிள்ளைகளை அல்ல.ஏனெனில் நமது ஆண் பிள்ளைகளை பாதுகாத்தால் பெண்கள் எப்போதும் பாதுகாப்பாகவே இருப்பார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் அமிதாப், ( Meenal arora )தப்ஸியிடம் "நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா?,,எத்தனை வயதில் உன் கன்னித்தன்மையை இழந்தாய்?" போன்ற கேள்விகளை முன்வைப்பார். இந்த கேள்விகள் தப்ஸி உட்பட நீதிபதி, எதிர்த்தரப்பினர் மற்றும்  பார்வையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. இப்படியான கேள்விகளைப்பார்க்கும் போது இவை சரியான கேள்விகள்தானா? இந்திய அரசியல் சட்டத்தின்படி இவ்வாறான கேள்விகளுக்கு அனுமதிகள் உண்டா?அல்லது ரசிகர்கள் கவனத்தை திரைப்படம் ஈர்க்கவேண்டும் என்பதற்காக இவ்வாறான அந்தரங்க கேள்விகள் வெளிப்படையாக கேட்கப்படுகின்றனவா? என்னும் கேள்விகள் என்னுள் எழுந்தது.இதைப்பற்றி தேடியதில்,"சட்டத்தில் பொது ரகசியங்கள்- இந்தியாவில் பாலியல் பலாத்கார விசாரணைகள் "(Public secrets Of Law : Rape Trails in India) என்னும் நூலில் இந்திய நீதிமன்ற விசாரணைகள் எந்த முறையில் விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப்பற்றி எழுதி இருக்கிறார்.பாதிக்கப்பட்ட பெண்ணை தரையில் நடந்த சம்பவத்தை ஒரு முறை நடித்துக்காட்டிட சொல்லும் சம்பவங்களும் இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.இது என்ன?.வட இந்தியாவில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதன் விளைவால் அந்தப்பெண் புகார் செய்து வழக்குத்தொடரப்பட்ட நிலையில் அங்கே கேள்வி கேட்ட வழக்கறிஞர் அந்த பெண்ணிடம் "அவன் எந்த இடமெல்லாம் உன்னை தொட்டான்?,எந்த இடத்தில் இருந்து ஆரம்பித்தான்?அவனது ஆண்குறியின் நீளம் என்ன?" போன்றவினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளதாம்.இது பதிவு செய்யப்பாடாத சம்பவம்.இது போன்ற இன்னும் பல சம்பவங்கள் உண்டு.இதை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் பகிர்ந்து கொண்டார்கள்.அதற்காக அந்த நிகழ்ச்சியே முற்றாக தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்டார் வேர்ல்ட் (Star World) என்னும் தொலைக்காட்சியில் ஹிந்தி மொழியில் நடாத்தப்பட்ட சத்தியமேவ் ஜெயதே"(Satyamev  Jayate)என்னும் நிகழ்ச்சி. இதனை நடிகர் அமீர்கான் மிகுந்த சமூகப்பொறுப்புடன் நடாத்தி வந்தார்.தமிழில் விஜய் டிவி மொழி பெயர்ப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது.இப்போதும்  இந்த நிகழ்ச்சி தொகுப்புகளை யூடியூப்பில் காண முடியும்.இதனைப்பார்க்கும் போது இந்தியாவின் வன்புணர்விற்கான சட்ட அமைப்பு எந்த அளவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை நாம் காண முடியும்.அதிலும் ஒரு பெண் வன்புணர்வுச் செயற்பாட்டிற்கு பின்னும் எந்த அளவு சமூக சட்டதிட்டங்களினால் துன்புறுத்தப்படுகிறாள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி இருக்கும். எதிர்த்தரப்பு வாதி பெண்களிடம் கேட்ட கேள்விகள் மற்றும் அமிதாப் கேட்ட கேள்விகள் அனைத்தும் ஏற்புடைய கேள்விகள் தானா ? என்றால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.இந்திய அரசியலமைப்பு சடடத்தின் படி சரியானதுதான்.


தப்சியிடம்  அமிதாப் கேட்ட கேள்வி பதில்களை நோக்கினால் சமூகம் தன் நிலைப்பாட்டை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.

"நீ கன்னித்தன்மையுடன் இருக்கிறாயா?

இல்லை

எப்போது உன் கன்னித்தன்மையை இழந்தாய்?

19 வயதினிலே.

யாருடன் உறவு கொண்டாய்?

அனீஷ் ,என்னுடைய காதலன்.

அவன் உன்னுடன் உறவு கொள்ள உனக்கு பணத்தொகை ஏதும் செலுத்தினானா?

இல்லை.எதற்கு அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்?நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம்,ஒருவர் ஒருவரால் கவரப்பட்டோம்.

அவன் உன்னை வற்புறுத்தி உறவு கொண்டானா?

இல்லை.அவன் என்னை வற்புறுத்தவில்லை, எனக்கு பணம் செலுத்தவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பினோம். உறவு கொள்ள எண்ணி அதனை செய்தோம்.

அதன் பின்னர் கூட ஒரு சில ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டதாக உன் நண்பன் விஷ்வா காவல்துறையில் உனக்கெதிதிராக சாட்சி கூறி இருக்கிறான். நீ அவர்களுடன் எல்லாம் உறவு கொண்டாயா?

இடைக்கிடை எனக்கு விருப்பமான ஒரு சிலருடன் உறவு கொண்டிருக்கிறேன்.

இந்த கேள்வி விடைகள் மூலம் சமூகத்துக்கு சொல்ல நினைக்கும் விடயம் இதுதான்.நான் முதல் பத்தியிலேயே கூறி இருப்பேன்.

"அவரவர் விருப்பம் போல அவரவர் வாழ்க்கை,அவரவர் உடல் அவரவர் உரிமை,இருவர் விரும்பி மேற்கொள்ளும் உறவில் எந்த வித சிக்கலும் ஏற்பட போவதில்லை.அது கொண்டாட்டமும் இன்பமுமாகத்தான் இருக்கும்."

இங்கே நாம் பெண்ணியம் என்று கூவுவதை விட தெளிவுற வேண்டிய விடயம் ஒன்றே ஒன்றுதான். "வன்புணர்வு" என்னும் செயற்பாடு எங்கு ஆரம்பிக்கப்படுகின்றதென்றால் காலங்காகாலமாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட ஆண் என்னும் அதிகாரத்தொனியுடன் அவனது 'ஆணுறுப்பை' சுய கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல், உளவியல்  மற்றும் உடலியல் ரீதியாக தடுமாறும்  ஒருவன்தான் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு குழந்தையையோ உடலியல் ரீதியாக துன்புறுத்தியாவது அடைந்து கொண்டு தன் ஆண்குறியை ஓரளவு சமாதானம் செய்து தன் இருப்பை நிரூபித்து தான் ஒரு ஆண் என்பதை காட்டிட முனைகிறான். இங்கே ஒரு ஆண் ஒரு பெண்ணை நெருங்க நினைக்கையில் அந்த பெண் அதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை என்றால் வன்புணர்வு என்னும் பேச்சுக்கே இடமில்லை. இதை நான் சொல்லும் போது, "அப்போ யாருடன் வேண்டுமானாலும் யாரும் உறவு கொள்ள முடியுமா?" என்னும் வினா உங்களுக்குள் தோன்றலாம். இதற்கான பதில் நிச்சயமாக என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். இது தன்னிலை சார்ந்து முடிவு செய்ய வேண்டிய விடயம்.

தப்சியின் வாயாலேயே தன் உண்மை நிலை பற்றி சமூகத்துக்கு தெளிவு படுத்தியது மேலே உள்ள  சம்பவம்.மேலும் தப்ஸி,அமிதாப் இருவரும்  பூங்காவில் நடைப்பயிற்சியில் வரும்போது இரு ஆண்கள் தப்ஸியைப் பார்த்து கிண்டலாக அவளைப்பற்றி ஏதோ சொல்ல அவள் தலையை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பிப்பாள்.அதனைப்பார்த்த அமிதாப் தலையை மூடிய துணியை எடுத்து விடுவார். இந்த சம்பவம் "இதாண்டா நான். இவ்வளவு தாண்டா நான்.இதில் உங்களுக்கு என்னடா பிரச்சனை?" என்று முழு சமூகத்துக்கும் பெண் தன் இருப்பை,தன் நிலையை ஏற்றுக்கொள்ளச் செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்   

"ராஜவீர் உன்னுடன் வற்புறுத்தி உறவு கொள்ள வந்த போது என்ன சொன்னாய்? என்ன வார்த்தைஉபயோகப்படுத்தினாய்என்ன வார்த்தை கூறி தடுத்தாய்?என்று திணித்து கேட்ப்பார் அமிதாப்.



I Said "No""Don't" "No" இல்லை,வேண்டாம். என்று சொன்னேன் என்று கூறுவார் தப்ஸி.

இது தான் இந்த திரைப்படம்  கூறும் நீதி மற்றும் பெண்ணுரிமை.

அதை தெளிவாக இறுதியில் அமிதாப் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தன் வாதத்தை முடித்துக்கொண்டு அமைதியாக அமர்வார்.


"No.
She said No.
No isn’t just a Word, it's a complete sentence.
it doesn't need any Further explanation.
"No" Simply Means "No"
And these boys must realize that "No" means "No".
Whether the girl is an acquaintance a friend, a girl friend, a sex worker, or even your wife "No" means "No".
And someone says so..  You stop."

(NO)வேண்டாம்/இல்லை/முடியாது.

அவள் முடியாது என்று கூறினாள்.

முடியாதுஎன்பது வெறும் ஒரு சொல் அல்ல.அது ஒரு முழு நீளமான வார்த்தை. இந்த வார்த்தைக்கு எந்த வித மேலதிக விளக்கங்களும் தேவை இல்லை. இல்லை/ வேண்டாம்/ முடியாது  என்றால்  அதற்கு இலகுவான பொருள் முடியாது. என்பது மட்டுமே.

இந்த ஆண்கள் கண்டிப்பாக உணரவேண்டும். முடியாது என்றால் முடியாது தான். ஒரு பெண் உங்களுக்கு அந்நியமானவளாக இருந்தாலும் சரி, தெரிந்த ஒரு பரிச்சயமான பெண்ணாக இருந்தாலும் சரி ,உங்கள் காதலியாக இருந்தாலும் சரி ,ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஏன் நீங்கள் திருமண முடித்த உங்கள் மனைவியாக இருந்தாலும் சரி. அவள் வேண்டாம் என்று சொன்னால் வேண்டாம் என்றுதான் அர்த்தம். அப்படி நீங்கள் பெண்ணிடம் உறவு கொள்ள நெருங்கும் போது அந்த பெண் "வேண்டாம்"(NO)  என்னும் வார்த்தையை உபயோகித்தால்  நீங்கள் உறவு கொள்ள மேற்கொள்ளும் முயற்சியை நிறுத்தி விட வேண்டும் .அடுத்த கட்டம் அந்த பெண்ணுடன் உறவு கொள்ள எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளக்கூடாது. நான் அறிந்து ஒரு சில தமிழ்த் திரைப்படங்களில் காதல், காம விடயங்களில் "ஒரு பொண்ணு வேணாம் எண்டு சொன்னா வேணும் என்று அர்த்தம்டா" இது போன்ற வசனங்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த காலக்கட்டத்தில் பெண்கள் தங்கள் உடலியல் விடயங்களில் மிகவும் தெளிவாகவே உள்ளனர். அவர்களுக்கு எது தேவை? எது தேவை? இல்லை என்று அவர்கள் முடிவெடுக்க உரிமை பெற்றவர்களே.

இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் அந்த வகையில் (Shoojit Sircar) சுஜித்சர்க்கார், (Ritesh Shah) ரிதேஷ்ஷா வாழ்த்துக்கள்.அமிதாப் பேசும்போது விபச்சாரி” (prostitute) என்னும் வார்த்தையை கூட பயன்படுத்தி இருக்க மாட்டார். மாறாக பாலியல் தொழிலாளி” (Sex workers) என்னும் வார்த்தையை உபயோகப்படுத்தி இருப்பார். இதிலிருந்து பெண்கள் குறித்த பார்வையை எந்தளவுக்கு  சமூகத்திடம் முன்வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தி இருக்கும். என்னை பொறுத்த மட்டில் பாலியல் தொழில் என்பது பெண்கள் பெண்களுடன் கொள்ளும் உறவு நிலை கிடையாது. வணிக ரீதியில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உறவு கொள்கையில் எப்படி பெண்ணை மாத்திரம் வேசி, விபச்சாரி என்று அழைத்து அசிங்கப் படுத்த முடியும்?.

இதையே பெரியார் "பெண் ஏன் அடிமையானாள்?' என்னும் நூலில் பத்து விதமான விடயங்களை முன்னிறுத்தி முழு ஆணாதிக்க சமூகத்தையும் கேள்வி கேட்டிருப்பார். அதிலே இந்த "விப்பாச்சாரம்"  பற்றிய கட்டுரையில்  அடுக்கடுக்கான விவாதங்களை முன் வைத்திருப்பார் பெரியார். அதனை பொறுமையாக வாசித்து,தத்தம் சமூகத்தை நோக்கிய சிந்தனைகளை பகுத்தறிவு ரீதியாக முன்வைக்கும் போது விபச்சாரம் என்பது, பெண்களை அடிமைப்படுத்தி "பெண்கள் அடிமைகள்" என்னும் கருத்தியலை நிறுவி  பெண்மீது மாத்திரம் பழி போட்டுவிட்டு புலம்பித்திரியும் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்கமைய சமூகத்தில்தான் நாம்  இருக்கிறோம் என்பதை நம்மில் பலர் மறந்துதான் போய் விடுகிறோம்  என்பதையும் உணர்த்தி இருக்கும்.

இந்த திரைப்படம் ஒரு "நீதிமன்ற நாடக வகை" (Court Drama) யைச் சேர்ந்ததனால் நீதி மன்றத்தின் யதார்த்த வடிவமைப்பில் அனைவரின் கவனமும் குவிந்திருக்கலாம்.நான் அறிந்து கோர்ட் (Court) என்னும் மராத்தி மொழிப்படத்தில் நீதிமன்றக்காட்சிகள் அவ்வளவு யதார்த்தமாக காட்சிப்படுத்தப்படுத்த பட்டிருக்கும். அப்படி பார்க்கும் போது பிங்க்  திரைப்படத்தில் நீதி மன்ற யதார்த்தக்காட்சி குன்றியதாகவே காணப்பட்டது.

திரைப்படத்தில் அமிதாப்பின் நடிப்பை பொறுத்தவரை புதிதாக பாராட்டிட ஒன்றுமே இல்லை.வழக்கமான அட்டகாசமான யதார்த்த நடிப்பு. 2015இல்   இதற்கு முன்னர் வந்த "பிகு" (Piku) என்னும் திரைப்படத்திலும் மிகவும் யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். நாடகத்தனங்கள் இல்லாத யதார்த்த நடிப்பு, தமிழ் திரைப்படங்களில் பாரியளவில் பேசப்பட்ட ஒரு நடிகர் அமிதாப்தெரிவு செய்யும் கதாப்பாத்திரங்களை தெரிவு செய்வார்களா? என்பது சந்தேகத்திற்கு இடமான ஒன்று. அடுத்து  தமிழ்த்திரைப்படங்களில் வெறும்  காட்சிப் பொம்மையாக மட்டுமே தோன்றும் நடிகை தப்ஸியின் நடிப்பு "சபாஷ்".இந்த பிங்க் திரைப்படத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் தப்சியின் கதாப்பாத்திரத்தை விட "பலக் அலி"  (Kirti Kulhari) யின் ஒரு பண்பட்ட மனநிலையில் இருக்கும் யதார்த்தமான நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.

திரைப்படத்தில் குறைகள் என்றால் திரைப்படத்தில் அமிதாப்பின் முதற்கட்ட நுழைவு(First Entry) சற்று திணிக்கப்பட்ட காட்சி கதாப்பாத்திரம் போல செயற்கையாக இருந்தது எனலாம்.அதாவது, "சிக்கலில் மாட்டி கொண்ட  அந்த மூன்று பெண்களையும் காப்பாற்றுவதற்காகவே" திணித்து நுழைவிக்கப்பட்ட ஒரு ஆண் கதாப்பாத்திரமாகவே அமிதாப்பின் அறிமுகத்தை சொல்லலாம். இந்த கதாப்பாத்திரம் வழக்கமான இந்திய சினிமா வகையை நினைவூட்டியது. மற்றது அடுத்ததடுத்த கட்டங்கள் அதை இயல்பாகவே பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கும். படத்தின் கதை,வசனங்கள்,சம்பவங்கள்,கதை சொல்லும் பாங்கு என்பனவற்றில் இயக்குனர் சிறப்பான யுக்தியை கையாளப்பட்டிருப்பதால் இந்த தவறுகள் பெரிதாக வெளிப்படவில்லை எனலாம்.



இறுதியாக,இந்த திரைப்படத்திற்கு எதற்காக "பிங்க்"(Pink) என்னும் நிறப்பெயர்  வைக்கப்பட்டது? அதிகமாக நிறங்கள் உளவியல் பேசும் தன்மை கொண்டது. அந்தவகையில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் "பிங்க்" நிறத்திற்கான உளவியல் கூறும் கருத்துக்களாக ,வசீகரிக்கும் அழகு, அமைதி, மென்மை, கூர்மையான உணர்திறன், இனிமையான, குழந்தைபருவம், பெண்மை, காதல்தன்மை போன்றன காணப்படுகின்றன. இவை ஒருபுறம் இருக்க காலங்காலமாக குழந்தைகள் பிறக்கின்ற போது பாலின வேறுபாட்டை வெளிப்படுத்தும் முகமாக ஆண்களுக்கு "நீல" நிற ஆடை அணிவிப்பது, பெண்களுக்கு "பிங்க்" நிற ஆடை அணிவிப்பது  ஒரு பழக்கமாக இருந்தது. அத்துடன் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு "சிவப்பு" நிற அடையாளம் என்றவாறு ஒரு சமூக கட்டமைப்பு மற்றும் திணிப்பு இதில் உண்டு. ஆரம்ப காலத்தில் பெண்களுக்கு சிவப்புடன் சார்ந்த நிறங்களில் விருப்பம் அதிகம்; எனவே அனைத்து பெண்களுக்கும் இதைத்தான் விரும்புவார்கள் என்னும் மூட நம்பிக்கை சமூகத்தின் மத்தியில் தோன்றிற்று.                                                                                                                                                                          
இதை விட ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் இதில் உற்பத்தியாளர், விற்பனையாளர், நுகர்வு கோட்ப்பாட்டு விதிகள் அதிகமாக உள்வாங்கப்பட்டுள்ளன. அது பலரின் கண்களுக்கு தெரிவதில்லை. இவை தான் பெண்களுக்கான ஆடைகள், இவைதான் ஆண்களுக்கான ஆடைகள், இந்த வாகனம் பெண்களுக்கானது, இந்த வாகனம் ஆண்களுக்கானது, என்பவை உட்பட பாலின வேறுபாட்டை மையப்படுத்தி பாரிய வணிக மேதற்காலத்தில் நடைபெறுகின்றது. 

ஒருகாலக்கட்டத்தில் பெண்குழந்தைகளுக்கான ஆடைகள் என்றால் அது "பிங்க்" நிறம் தான். அது இன்றும் கூட புழக்கத்தில் இருந்து வருகின்றது. இவை அனைத்தும் சமூகம் கட்டமைத்தவைத்தான் என்பது போலவே பெண்களின் இருப்பு மற்றும் இன்ன பிற நடவடிக்கைகளும் சமூகத்தால் கட்டமைக்கபட்டவையே என்பதை  நிரூபித்து காட்டி பிங்க் நிறத்தின் மீது பூசப்பட்ட போலிகளை உடைத்தெறிகிறது இந்த "பிங்க்" என்னும் திரைப்படம்.

இதை விட நாகரீகமா இலகுவாக நம் சமூகத்துக்கு விளக்கம் கொடுக்க முடியுமா என தெரியவில்லை...?

- அத்தியா -

18 comments:

  1. பெண்களை பெண்களின் மனநிலையில் இருந்து பார்க்க உதவிய பதிவு. கட்டற்ற சுதந்திரம் உடையவன் ஆண் என்பதிலிருந்து வரையறுக்கப்பட்ட சுதந்திரம்தான் ஆணுக்கு என உணர்த்தியது. நீளத்தை குறைத்து இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்கள் BulBul.

    ReplyDelete
  2. Tonnes of love...


    I didnt watch the film yet, but u have literally brought it into my eyes, such a beautiful narration ..



    You are one amazing character dude...



    Love you bulbul...

    ReplyDelete
  3. எனக்கு இந்த கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. என்னுடன் ஆய்வு மேற்கொள்ளும் மாணவிகளுக்கும் சில இலக்கிய வாட்ஸ்அப் குரூப்புகளுக்கும் அனுப்பினேன். பலரும் இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதே எனது கருத்து. நவீன பெண்ணைவிட நாணப்படும் கூச்சமுடைய பெண்ணையே பலரும் விரும்புவது நேர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பெண் பிறரின் விருப்பத்திற்கிணங்க வாழ்வதுதான் இங்கே சிக்கல். அவரவர் விருப்பம் போலத்தான் அவரவர் வாழ்க்கை இருக்க வெண்டும் என்பது என் கருத்து.யாரும் யாரையும் வற்புறுத்த வேண்டாம்.அவரவர் வாழ்க்கையை வேறுபட்டு வாழ உடன் பட்டாலே போதும்.shinu

      Delete
    2. எனது எண்ணமும் அப்படியே..

      Delete
  4. ட்ரைலர் பாக்கும் போதே பாக்கணும்னு நினைத்த படம் ஹிந்தி தெரியாது

    ReplyDelete
  5. ஆழமான கட்டுரை.செக்ஸ் வொர்க்கர் என்கிற சரியான பதப்பயன்பாடுபோல, கற்பழிப்பு என்கிற பதத்திற்கு பதிலாக பாலியல் பலாத்காரம்,வன்புணர்வு போன்ற பதங்களையே பயன்படுத்த இந்த சமூகத்தை பழக்கப்படுத்த வேண்டும்.manual book for girl's framed by this so called societyகுறித்த சரத்துக்களை ஆணாதிக்க சமூகத்தை ஆதரிக்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் மந்த செவிகளில் உரைக்கிற மாதிரி திரும்பத்திரும்ப செல்ல வேண்டும் புல்புல்.
    Teen, waiting, straw with a Margareta கூட புல்புல் இப்படி எழுத வேண்டிய பெண்மையின் மெய்யான அகம் தொடும் படங்களே.விருப்பப்பட்டு உறவு வைத்துக் கொள்வதென்பது தனிநபர் உரிமை. அதில் அத்துமீறி பிரவேசிக்கிற சமூகத்தை 'மஸான்' திரைப்படம் தோலுரித்து காட்டி இருக்கும். அதையும் புல்புல் இப்படி அற்புதமாய், ஆழமாய் எழுதலாம். தொகுத்து நாம் நூலாக கொண்டு வரலாம்.

    ReplyDelete
  6. Kulashekar T
    (தி.குலசேகர்)

    ReplyDelete
  7. வெளிச்சத்தில் நான்.. நன்றி

    ReplyDelete
  8. பெண்ணடிமைத்தனம் இன்னும் ஏன் பெரும்பான்மையாக இருக்கிறது ,ஜெயித்துக் கொண்டிருக்கிறது என்றால் ஆணாதிக்க மனப்பான்மையை பெண்கள் மனதிலும் ஆழ விதைத்ததால் தான்!!! நம்ப பெரும்பாலான இலக்கியங்களை பாருங்கள் மகாபாரதத்தில் தன் அனுமதியின்றி தன்னையே சூது வைத்து தோற்ற தர்மனை பாஞ்சாலி மனித்து விடுகிறாள்!!!!
    தன் கற்பின் பொருட்டு தீக்குளிக்க சொன்ன ராமனை மனித்து விடுகிறாள் சீதை!!!இன்னொருத்தி வீட்டில் கிடந்து எல்லாவற்றையும் இழந்து வருகின்ற கோவலனை மனித்து விடுகிறாள் கண்ணகி!!! இவைகள் எல்லாமே ஆண்கள் அழுக்குற்றிருந்தாலும் மனிப்பை மட்டுமே பெண்கள் கொடுத்து அப்பழுக்கற்றவர்களாகவும் , கல்லானலும் கணவன்,புல்லானாலும் புருசன் என அடிமை மனோபாவத்தை ஏற்படுத்துவதாகவே தோன்றுகின்றன.....இதை மீறும் பெண்கள் மீது மற்ற பெண்களே பொன்னுக்கு பொறுமை வேணாமா??? புருசன் னா பொறுத்து தான் போகனும் !!! என்று பேசுவதில் ஆணாதிக்கம் வென்றுவிடுகிறது!!!
    பெண் சுதந்திரம் என்ற உடனே இங்கே பல கேள்விகளும் இயல்பாக எழுகின்றன..!!!

    பெண் சுதந்திரம் என்பது
    ஆடைக் குறைப்பில் அல்ல!!!
    அத்துமீறுபவரை அடையாளப்படுத்துவதில்....
    பெண் சுதந்திரம் என்பது
    பூமி அதிர நடப்பதில் அல்ல!!
    உண்மையை உரக்க சொல்வதில்.....

    பொதுவாக இங்கே நான் ஆடைக் குறைப்பு பற்றி சொன்னதற்கான காரணம் இந்திய இளைஞர்கள் தான் மற்ற எல்லா நாட்டினரையும் புலனின்ப வறட்சி உடையவர்கள்!!உயிரினங்களை எடுத்துக் கொண்டால் தன் தேவைகளை குறிப்பிட்ட காலம் வந்தவுடனே பூர்த்தி செய்து கொள்கின்றன...ஆனால் நம் நாட்டில் ஆணின் திருமண வயது 21 !!! எத்தனை பேர் 21 வயதில் திருமணம் செய்கிறார்கள்....???21 வயதில் அவன் திருமணம் செய்ய ஆசைப்பட்டாலும் முடியுமா? பெற்றோர் முதற்கொண்டு அவன் வருவாய்க்காக காத்துக் கொண்டிருப்பார்கள்... 25 வயதில் திருமணம் புரிபவன் அரசாங்க வேலையில் இருப்பான் இல்லையென்றால் வசதியானவனாக இருப்பான்..இவர்கள் முப்பது சதம் தான் ஆனால் மீதி இருக்க எழுபது சதம் வேலைக்கு போயி ,கடன் கட்டி, உடன் பிறந்தவர் இருந்தால் அவர்களை படிக்கவோ அல்ல திருமணமோ செய்ய வைத்து எல்லைகள தாண்டி 29 வயதில் தான் திருமணத்தில் வந்து நிற்பான்!! அதனால் நம்ப ஆட்கள் கொஞ்சம் கவர்ச்சியில் கிரங்ககூடியவர்கள் தான் !!! அது தான் சில சமயம் அவர்களை எல்லை மீற வைக்கிறதோ என்ற எண்ணம் எனக்கு....ஆடைக் குறைப்பு அவரவர் இஷ்டம் ஆனால் என் பார்வையில் படும் கருத்துக்கள் இவை.....

    #பெண்ணே பயம் வேண்டாம்
    #பெண்ணே துணிவு கொள்
    யானை ஈனும் பிரசவ வலியை விட மூன்று மடங்கு அதிகம் தாங்கும் எஃக்கை போன்றவள்

    ReplyDelete
  9. அருமையான பார்வை...நானும் புதிதாய் அறிந்து கொண்டேன்...இங்கே உடல் என்பது அதிகாரம் காலம் தொட்டு....

    புல்புல் இஸபெல்லா அவர்களுக்கு நன்றி

    ReplyDelete

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |