Wednesday, August 30, 2017

Science in the Courts(උසාවිය නිහඬය්)(மௌனித்த நீதிமன்றம்) – 2016: அதிகாரத்தின் துஷ்பிரயோகம்





சர்ச்சைக்குள்ளான அல்லது தடை செய்யப்பட்ட திரைப்படங்கள் மீதான ஆர்வங்கள் என்றுமே குறைவதில்லை.  சில உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள்ஆவணப்படங்களைத் திரையிடும் செயற்பாடு அரசினால் அல்லது சமூகமதகலாசார நிறுவனங்களினால் தடை செய்யப்படுவது வழக்கமான ஒரு செயலாகிக்கொண்டு வருகிறது. மனிதர்கள் பல்வகைத்தன்மை கொண்டதோடு மனிதன் பற்றிய கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.யார் யார்  எப்போது என்ன வகையான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சிக்கலானவர்கள்.இந்தப் புதிரை அவிழ்ப்பதில் சங்கடங்களை எதிர்நோக்குவதுதான் மனித மனதின் யதார்த்த நிலை. இதை அறிந்து கொள்வது எக்காலத்திலும் கடினமான செயலாகவே இருந்துவிடுகின்றது.


காலங்காலமாக பாலியல் லஞ்சம் மற்றும் பாலியல் வல்லுறவு என்பன அதிகாரத்துஷ்பிரயோகத்தின் அங்கமாக இனமதமொழிநிற வேறுபாடின்றி அனைத்து சமூகங்களிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இது எந்த ஒரு மதமும்இனமும் மறுக்கவியலாத அப்பட்டமான உண்மை.இலங்கையிலும் இது விதிவிலக்கல்ல. சில உண்மைச் சம்பவங்களை பத்திரிகைகளில் மற்றும் செய்திகளில் அவதானிக்கின்ற போது, "எவ்வாறான மிருகத்தனமான சமூகங்களுக்கு மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கின்றோம்?" என்னும் வினாக்கள்  சலிப்புடன் தோன்றும். அப்படி இருந்தும் அதே சூழலில் ஒரு சில மனிதர்கள் சக மனித உணர்வுக்காக தமது உயிரையும் துச்சமாக மதித்து அவர்களுக்காக  போராட முன்வருகின்ற போதுதான் மனிதப்பிறவிக்கான இருப்பின் நியாயத்தை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அப்படியான, இன்னும் நீதி மறுக்கப்பட்ட ஒரு உண்மைச்சம்பவத்தின் ஆவணப்படம் பற்றி அண்மையில் அறியக்கிடைத்தது. இயக்குனர் "Prasanna Vithanage"(பிரசன்ன விதானகே) 2016 இல் இயக்கிய சிங்கள மொழி ஆவணப்படம் "Silence in the Courts"(சைலன்ஸ் இன் தி  கோர்ட்ஸ்).இது பற்றி பெரும்பாலும் ஊடகத்துறையினர் தவிர்த்து தமிழ் பேசும் சமூகங்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவாகவேயிருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை பாரிய மொழி ரீதியான இன முரண்பாடு மறைமுகமாகவும் நேரடியாகவும் நடைமுறையில் இருப்பதனாலோ என்னவோ தமிழ் மொழி பேசும் தரப்பின் பெரும்பாலானோர் இது சிங்களவர் பிரச்சனை என கவனத்திற்கொள்ளாமல் புறக்கணித்திருக்கக்கூடும். ஊடகங்களும் அக்கறை காட்டாமல் தவிர்த்திருக்கக் கூடும். இங்கு மொழி, இனம் என்று நோக்காமல் "பெண்களுக்கெதிரான வன்முறைகள்" என்று நோக்குவோமேயானால் இது பாரியளவில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நிகழ்த்தப்படும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்பது அனைத்து இன மக்களுக்கும் தெளிவாகப் புரியும்.

 முஸ்லீம்தமிழ்ச் சமூகங்களைப் பொறுத்தவரை இதை விட மோசமான பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அவர்களது சமூகத்தில் நிகழ்த்தப்பட்டாலும் அவை வெளிக்கொணரப்படும் வீதம் மிகக் குறைவு. மதம்கலாசாரம்சமூகக்கட்டமைப்பு என்று பெண்களை அதிகமாக மட்டந்தட்டி வீட்டில் அடைக்கும் சமூக நீட்சியே இன்னும் தொடர்கிறது. அல்லாவிட்டால் அந்தப் பெண்ணே குற்றவுணர்வு மேலோங்கி தற்கொலை செய்யத்தூண்டும் வண்ணம் குடும்பமும் சமூகமும் தங்களது திராணியற்ற தனத்தை துஷ்பிரயோகம் செய்த அதிகாரத்திலுள்ளவர்களிடம் காட்டாமல் தங்களது அறியாமையையும்இயலாமையையும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நிரூபித்துக்கொண்டிருக்கும் நிலைதான் இன்றும் நிலவி வருகின்றது.

சமூகத்தில்கல்வியில் உயர்ந்த தரத்தில் இருப்பவர்களிடம் "சிறந்த மனிதப்பண்பாடு" நிரம்பி இருக்கும் என்னும் பொது மையவோட்ட நம்பிக்கைதான் பெரும்பாலும் சாதாரண மனிதனைப் படுகுழியில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கின்றது. பாடசாலையில் ஆசிரியர் மாணவியை அல்லது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குதல்பல்கலைக்கழக மாணவியை விரிவுரையாளர் துஷ்பிரயோகம் செய்தல் என்றவாறு நீண்டு செல்லும் இந்தச் சம்பவங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களில் சிலர் நிகழ்த்திவிட்டுகுறைந்த பட்ச தண்டனை கூட பெறாமல் சுதந்திரமாக திரியும் நிலை காணப்படுகிறது. இது போன்ற துஷ்பிரயோக செயலில் ஈடுபடுபவர்களினால் தான் பெண்கள் இன்றும் ஆண் துணையின்றி பெருவாரியான முயற்சிகளை தாமாக மேற்கொள்ளவியலாமல் ஊனமுற்றிருக்கும் நிலை காணப்படுகிறது. ஆணின்றி பெண்ணால் இயங்க முடியாது என்று சமூகத்திலுள்ளவர்கள் கூறிக்கொள்ள ஒரே ஒரு பெருங்காரணம் பெண்ணுடலுக்காக கழுகாக காத்திருக்கும் கீழ்த்தரமான ஆணாதிக்கவாத செயற்பாடுகள்தான். நமது சமூகத்தில் பாலின வேறுபாட்டை மையப்படுத்தி பேசுவோமேயானால் இங்கு பெண்ணுக்கு பாதுகாப்பும் ஆண்தான்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும் பெருவாரியாக ஆண்தான்.

இந்த ஆவணத்திரைப்படம் பற்றி விளக்க முன்னர் இலங்கையின் முக்கியமான ஒரு ஊடகவியலாளர்எழுத்தாளர்மற்றும் முன்னாள் ராவய பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவன் பற்றி அறிந்திருப்பது இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும். "சைலன்ஸ் இன் த கோர்ட்" ஆவணப்படத்தின் காதாநாயகன் என்றே இவரை கருத இயலும். இவரைப்பற்றி எனக்கு சிறந்த அறிமுகத்தை தந்தவர் எனது நண்பனும் வசந்தம்  தொலைக்காட்சியின் நிகழ்ச்சித்தொகுப்பாளரும் மற்றும் ஊடகவியலாளருமான பிஷ்ரின் முகம்மட். அவர் பின்வருமாறு விக்டர் ஐவன் பற்றிக் கூறி இருந்தார்:

விக்டர் ஐவன்


"விக்டர் ஐவனை வாசிக்கத்தொடங்கி பல வருடங்கள் கடந்து விட்டன.அவரது புத்தகங்களாகட்டும்கட்டுரைகளாகட்டும்ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எத்தனையோ புது விடயங்களை எனக்கு கற்றுத்தருகின்றன. இலங்கை ஊடகவியலாளர்களில் நான் பார்த்து வியந்து நிற்கும் தனித்துவமானவர். அவரது எழுத்துக்களில் பக்கச்சார்பைக் கண்டதேயில்லை. சிறுபான்மைச் சமூகத்தின் குரலாக பல இடங்களில் அவரது குரல் ஓங்கி ஒலித்துள்ளது. "பன்சலையில் புரட்சி" என்னும் அவரது நூல் என்னுள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிரசன்ன விதானகேயின் தயாரிப்பில் பல தடைகளை தாண்டி வெளிவந்த "மௌனித்த நீதிமன்றம்"උසාවිය නිහඬය්; Silence in the Court) ஆவணப்படம் பார்த்த பின்னர் விக்டர் ஐவன் மீது அளவுகடந்த மரியாதை உண்டாயிற்று. நீதிபதியை தன் பேனா ஆயுதத்தைக் கொண்டு சட்டத்தின் முன் நிறுத்திய ஒரு ஊடக ஜாம்பவானாக 20 வருடங்களுக்கு முன்னரே சாதித்துக்காட்டியவர் விக்டர் ஐவன். ஊடகம் என்பது இன்று மிகப்பெரும் ஆயுதம். ஆனால்இலங்கை போன்ற நாடுகளில் ஊடகங்கள் வெறும் செய்தி சொல்லிகளாகவும்அரசியல்வாதிகளின் ஊதுகுழலாகவுமே இருப்பதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் 20 வருடங்களுக்கு முன்னரே ராவய பத்திரிகைக்கு பாதிக்கப்பட்ட குறித்த பெண் முறையிட வந்துள்ளார். அதனடிப்படையில் பெண்ணின் பாதிப்புக்கு காரணகர்த்தாவாக இருந்த நீதிபதியை நீதி தேவதையின் முன் நிறுத்தியது மாத்திரமல்லாமல் நீதிபதியின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டினார். ”

இவரது "Unfinished Struggle" என்னும் நூல் அரசியல் அதிகாரத்தின் முன்னே நீதித்துறை தன் சுயாதீனத்தன்மையை இழந்து நிற்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அது மட்டுமன்றி நீதித்துறையில் உயர்பதவியில் இருப்பவர்களின் துர்நடத்தைகளையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இன்னும் இவரது பேசப்பட வேண்டிய நூல்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியுள்ளன. பத்திரிகைத்துறையில் குற்றப்புலனாய்வு பகுதியை சரிவர பயன்படுத்தி இருப்பவர் விக்டர் ஐவன். அவரது தேடல்ஆய்வுதைரியம் போன்றன உண்மையில் ஊடகத்துறையினருக்கான முன்னோடி என்றே பல இளம் ஊடகவியலாளர்கள் ஆத்மார்த்தமாகக் கருதுகிறார்கள்.

இந்த ஆவணப்படம்இரு பெண்களை அவர்களது சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நீதிபதி ஒருவர்  தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததையும்பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார் இன்றும் அவரை பழிவாங்கத்துடிக்கும் மனோநிலையில் இருப்பதையும்இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கப்படுவதற்காக பாரிய முயற்சிகளை மேற்கொண்ட ஊடகத்துறையின் நடுநிலையான செயற்பாட்டையும்இன்றும் அந்த நீதிபதி தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகத் திரிவதையும் மற்றும்  இன்றய நீதித்துறையின் நெருக்கடியை மிகவும் அழுத்தமாகவும் , ஆதாரபூர்வமாகவும் பேசுகின்றது.


முதலாவது சம்பவம்

போதிய அறிவுப்பின்புலம் இல்லாதஇரு குழந்தைகளின் தாயான W.B.M கமலாவதி என்னும் பெண்1997 இல் மாகோ நீதிமன்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தன் கணவனை பிணையில் விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருக்கைய  காவல்துறையினர்,  வழக்கறிஞர் H.P.B தென்னக்கோன் உதவியுடன் லெனின் ரத்நாயக்க என்னும் மாகோ நீதிமன்ற நீதிபதி அந்த பெண்ணை ஏமாற்றிகம்பொல என்னும் ஊரில் விடுதி ஒன்றில் வைத்து அவளது மாதவிடாய் நாள் என்றும் பாராமல் அவளை துப்பாக்கி இருப்பதாக மிரட்டி ஒரே நாளில் நான்கு முறை வன்புணர்வு செய்தார். இதனை அடுத்து அந்தப் பெண் உடல்நலமற்று கணவனைக் காண சிறைக்குச் செல்லாமல் இருக்க கணவனுக்கு சந்தேகம் ஏற்படுகின்றது. பின்னர் வழக்கு நாளன்று வருகை தந்து கணவனிடம் நடந்தவற்றைக் கூற அவன் மிகவும் கோபம் கொண்டு அவளை அடித்து, "உனக்கும் எனக்கும் இனி எவ்வித உறவுமில்லை"என்று கூறி துரத்துகிறான். பின்னர் ஒரு நாள் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு சிறைச்சாலைக்கு வந்து தானும் பிள்ளைகளும் நஞ்சுண்ணப் போவதாக கூறஇதைத் தாங்காத கணவன் அவளை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். பின்னர் அவனது மனைவிக்கு நிகழ்ந்த அநீதிக்காக நீதிபதியாக இருந்த லெனின் ரத்நாயக்கவை அசிங்கப்படுத்தி தாக்க முடிவு மேற்கொண்டு மலசலக்கழிவுகளை சேகரித்து ஒரு பையில் போட்டு வைத்துக்கொண்டதோடு கேஸ் நிரப்பப்பட்ட போத்தல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிபின்னர் சரணடைந்து பாரியளவில் அதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறான். இந்தச் சம்பவத்தின் பின்னர் 9 மாதம் கழித்து "ராவய" பத்திரிகை நிறுவனத்திடம் முறையிட சென்றுள்ளனர். அங்கே பத்திரிகையாசிரியர் விக்டர் ஐவனை சந்தித்து நடந்த அனைத்து விடயங்களையும் கூற அவர் ஊடகவியலாளர் வருண கருணாதிலக்கவிடம் கூறுகிறார். வருண அதனை நம்ப மறுத்து பின்னர் ஆதாரங்களைக் கொண்டு நம்பிஅந்த பெண்ணுக்காகவும்நீதித்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்தும் எழுத ஆரம்பிக்கிறார். அந்தச் சம்பவம் நடந்து 9 மாதங்களில் அந்தப் பெண் மூன்று அரச நிறுவனங்களுக்கு முறையிடச் சென்றுள்ளார். அத்தோடு ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். யாருமே அதனைப் பொருட்படுத்தவில்லை. இறுதியில்தான் ஊடகத்துறையின் உதவியை நாடியுள்ளார் அப்பெண்மணி. அவர் முறைப்பாடு தாக்கல் செய்த மூன்று அமைப்புகளும் பின்வருமாறு.

1. நீதிச்சேவை ஆணைக்குழு (Judicial Service Commission)
2. வழக்குரைஞர் குழாம் சங்கம் (Bar Association)
3.மனித உரிமை முன்னேற்றத்திற்கான வழக்கறிஞர்கள் அமைப்பு (Lawyers Organizations for Development of Human rights) 

இவை தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்திக்கொண்ட பின்விக்டர் ஐவன் 16 ஆகஸ்ட் 1997 இல் இதனை தனது பத்திரிகையில் பின்வரும் தலைப்பின் கீழ் பிரசுரித்தார்.

"Complaint of Grave Abuse of Power by a Juridical Officer"




இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக பல விடயங்களை விவாதம் செய்து அரச நீதித்துறையை கேள்வி கேட்கும் வண்ணம் பத்திரிகைகளில் கேலிச்சித்திரம் முதற்கொண்டு வெளிப்படையாகவே பிரசுரிக்க ஆரம்பித்தார் விக்டர் ஐவன். இதனால் அவரும் அரசினாலும் சமூகத்தினாலும் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டார். "Wayamba Group Of Buddhist Bhikkhu" என்னும் அமைப்பு விக்டர் ஐவனுக்கு எதிராக குரல்கொடுத்ததுடன் அவருடைய உருவ பொம்மைகளையும் எரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. இதன் பின்னர் இன்னும் லெனின் ரத்நாயக்க பற்றிய உண்மைத் தகவல்களை திரட்டும் முயற்சிகளில் இறங்கினார் விக்டர் ஐவன். இதன்போது இரண்டாவது சம்பவம் அவரைத் தேடி வந்தது. விக்டர் ஐவனின் தீவிர வாசகரான ரஞ்சித் நவரத்ன (Secretary of the People's Party) அவரைத் தொடர்புகொண்டு லெனின் ரத்நாயக்கவின் இன்னொரு பெண்ணின் மீதான வன்புணர்வுச்சம்பவம் பற்றி தெரியப்படுத்தினார்.

2.  இரண்டாவது சம்பவம்

Jayantha Gunavardana Manike (ஜயந்த குணவர்தன மனிக்கே) என்னும் பெண்ணும் இதேபோன்ற வன்முறைக்கு ஆளாகினாரென்பது தெரியவந்தது. அவரது கணவன் வழக்கின் உரிய தேதிக்கு நீதிமன்றத்துக்குச் செல்லாமல் விட்டுவிட்டார். அந்தப் பெண்கணவனுக்குப் பதிலாக வழக்குகளைத் தவறவிடாமல் நீதிமன்றத்துக்கு சென்றுகொண்டிருந்தார். வழக்கத்துக்கு மாறாக அனைத்து வழக்கு விசாரணைகளும் முடிவடைந்த பின்னர் இறுதியாகவே இந்த வழக்கு நீதிபதியின் தனிப்பட்ட அறையில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தினுள் வைத்தே அந்த பெண் துப்பாக்கி முனையில் வன்புணரப்பட்டுள்ளார். அதிகாரத்தின் உச்சபட்ச மிலேச்சத்தனமான துஷ்பிரயோகமாக இதனைக் கொள்ள இயலும். இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவன் லெனின் ரத்நாயக்கவை கொல்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இன்றும் கூட கொல்லத்துடிக்கும் மனோநிலையில் ஆவேசம் மேலோங்கவுள்ளார் அந்தப் பெண்ணின் கணவன். குற்றவாளிக்கு உரிய தண்டனையை அரசு வழங்காவிட்டால் இந்த பாதிக்கப்பட்ட பெண்களின் கணவன்மார்களைப் போல ஆயுதமேந்தும்நிலை தோன்றுவது இயல்பானதுதானேஇந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்ற விக்டர் ஐவன் பின்வரும் தலைப்பின் கீழ்  இந்தச் சம்பவத்தையும் ராவய பத்திரிகையில் பிரசுரித்தார்.

"Magistrate Rapes Accused Woman in Courts Chamber"

இந்த சம்பவங்களின் பின்னர்நீதிபதியான லெனின் ரத்நாயக்க மீது ராவய பத்திரிகை குற்றஞ்சாட்டியமைக்காக 1999ம் ஆண்டு நவம்பர் 11ம் திகதி  அதி உயர் நீதிமன்றத்தில் மூன்று நபர்களைக்கொண்ட நீதிக்குழு ஒன்று விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. இதன் போது லெனின் ரத்நாயக்க மீது நான்கு குற்றங்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் அவரை உடனடி பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார்கள். மேலும் அவர்  இதன் போது அரை மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு எந்தவித தண்டனையும் இன்றி இன்றும் சுற்றித்திரிந்து கொண்டிருக்கின்றார்.

இங்கே நீதி என்பது அதிகார பலம் தன்னகத்தே கொண்டவர்கள் தீர்மானிப்பதுதான்.” இந்த நாட்டிலுள்ள நீதி முறையில் பாரிய சிக்கல் நிலவிக்கொண்டிருப்பதனை இந்த சம்பவங்கள் மூலமாக அறியலாம். இதை பற்றி விக்டர் ஐவன் குறிப்பிடுகையில், "இந்த சம்பவங்களுக்காக எத்தனையோ ஆதாரங்களை சமர்ப்பித்தும்எத்தனையோ ஊடகங்களில் வெளிப்படையாக அம்பலப்படுத்தியும் கூட எந்த ஒரு நீதியும் கிடைக்கவில்லை. இப்படியிருக்க இந்த நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சாதாரண  விளிம்பு நிலை மக்களின் வழக்கு நிலை எவ்வாறு  இருக்கும் என்பது கேள்விக்குரியதே" என்று கூறுகிறார்.

ஆவணப்படத்தின் இறுதியாக பின்வரும் விடயம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்:

"ராவய பத்திரிகையினால் நிரூபிக்கப்பட்ட குற்றத்தை மூடி மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பொது வழக்கறிஞர் ஷரத் நந்த சில்வா 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க முன்னிலையில் தலைமை நீதிபதியாக (Chief Justice) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்."


மேலே கூறப்பட்ட வாசகத்தின் மூலம் நீதித்துறையின் சுதந்திரம் இறந்து போய்விட்டதனை நாம் உணரமுடியும். “Death to Freedom of Judiciary.”

இவ்வளவு மோசமான அநீதியை தைரியமாக வெளிக்கொண்டுவந்த இலங்கையின் திரைப்பட இயக்குனர் "பிரசன்ன விதானகே" பற்றிய சிறு அறிமுகமாவது இங்கே அவசியம். வழக்கமாக தமிழ்நாட்டு திரைப்படங்களை அப்படியே அச்சொட்டாக பின்பற்றும் கோமாளித்தனம் சிங்கள சினிமாப்போக்கில் விரவிக்காணப்படுகிறது. பிரசன்ன விதானகேசிங்கள சினிமாவுலகில் நம்பிகை தரும் ஒரு படைப்பாளி என்பதற்கு அவர் இதுவரை கொடுத்துள்ள திரைப்படைப்புக்களே சான்று. பொதுவாக இவரது திரைப்படங்கள் யதார்த்தமிக்க கலைத்துவமான படைப்பாக இருப்பவை. தேவையற்ற திணிப்புகள் அவற்றில்  காணப்படாது. குறிப்பாகதடை செய்யப்பட்ட அல்லது அதிக திரைப்பட விழாக்களில் பங்குபற்றியவையாக அவை காணப்படும். சைலன்ஸ் இன் த கோர்ட் ஆவணப்படத்துக்கு கூட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னாள் நீதியரசராக இருந்த லெனின் ரத்நாயக்க இந்த ஆவணப்படத்தைக் கண்டு நடுங்கி"இந்த ஆவணப்படம் வெளியானால் எனக்கு மட்டுமல்ல இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்புக்கே அபகீர்த்தி ஏற்படும்" என்று மனுவொன்றை தாக்கல்செய்திருந்தார். கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.ஏ.குணவர்தன இந்த ஆவணப்படம் பற்றி தீர்க்கமாக விசாரித்தபின்னர் இதன் மீதான தடை உத்தரவை நீக்கினார்.

"Death on a Full Moon Day" (1997)  என்ற பிரசன்ன விதானகேயினால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க காலத்தில் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு வெளிவரமுடியாது கிடப்பில் இருந்தது. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் அமைதியானஅழகான கிராமத்தில் தன்னுடைய தேவைகளோடு மட்டுமே வாழப்பழகிக் கொண்ட அந்த பூமியைக் கூட இந்த இனவாத யுத்தம் விட்டுவைக்கவில்லை என்பதை விமர்சன ரீதியாக இல்லாமல் வெறும் காட்சிகளினூடே காட்டிச் செல்கின்றது அவரது படம். இந்தப் படம் யார் பக்கம் என்று அனுமானிப்பதை விடஉண்மையின் பக்கம் என்பதே பொருத்தமாயிருக்கும்.




இந்தப் படம் சிறந்த இயக்குனருக்கான விருதுசிறந்த நடிகருக்கான விருது என்று பல விருதுகளைப் பெற்றுக்கொண்டது. 

அதே போன்று "With you Without You" என்னும் திரைப்படமும் பாரியளவில் பேசப்பட்ட ஒரு திரைப்படமே. பொதுவாக இவரது திரைப்படங்களில் வன்முறைகள் மற்றும் பாலின சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இன்னும் இங்கே குறிப்பிடாத அவரது பல சிறந்த திரைப்படங்களும் உண்டு.

ஆவணப்படத்தை நேர்த்தியாக கோர்த்து சுவாரசியமாக அதன் அழகியல் மற்றும் திரைமொழி  சிதையாமல்  பார்வையாளர்களுக்குப் புரியும் வண்ணம் கதை சொல்வதில் தான் ஆவணப்படத்தின்  வெற்றி தங்கியுள்ளது. ஐம்பத்து மூன்று நிமிடங்களைக் கொண்ட இந்த  ஆவணப்படத்தின் கதைகூறும் பாங்கானது சிங்கள மொழியில் அமைதியான பின்னணிக் குரலுடன் ஆரம்பித்து இறுதிவரை நகரும். தேவையான இடங்களில் பொருத்தமான இசையுடன்  சம்பவங்களை காட்சிப்படுத்தும் போது இன்னும் உயிரோட்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.


W.M 
கமலாவதியின் சம்பவத்தை ஒரு எளிமையான தோற்றமுடைய பெண்ணைக் கொண்டு நடிக்கவைத்திருப்பார் இயக்குனர். இரண்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு வேகமாக அலைந்து திரியும் அந்தப் பெண்ணின் பின்புறக்காட்சிகள் அவளது கையாலாகாத ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருக்கும். அதிகமான வன்புணர்வுபச்சாதாபத்தையோ அல்லது கண்ணீர் சிந்துவதையோ காட்சிப்படுத்தி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்திவிடாமல்அந்தப் பெண்ணின் குழப்பமான மனநிலை  முகபாவனையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.


அதே போல லெனின் ரத்நாயக்கவிற்கு பதிலாக வந்த நடிகர் கூட மிகவும் யதார்த்தமாக அந்த சிறு காட்சியில் பிரதிபலித்து இருப்பார். அதிக கதாபாத்திரங்களைத் தெரிவு செய்யாமல்அதற்குப் பதிலாக சித்திரங்களைக் காட்சிப்படுத்திபின்னணிக் குரல் கதையை இலகுவாகவும் சூசகமாகவும் மக்களிடம் கொண்டு சென்றிருப்பது இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம். உதாரணமாக உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசாரணைக்குழு ஒவ்வொருவரையும் விசாரணை செய்யும் சம்பவத்தை எடுத்துக்கொண்டால்அந்தக் காட்சியில் நீதிபதி சித்திரமாக (Cartoon) காட்சிப்படுத்தப்பட்டிருப்பர். அந்த சித்திரத்திற்குப் பின்னால் அதிகாரத்தொனியில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கும்.

நீதித்துறை அதிகாரிக்கும் விக்டர் ஐவனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின்போது ஆங்கில உபதலைப்புகளையே திரையில் காட்சிப்படுத்தி இருப்பதனை காணமுடியும். பத்திரிகைகள் மற்றும் இன்ன பிற ஆதாரங்கள் அனைத்துமே தெளிவாக திரையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சிங்கள சினிமாவுக்குள் பிரசன்ன விதானகே தனக்கே உரித்தான தனிப்பாணியில் தன் படைப்புகளை அழகியலுடன் நகர்த்திச் செல்பவர் என்பது அவரது திரைப்படங்களை பார்க்கும்  உலக சினிமா ரசிகர்களுக்கு இலகுவாக புரிந்திருக்கும். இவ்வாவணப்படமும் அவருக்குரிய தனித்தன்மையுடன் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தை பார்க்கும் போதுபொது மக்களின் நீதிக்கான இறுதிக்கட்ட முயற்சியாக ஊடகத்துறையை அவர்கள் நாடியிருப்பதை அறியக்கூடியதாக இருகின்றது. மக்களுக்கான நீதி அரசிடமிருந்து கிடைக்காத போதும்அரசுக்கு எதிராகவே இருந்தாலும் கூட நடுநிலையாக சாதாரண மக்களுக்காக குரல்கொடுத்த விக்டர் ஐவனது துணிவு விபரிக்க முடியாத ஒன்று. நாளாந்த பத்திரிகைகள் அனைத்து சமூக மக்களிடமும் பரவலாக சென்றடைந்து நாட்டில் நிகழும் அரச அதிகாரங்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்றுமொழிவாதம்  இலங்கையைப் பொறுத்தவரையில் பெரிய சிக்கலாக  இருப்பதனாலோ என்னவோ இதனை தமிழ்ச்சமூக மக்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பான  விக்டர் ஐவனது தொடர்ச்சியான பத்திரிகைச் செய்திகளையே தொகுத்து அதனை காட்சி மொழிப்படுத்தியிருக்கும் பிரசன்ன விதானகேயின் முன்னெடுப்பானது சிங்கள மொழி பேசும் மக்களிடம் மட்டுமன்றி ஏனைய பல்லின மக்களிடமும் இதனை வீரியமாகக் கொண்டு சேர்க்க உதவியுள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் வாசிப்பைக்காட்டிலும்  காட்சி ஊடகம்,படித்தவர் முதல் பாமரர்வரை அனைவரும் இலகுவில் புரிந்து உள்வாங்கிக் கொள்ளக்கூடியது என்னும்வகையில்   விக்டர் ஐவன் தனது பத்திரிகை பலத்தை பயன்படுத்தி குறித்த சம்பவத்தை இலங்கைச் சூழலை மையப்படுத்தி முடிந்தவரை அம்பலப்படுத்தி இருப்பார். ஆனால் பிரசன்ன விதானகே அந்த பத்திரிகைகளையே தொகுத்துவிக்டர் ஐவனையே அந்த ஆவணப்படத்தின் பிரதான  சாட்சியாக நிறுவிசம்பவங்களை காட்சிப்படுத்திஆங்கில உபதலைப்புகளுடன் கூடிய ஆவணப்படமாக உருவாக்கி உலகளாவிய ரீதியில் இலங்கை நீதித்துறையின் கையாலாகாத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பார்.


இந்த ஆவணப்படத்தில் உள்ள சம்பவங்களைப் போன்று இன்னும் எத்தனையோ சம்பவங்கள் இலங்கையில் பல இடங்களில் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன.  மென்மேலும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு வெளிப்படாமலே மறைந்துள்ளன. இயக்குனர் பிரசன்ன விதானகே போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காக துணிவுடன் குரல்கொடுக்கும்திரைப்பட  இயக்குனர்கள் இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்ச்சமூகத்தில்  இன்னும் உருவாகவேயில்லை என்பதே நிதர்சனம்.


- அத்தியா - புதிய சொல் : 'ஏப்பிரல் - ஜீன்இதழில் வெளியாகிய கட்டுரை

Share This:   FacebookTwitterGoogle+

Friday, June 16, 2017

"அவரவர் உடல் அவரவர் உரிமை" (Pink)

"அவரவர் உடல் அவரவர் உரிமை" (Pink)

அவரவர் விருப்பம் போல அவரவர் வாழ்க்கை. அறக்கருத்து சொல்லி அறிவுரை கூறி அதை முற்று முழுதுமாக பின்பற்றும் எந்த 'ஞானப்பழங்களும்' இந்த கால கட்டத்தில் இல்லை. யார் கூறும் அறிவுரையை யார் பின்பற்ற வேண்டும்? இங்கே பலர் 'உத்தமர்கள்' என்னும் வார்த்தைக்குள் தங்களைக் கொண்டுவர முற்படுகின்றனர். "செக்ஸ்" என்னும் வார்த்தையை பொது வெளியில் கேட்டால் காதுகளை மூடிக்கொள்வார்கள். மன்னிக்கவும். "உத்தமர்" என்னும் வார்த்தைக்கு தெளிவான அர்த்தத்தையும் உத்தமராக வாழ்ந்து கொண்டிருக்கின்ற "உதாரண புருஷர்களையும்" முடிந்தால் நினைவுக்கு கொண்டுவந்து முன்வைக்கவும்.

மத கலாச்சாரங்களால் வெகுவாக பின்னப்பட்ட கிராமப்புற ஊர்களில் இரவு வேளை உங்களது நண்பர்களுடன் ஒரு சுற்று சுற்றி வந்து பார்க்க. எத்தனை வீட்டுக் கூரைகள் மற்றும் யன்னல்கள் திறந்தவண்ணம்  காமத்தைப் பருக காத்துக்கொண்டு இருக்கின்றது என்று?

இது சங்ககால முதல் கொண்டு நாம் (தமிழர்கள்) கற்றறிந்த ஒன்று தானே? இந்த "காதல் காமகளவொழுக்கம்" இந்த நவீன யுகத்தில் இது அலட்டிக் கொள்ளும் அளவு ஒரு மிக முக்கியமான விடயமும் இல்லை. இதில் என்ன புதிதாக அதிர்வு வேண்டி இருக்கிறது?


Share This:   FacebookTwitterGoogle+

Tuesday, May 23, 2017

நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை - ஓர் எதிர்வினை

முரண்படும் கருத்துக்களுக்கான என் எதிர்வினை

"நீலப்படங்கள் என்பவை உலகத்தின் இறுதிச்சீரழிவைப் போன்றவை" என்னும் தலைப்பில் பிரான்சில் இருந்து வெளியாகும் "ஆக்காட்டி" இதழில் மொழிபெயர்ப்புக்கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது.இந்த கட்டுரையை ஈழத்து இலக்கியச்செயற்பாட்டாளர் மிஹாத் Mihad Mihad சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து முகப்புத்தகத்தில் சிறிதுகாலத்திற்கு முன்னர் பதிவிட்டு இருந்தார்.வாசித்து வியந்து போன கட்டுரை எனலாம்.இதன் மூலப்பிரதி அமெரிக்க ஊடகவியலாளரான(Chris Hedges) க்ரிஷ் ஹெட்ஜஸ் இனால் எழுதப்பட்டது.இருந்தாலும் கருத்தியல் ரீதியாக மட்டுமல்லாது நடைமுறைச்சாத்திய முரண்பாட்டு ரீதியாக சில வினாக்கள் என்னுள் எழுந்தன.அதனை கட்டுரையுடன் தொடர்புபடுத்தி முன்வைத்துவிடுகிறேன்.
வழக்கமாக பெண்களுக்கு எங்கே அநீதி இழைக்கப்படுகிறது? என்று சிலர் அவர்களுக்காக பரிந்து பேசவே முன்வருவதனை காணக்கூடியதாக உள்ளது.அதாவது "பெண்கள் பாவப்பட்ட ஜென்மம்" என்னும் உளவியலை தோற்றுவிப்பதாக இருக்கும்.அது எல்லா இடத்திற்கும் பொருந்துமா என்பது சற்று சிக்கலானது.ஆபாசத்திரைபட நடிககைகளாக இருக்கும் பெண்கள் பாவப்பட்டவர்கள்,அறியாமையால் இந்த ஆபாச சினிமாத்துறையில் இருந்துகொண்டு மிகுந்த துன்பப்பட்டு இருக்கின்றனர் என்னும் தோரணையிலேயே இந்த கட்டுரை நகர்ந்து செல்கின்றது.

// (Fifty Shades Of Grey) பிப்டி ஷேட்ஸ் ஓப் கிரே எனும் நூல் உடல்களுக்கிடையில் நிகழ்த்தப்படும் கொடுஞ் செயல்களைக் கொண்டாட்டக் கருவாகக் கொண்டது. இந்நூலிலுள்ளவை பின்னர் சினிமாவாகவும் உருவாக்கப்பட்டது. இவை தீவிர ஆபாச சினிமாவினதும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஆதரவோடும் அமெரிக்க நோய்மைக் கலாசார அபிலாசைகளை எடுத்துரைக்கிறது. இத்திரைப்படம் பெண்ணை சக மனிதனாக நோக்கும் பழக்கத்தை மறுத்து விடும் கொண்டாட்டங்களை உருவாக்குகிறது. இது வெறுமையான கருணையினாலும் அத்துமீறிய காதலாகவும் உலக மனங்களை வெல்ல முயல்கிறது. இந்த சினிமாக்கள் ஆண்களின் அதீத காமத்தையும் மட்டற்ற பாலியல் வேட்கையையும் வன்மம், துன்புறுத்தல், பலாத்காரம் போன்றவையூடாகத் தீர்த்துக் கொள்வதற்காக பெண்ணுடலை விளையாட்டுப் பண்டமாக்குகிறது. அதற்காக பெண்ணின் உயிர்ப்பான ஆளுமையை நீக்கம் செய்யும் கருத்தியலை நீலப்படங்கள் உருவாக்குகின்றன. இதன்போது அத்துமீறல்கள் யாவும் ஆண்மையின் காம லீலைகள் என்பதான கண்ணோட்டத்தைப் பெறுகிறது. இச்செயலானது நலிவானவர்களைச் சுரண்டிக் கொன்றுண்ணும் அதிகார வர்க்கத்தின் உலகியல் வன்முறை நியாயங்களை தெய்வச் செயல் போல ஏற்றுக் கொள்வதற்கான பண்பாகத் திரள்கிறது. இன்றைய முதலாளித்துவ நரகத்தை இந்தப் படைப்புகள் இயல்பானதெனவும் சிறப்பானதெனவும் ஆசீர்வதிக்கின்றன. இங்கு சுயம் சிதைந்த பெருமகிழ்வினால் நமது கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன.//
மேலே உள்ள பத்தி பிப்டி ஷேட்ஸ் ஒப் க்ரே நாவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என்றால் BDSM உறவு முறை பற்றிய தெளிவின்மையும்,ஒருபக்கசார்பாக பெண்களுக்காக பரிதாபப்பட்டு பேசும் மனநிலையும் காணப்படுகிறது.உண்மையில் அந்த நாவலில் முதலில் தன்வளர்ப்புத்தாயின் தோழி றொபின்சன் (Robinson) என்பவள் சிறுவன் க்ரிஸ்ட்டின் க்ரே (Christian grey )15 வயதாக இருக்கும்போது தன்னை உடலுறவு கொள்வதற்காக'BDSM' என்னும் உறவு முறையை அறிமுகப்படுத்தி,6 வருடமாக அதன் மூலம் இந்த சிறுவன் துன்புற கிடப்பதும் அதை பார்த்து அந்த பெண் பாலியல் இன்பமுற்றதன் விளைவால் அந்த சிறுவனும் உளவியல் உடலியல் ரீதியாக "பிறரைத்துன்புறுத்தி அந்த வலியின் மூலம் பாலியல் இன்பம் அனுபவித்தல்" (Sexual Sadism Disorder) என்னும் உறவுக்கட்டமைப்பு நோய்க்குள் உள்ளாக்கப்படுகிறான்.

அதன் பிரதிபலிப்பாக சந்திக்கும் பெண்களை தான் அனுபவித்த 'BDSM'என்னும் உறவு நிலைகளில் 'Submissive and Dominant 'என்னும் உறவைத் தேர்வு செய்து பெண்களது பிற உணர்வுகளைபுறக்கணித்து உடல்களுடன் உறவு கொண்டாடி வருவதாக இந்தநாவல் கூறுகிறது.இப்போ இதன் அடிப்படையில் பார்த்தால் முதலில் சிறுவனாக இருக்கும்போது அவனது தாயின் தோழி BDSM உறவை பயன்படுத்தி துன்புறுத்தி அதன்மூலம் இன்பமுற்று வந்திருக்கிறாள்.அதை பற்றி பேசவும் இல்லை.இதற்காக பரிதாபப்படவும் இல்லை.ஏனென்றால் "ஆண் என்பவனுக்கு பெண்ணுடனான காம உறவு எவ்வளவு மோசமானதாக, வன்முறையானதாக இருந்தாலும் கொண்டாட்டமானதுதான்" என்னும் கற்பிதம் சமூக மனங்களில் திணிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுக்கு காமமலீலை செயற்பாடானது உளவியல் உடலியல் ரீதியாக இன்பமானதாக இருந்தாலும் சமூகத்தின் பார்வையில் அது ஒரு வன்மமான செயலாகவே கணிக்கப்படுகின்றது.ஏனெனில் ஆண் காமத்தை அனுபவிக்க வரையறைகள் கிடையாது,ஆனால் பெண்ணுக்கு அதிகப்படியான வரையறைகள் உண்டு. BDSM சார்ந்த ஆபாசத்திரைப்படங்களை மேலோட்டமாக நோக்காமல் ஆழமாக பார்க்கும் போது அந்த இடங்களில் பெண்களால் ஆண்கள் எந்த அளவுக்கு துன்புறுத்தப்படுகிறார்கள்,அருவறுப்பானவைகளை அனுபவிக்கிறார்கள் என்பது புரியும். இதனை "Femdom BDSM" வகையினுள் காணலாம்.
Share This:   FacebookTwitterGoogle+

Sunday, May 21, 2017

Emilie Muller : 1993

நடிப்புன்னா என்னான்னு தெரியுமா?

"நடிப்பு ஆர்ட் (Art) .அது ஒரு கலை. அதை பீல் பண்ணி பண்ணனும். அனுபவிச்சு பண்ணனும். யதார்த்தமா இருக்கவேணும். உடல் மொழி (Body Language) ரொம்ப முக்கியம். முகபாவனை (Facial Expression) அதிலும் கவனித்தே ஆக வேண்டிய ஒன்று".

இப்படி நிறைய வார்த்தைகளை நடிக்க தயாராக இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள். அதை முயற்சி செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனாலும் நான் பார்த்ததில் அதிகமாக மண்டையில் எதுவுமே இல்லாமல் மைதா மாவு நிறத்தில் அல்லது சுண்டி விட்டால் ரத்தம் தெறிக்கும் நிறத்தில் அதிலும் குறைந்த வயதில் பெண் இருந்தால் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அடுத்தது ஒரு பிரபலமான நடிக நடிகையரின் பிள்ளையாக  இருந்தால் வாய்ப்புத்தேடி அலைய வேண்டிய சிக்கல்கள் ஒன்றுமே இல்லை. வீட்டு கதவை அண்டியே இயக்குனர்கள் பாய்விரித்து கிடப்பார்கள். இது போன்ற சப்பையான காரணங்களுக்காகவே பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. நடிகர் நடிகை என்று தாங்களே தங்களை பறை சாற்றிக்கொள்வதுடன் அதற்கு சாம்புராணி புகை போட சில ஊடகங்கள்விளம்பரங்கள் வேறு. எப்படியும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

அடுத்து இன்னும் சில கூட்டம் இருக்கு. அவர்கள் ஒரு நடிகரைப்போல நடிப்பதால்டப் மாஷ் Dub-mash செய்வதால் தானும் நடிக்க தகுதியானவர்கள் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பிரபலமாகி விட்டதாக கற்பனையில் மிதந்து கொண்டிருப்பார்கள். சரி அது இனி அவரவர் உரிமை. என்னமோ பண்ணுங்க. ஒருவர் செய்வதை போலச்செய்து பின்பற்றுவதில் என்ன புதுமை உண்டு?

உண்மையில் நடிப்புத்துறையில் உள்ளவர் என்னை பொறுத்தவரை ஒரு புத்தாக்க சிந்தனையுடையவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு மேற்கொள்ளாத மேதாவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.நாட்டு நடப்பு ,அல்லது இலக்கியங்கள் சார்ந்தாவது வாசிப்பனுபவம் இருக்கவேண்டும். மனித மனங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அணுக கூடியவராக இருக்கவேண்டும். அப்போதுதான் திரைக்கதையை உணர்ந்து அதனை ஏற்று நடிக்க முடியும்.உதாரணமாக இந்திய ஹிந்தி மொழி திரைப்படமான பார்ச்ட் (Parched) பலராலும் விமர்சிக்கப்பட்டது.அந்த விமர்சனமானது திரைப்படத்தில் உள்ள கருத்தியல் தொடர்பாக அல்ல.மாறாக ராதிகா ஆப்தேயின் ஆபாசமற்ற "நிர்வாண உடல் காட்சிக்காக" விமர்சிக்கப்பட்டது.கதைக்கருவுக்கு ஏற்றால் போலவே கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருந்தும் ஏன் விமர்சனம்? என்று பார்த்தால் இங்கு யாரும் கலையை கலையாக பார்ப்பதில்லை.பெண்ணுடலைப் பார்த்தாலே ஆபாச திரைப்பட வகைக்குள் உள்ளடக்குகின்றனர்.இது ஒரு புறமிருக்க கபாலி திரைப்பட கதாநாயகியாக தமிழில் தோன்றி விட்டு ஹந்தியில் இப்படி நடித்ததன் விளைவாக தமிழில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நடிகை ராதிகா ஆப்தேயின் ஊடக பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் அத்து மீறிய கேள்விகளை கேட்க அதற்கு ராதிகா ஆப்தேயின் பதில் மிகவும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. அந்த அளவுக்குத் தான் நடிக்கும் கதையின் கருவை, கதாபாத்திரத்தின் தன்மையினை உணர்ந்து அறிவுப்பூர்வமாக பதிலளித்து இருப்பார்.வெறுமனே உடலியல் காட்சியை காண்பித்தால் பரபரப்பாக பேசப்படும் என்பதற்காகவல்லாம் அந்த கதாபாத்த்திரத்தை ஏற்றிருக்கவில்லை என்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு கதையை எழுதி அதனை உரியவாறே எடுப்பதென்பது குதிரைக்கொம்புதான்.தணிக்கைக்குழு ,கலாச்சாரம் அது இது என்று கலையையே சிதைத்து விடுவார்கள்.இங்கே நடிகர்களின் அறிவு,சிந்தனை,கதையை ஆழமாக கேட்டு,கதாப்பாத்திர தன்மையுணர்ந்து  படத்திற்கு ஒப்பந்தம் செய்தல் போன்ற நிகழ்வுகள் படு மோசமாகவே உள்ளது.ஏனென்றால் அவ்வாறான சிறந்த கலைப்படத்திற்கு எந்த வணிக,அறிமுகமான முகமும் ஒப்பந்தம் செய்வது கிடையாது.முழுவதும் அலங்காரம் செய்து கொண்டு ஏதோ ஆட்டம் போட்டு விட்டு ஊடகங்களின் முன்னால்  நின்று உதார் விட்டுக்கொண்டு இருக்கின்றது.அதையும் நம் மக்கள் பார்த்து பூரிப்படைகிறார்கள்.  

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.மேலே நான் குறிப்பிட்ட புத்தாக்க சிந்தனையுடைய,வாசிப்பனுபவம், கற்பனை வளம் கொண்ட, இலக்கிய ரசனை உள்ள ஒரு நடிகையை தான் 20 நிமிடங்களை கொண்ட ஒரு பிரென்ச் குறுந்திரைப்படம் எனக்கு அறிமுகப்படுத்தி  திகைப்பில் ஆழ்த்தியது.

Emilie Muller.இந்த குறுந்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் "Yvon Marciao" இனால் உருவாக்கப்பட்டது.இந்த குறுந்திரைப்படத்தை பொறுத்தவரையில் வார்த்தைகளால் மட்டுமே நிரம்பப்பெற்ற ஒரு படைப்பு என்று சொல்லலாம்.சிலருக்கு அதிகமாக பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது.நிகழ்வுகளாக இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும்.ஆனாலும் ஒரு சிலரது பேச்சுக்களை ரசனையுடன் அவதானித்து உள்வாங்கிக்கொண்டிருப்போம்.அந்த பேச்சு எப்படி இருக்கும்? சுவாரஷ்யமான ஒன்றாக,புதுமையான ஒன்றாக, சில வேளைகளில் அந்தரங்கமானவையாக, நமக்கு விருப்பமான ஒன்றாக,கற்பனையனவைகளாக கூட இருக்கும்.அந்த சுவாரஷ்யம் எவ்வாறு வார்த்தைகளுக்குள் பின்னப்பட்டு தனது முகபாவனையினூடாக பார்வையாளர்களை ஈர்க்கின்றது என்பதில் தான் பேச்சின் யுக்தி கையாளப்பட்டிருக்கும்.அதிலும் பார்வையாளர்களிடம் வினா விடை அமைப்பில் நிகழும் உரையாடல்கள் என்றுமே உயிர்ப்புடையனவாக இருக்கும்.அந்த ஒரு செயற்பாடுதான் இந்த குறுந்திரைப்படத்திலும் நிகழ்ந்திருக்கும். ஒரு கணம் இக்குறும்பட பாணி எனக்கு Memories Of Machine குறுந்திரைப்பட வினா விடை அமைப்பு மற்றும் பார்வையாளரை நோக்கிய உரையாடல்முறை என்பனவற்றை நினைவூட்டியது..




இக்கதை கருவானது  ஒரு இளம்பெண் நடிகை தேர்வுக்காக சென்று அங்கு இயக்குனரால் கேட்கப்படும் கேள்விகளுக்கு தனது பதிலை தான் பெற்ற அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு அவ்விடத்திலேயே கற்பனை செய்து முன்வைப்பதாக காட்சிப் படுத்த பட்டிருக்கும்.
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, April 15, 2017

திரைப்பட பிரியர்கள்,கலை விரும்பிகள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் (பாலுமகேந்திரா வின் "வீடு")

"வீடொன்றை கட்டிப்பாரு;கல்யாணம் ஒன்றை பண்ணிப்பாரு" எங்க ஊர் வழக்கில் இப்படி ஒரு பழமொழியை சிலர் கூற கேள்விப்பட்டதுண்டு.ஏன் இப்படி ஒரு ஒரு பழமொழி உருவானது? என்று இயக்குனர் பாலு மகேந்திராவின் "வீடு" திரைப்படம் எனக்கு பதில் சொன்னது.திருமண நிகழ்வும் சரி,சொந்த வீடு சமாச்சாரமும் சரி,இரண்டுமே நடுத்தர வர்க்கத்தினருக்கு இலகுவான காரியம் அல்ல.சொந்த வீட்டில் வாழவேண்டும் என்பது பலரின் கனவு.ஆனால் இறுதி வரை கனவாகவே இருப்பதுதான் உலகின் நியதியாக உள்ளது.

மனுஷ்ய புத்திரன் வீடு வாடகைக்கு தேடி அலைந்த சம்பவமாக இருக்கட்டும்,சாரு நிவேதிதா கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து அடையாள அட்டைக்காக காத்திருந்து வீடு மாறிய சமயம் அடையாள அட்டை கிடைத்தும் பயனற்ற சம்பவமாக இருக்கட்டும்.புகழ்பெற்ற இலக்கியவாதிகள் கூட சொந்த வீடின்றி அலைந்து பல இன்னல்களை எதிர்நோக்கிய வரலாறுகள் உண்டு.எழுத்து சோறு போடும் வீதம் குறைவுதானே?


நடுத்தரவர்க்க வேலைக்குச்செல்லும் பெண்,தனக்கு வருகின்ற சாதாரண வருமானத்தை கொண்டு சொந்தமாக ஒரு வீடை கட்ட எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை உணர்வுபூர்வமாகவும் அழகாகவும் செயற்கைத்திணிப்புகள் இல்லாமலும் வெளிப்படுத்தி இருக்கும் திரைப்படமே "வீடு".
"உலகெங்கிலும் உள்ள வீடற்றவர்களுக்கு சமர்ப்பணம்" என்னும் வாசகத்துடன் திரைப்படம் ஆரம்பிக்கும்.


"கறுப்பழகி" அர்ச்சனாவுக்காகவே  இந்த திரைப்படத்தைப்பார்த்தேன்.இறுதியில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ரசிகையாகவே மாறிவிட்டேன்.அவ்வளவு யதார்த்தத்தை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களில் இருந்தும் வெளிப்படுத்தி இருப்பார்.

பாலு மகேந்திரா பற்றிய அறிமுகம் என்னிடம் ஐந்து வருடங்களின் முன்னரில் இருந்து அவர் இலங்கையின் மட்டக்களப்பை சேர்ந்தவர்,ஒளிப்பதிவாளர் என்பது மட்டுமே இருந்தது.பின்னர் அவரது ஒவ்வொரு படைப்பையும் அணுகும் போது தமிழ் சினிமாவில் பாரிய மாற்றத்தை நிகழ்த்திச்சென்றவர் என்பது புரிய வந்தது. இத்திரைப்படத்தில் "செயற்கைத்தனம்" என்னும் பேச்சுக்கே இடமில்லை.ஒளியமைப்பு முழுவதுமே இயற்கை ஒளியமைப்பினாலானது.1980 களில் சென்னை நகர சூழலையும்,அப்பிரதேச மக்களின் வாழ்வியலையும் கண்முன் கொண்டுவந்தது.மழைக் கால காட்சியமைப்பில் கூட ஒரு சிறு சறுக்கலும் நிகழவில்லை.கவனமற்ற அரச ஊழியர்கள் கையாலாகாத தனத்தை இறுதிக்காட்சியில் வைத்து பார்வையாளர்களை சிந்திக்கவைத்தவாறே நகரச்செய்து இருப்பார். 

இடையில் என்னை மிகவும் கவர்ந்த பல சம்பவங்கள் உண்டு.அதிலும் அர்ச்சனாவுக்கு துணையாக நிற்கும் "மங்கா" கதாப்பாத்திரத்தின் சரவெடியான சென்னை தமிழ்பேச்சில் வீடு காண்ட்ரேக்டரை வறுத்து எடுப்பார்.முகபாவனை முதற்கொண்டு அத்தனையும் பொருத்தமாக இருக்கும்.

இந்தப்படம் எடுப்பதற்காகவே கட்டிய வீடு இடையில் நிறுத்தப்பட்டு,பின்னர் அது முழுமையாக முடிக்கப்பட்டு தற்போது இயக்குனர் பாலுமகேந்திரா சினிமா பட்டறையாக இருப்பதாக அறியக் கிடைத்தது.பல யதார்த்தங்களை அழகியலுடன் காட்சிப்படுத்தி இருப்பார்.இங்கு சினிமாத்துறையில் பலருக்கு "சினிமா அழகியல் என்றால் என்ன?" என்றே தெரிவதில்லை.இன்னும் சிலர் காட்சி மொழி என்பது அழகாக காட்டுவதை மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டும் திரிகின்றனர்.ஆனால் உண்மையில் காட்சி மொழிதான் கதையை நகர்த்திக்கொண்டு செல்லும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

பணத்திற்கு அவசியமான நேரத்தில்,அன்பாய் தரும் பட்டுச் சேலை பரிசு கூட அனாவசியம் என கோபித்துக் கொள்ளும் அர்ச்சனா,பின்னர் அதே சேலையை அணிந்து கொண்டு, பானுசந்தரை பார்க்க அவர் வீட்டிற்கு போய், அவரை சமாதானம் செய்யும் இடம் அழகு.


முப்பது வருடங்களுக்கு முன், சென்னையில் விலைவாசி விவரங்கள் என்னவெனஅறிந்து கொள்ள முடிகிறது.

இரு படுக்கையறை வசதிகள் கொண்ட ஒரு வீட்டின் வாடகை 800/-
வளசரவாக்கத்தில் ஒரு கிரவுண்ட் விலை 40000 வருங்காலத்தில் குடி தண்ணீர் விற்பனை பிரதானமாய் இருக்கும், என அன்றே சொல்லி இருக்கிறார்கள். முப்பது வருடத்திற்கு முன், அந்தக் காட்சியை எவராவது நகைத்தபடி கடந்திருக்ககூடும்..

இறுதியாக அந்த வீட்டை பார்த்துவிட சொக்கலிங்க பாகவதர் வருவார். கட்டி முடிக்கப்படாத அந்த வீட்டின் முன் நின்று,பிறகு உள்ளே நுழையும் முன் தான் போட்டிருக்கும் செருப்பை கழற்றி விட்டு உள்ளே செல்வார். இது வழக்கமான ஒரு செயல்தான் என்றாலும், அந்த ப்ரேம் இன் அற்புத கலாச்சார துணிபு. நமது திரைப்படங்கள் இவ்வளவு நுட்பங்களைக் கடத்துகிறதா அல்லது பயன்படுத்திக் கொள்கிறதா என்பது சந்தேகமே. பாலும்கேந்திரா வெல்ல முடியாத ஓர் எளிமைக் கலைஞன்.

இந்த திரைப்படத்தின் பொருத்தமான பின்னணி இசை (BGM) பெரும் பலம்.இளையராஜாவின் இசை ஞானத்தை இதில் பரவலாக காணலாம்.படத்தின் காட்சிகளை ரசிகனுக்கு மிகச் சிறப்பாய் கடத்திவிடுகிறது."How to name it" ஆல்பம், இதற்கு முன் தனியாய் கேட்டிருந்தாலும், படம் பார்க்கும் போது தான் அதனை முழுமையாக உணர முடியும்  ராஜா - என்றென்றும் ராஜா தான்.

Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |