Sunday, May 21, 2017

Emilie Muller : 1993

நடிப்புன்னா என்னான்னு தெரியுமா?

"நடிப்பு ஆர்ட் (Art) .அது ஒரு கலை. அதை பீல் பண்ணி பண்ணனும். அனுபவிச்சு பண்ணனும். யதார்த்தமா இருக்கவேணும். உடல் மொழி (Body Language) ரொம்ப முக்கியம். முகபாவனை (Facial Expression) அதிலும் கவனித்தே ஆக வேண்டிய ஒன்று".

இப்படி நிறைய வார்த்தைகளை நடிக்க தயாராக இருப்பவர்கள் கேட்டிருப்பார்கள். அதை முயற்சி செய்து கொண்டும் இருப்பார்கள். ஆனாலும் நான் பார்த்ததில் அதிகமாக மண்டையில் எதுவுமே இல்லாமல் மைதா மாவு நிறத்தில் அல்லது சுண்டி விட்டால் ரத்தம் தெறிக்கும் நிறத்தில் அதிலும் குறைந்த வயதில் பெண் இருந்தால் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். அடுத்தது ஒரு பிரபலமான நடிக நடிகையரின் பிள்ளையாக  இருந்தால் வாய்ப்புத்தேடி அலைய வேண்டிய சிக்கல்கள் ஒன்றுமே இல்லை. வீட்டு கதவை அண்டியே இயக்குனர்கள் பாய்விரித்து கிடப்பார்கள். இது போன்ற சப்பையான காரணங்களுக்காகவே பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. நடிகர் நடிகை என்று தாங்களே தங்களை பறை சாற்றிக்கொள்வதுடன் அதற்கு சாம்புராணி புகை போட சில ஊடகங்கள்விளம்பரங்கள் வேறு. எப்படியும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆகவேண்டும்.

அடுத்து இன்னும் சில கூட்டம் இருக்கு. அவர்கள் ஒரு நடிகரைப்போல நடிப்பதால்டப் மாஷ் Dub-mash செய்வதால் தானும் நடிக்க தகுதியானவர்கள் என்று ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு பிரபலமாகி விட்டதாக கற்பனையில் மிதந்து கொண்டிருப்பார்கள். சரி அது இனி அவரவர் உரிமை. என்னமோ பண்ணுங்க. ஒருவர் செய்வதை போலச்செய்து பின்பற்றுவதில் என்ன புதுமை உண்டு?

உண்மையில் நடிப்புத்துறையில் உள்ளவர் என்னை பொறுத்தவரை ஒரு புத்தாக்க சிந்தனையுடையவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு மேற்கொள்ளாத மேதாவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை.நாட்டு நடப்பு ,அல்லது இலக்கியங்கள் சார்ந்தாவது வாசிப்பனுபவம் இருக்கவேண்டும். மனித மனங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அணுக கூடியவராக இருக்கவேண்டும். அப்போதுதான் திரைக்கதையை உணர்ந்து அதனை ஏற்று நடிக்க முடியும்.உதாரணமாக இந்திய ஹிந்தி மொழி திரைப்படமான பார்ச்ட் (Parched) பலராலும் விமர்சிக்கப்பட்டது.அந்த விமர்சனமானது திரைப்படத்தில் உள்ள கருத்தியல் தொடர்பாக அல்ல.மாறாக ராதிகா ஆப்தேயின் ஆபாசமற்ற "நிர்வாண உடல் காட்சிக்காக" விமர்சிக்கப்பட்டது.கதைக்கருவுக்கு ஏற்றால் போலவே கதாபாத்திரங்கள் பின்னப்பட்டிருந்தும் ஏன் விமர்சனம்? என்று பார்த்தால் இங்கு யாரும் கலையை கலையாக பார்ப்பதில்லை.பெண்ணுடலைப் பார்த்தாலே ஆபாச திரைப்பட வகைக்குள் உள்ளடக்குகின்றனர்.இது ஒரு புறமிருக்க கபாலி திரைப்பட கதாநாயகியாக தமிழில் தோன்றி விட்டு ஹந்தியில் இப்படி நடித்ததன் விளைவாக தமிழில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நடிகை ராதிகா ஆப்தேயின் ஊடக பேட்டி நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் அத்து மீறிய கேள்விகளை கேட்க அதற்கு ராதிகா ஆப்தேயின் பதில் மிகவும் மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திற்று. அந்த அளவுக்குத் தான் நடிக்கும் கதையின் கருவை, கதாபாத்திரத்தின் தன்மையினை உணர்ந்து அறிவுப்பூர்வமாக பதிலளித்து இருப்பார்.வெறுமனே உடலியல் காட்சியை காண்பித்தால் பரபரப்பாக பேசப்படும் என்பதற்காகவல்லாம் அந்த கதாபாத்த்திரத்தை ஏற்றிருக்கவில்லை என்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஒரு கதையை எழுதி அதனை உரியவாறே எடுப்பதென்பது குதிரைக்கொம்புதான்.தணிக்கைக்குழு ,கலாச்சாரம் அது இது என்று கலையையே சிதைத்து விடுவார்கள்.இங்கே நடிகர்களின் அறிவு,சிந்தனை,கதையை ஆழமாக கேட்டு,கதாப்பாத்திர தன்மையுணர்ந்து  படத்திற்கு ஒப்பந்தம் செய்தல் போன்ற நிகழ்வுகள் படு மோசமாகவே உள்ளது.ஏனென்றால் அவ்வாறான சிறந்த கலைப்படத்திற்கு எந்த வணிக,அறிமுகமான முகமும் ஒப்பந்தம் செய்வது கிடையாது.முழுவதும் அலங்காரம் செய்து கொண்டு ஏதோ ஆட்டம் போட்டு விட்டு ஊடகங்களின் முன்னால்  நின்று உதார் விட்டுக்கொண்டு இருக்கின்றது.அதையும் நம் மக்கள் பார்த்து பூரிப்படைகிறார்கள்.  

இவை எல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.மேலே நான் குறிப்பிட்ட புத்தாக்க சிந்தனையுடைய,வாசிப்பனுபவம், கற்பனை வளம் கொண்ட, இலக்கிய ரசனை உள்ள ஒரு நடிகையை தான் 20 நிமிடங்களை கொண்ட ஒரு பிரென்ச் குறுந்திரைப்படம் எனக்கு அறிமுகப்படுத்தி  திகைப்பில் ஆழ்த்தியது.

Emilie Muller.இந்த குறுந்திரைப்படம் 1993 ஆம் ஆண்டு இயக்குனர் "Yvon Marciao" இனால் உருவாக்கப்பட்டது.இந்த குறுந்திரைப்படத்தை பொறுத்தவரையில் வார்த்தைகளால் மட்டுமே நிரம்பப்பெற்ற ஒரு படைப்பு என்று சொல்லலாம்.சிலருக்கு அதிகமாக பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது.நிகழ்வுகளாக இருக்கட்டும், நண்பர்களாக இருக்கட்டும்.ஆனாலும் ஒரு சிலரது பேச்சுக்களை ரசனையுடன் அவதானித்து உள்வாங்கிக்கொண்டிருப்போம்.அந்த பேச்சு எப்படி இருக்கும்? சுவாரஷ்யமான ஒன்றாக,புதுமையான ஒன்றாக, சில வேளைகளில் அந்தரங்கமானவையாக, நமக்கு விருப்பமான ஒன்றாக,கற்பனையனவைகளாக கூட இருக்கும்.அந்த சுவாரஷ்யம் எவ்வாறு வார்த்தைகளுக்குள் பின்னப்பட்டு தனது முகபாவனையினூடாக பார்வையாளர்களை ஈர்க்கின்றது என்பதில் தான் பேச்சின் யுக்தி கையாளப்பட்டிருக்கும்.அதிலும் பார்வையாளர்களிடம் வினா விடை அமைப்பில் நிகழும் உரையாடல்கள் என்றுமே உயிர்ப்புடையனவாக இருக்கும்.அந்த ஒரு செயற்பாடுதான் இந்த குறுந்திரைப்படத்திலும் நிகழ்ந்திருக்கும். ஒரு கணம் இக்குறும்பட பாணி எனக்கு Memories Of Machine குறுந்திரைப்பட வினா விடை அமைப்பு மற்றும் பார்வையாளரை நோக்கிய உரையாடல்முறை என்பனவற்றை நினைவூட்டியது..




இக்கதை கருவானது  ஒரு இளம்பெண் நடிகை தேர்வுக்காக சென்று அங்கு இயக்குனரால் கேட்கப்படும் கேள்விகளுக்கு தனது பதிலை தான் பெற்ற அனுபவங்கள் மற்றும் சிந்தனைகளை கொண்டு அவ்விடத்திலேயே கற்பனை செய்து முன்வைப்பதாக காட்சிப் படுத்த பட்டிருக்கும்.



பெண்களது "கைப்பை" என்றாலே மிகவும் சுவாரஷ்யமான ஒரு அம்சமாகத்தான் இருக்கும்.சில பெண்கள் பிறரிடம் தங்கள் கைப்பையை காண்பிக்க  தயங்குவார்கள்.நண்பர்களாக இருக்கட்டும்,உறவினர்களாக இருக்கட்டும்,ஏன் காதலனாக இருந்தால் கூட அதை காட்ட சற்றே தயங்குவார்கள்.ஆனால்  காவல் துறையிடம் என்றாலே அது விதி விலக்காகி விடும் இல்லையா?.இந்த கைப்பை சமாச்சாரம் மிகவும் இயல்பான விவரிப்பாக  இக்குறும்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். எமிலியை தனது  கைப்பையில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கச்சொல்லுவார் இயக்குனர்.அவளும் அந்தப்பையில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கம் கொடுத்து விட்டு நிகழ்வு முடிந்ததும் அவளது கைப்பையை மறந்து விட்டு போய்விடுவாள். பின்பு பார்த்தால் அந்த கைப்பை எமிலியுடையது அல்ல.அங்கேயே வேலை பார்க்கும் பெண்ணுடையது என்பதை அறிந்த இயக்குனர் தன் கதைக்குப் பொருத்தமான நடிகை இவள்தான் என்று எமிலியை தேடி ஓட்டமெடுப்பார்.அதனுடன் அந்த குறும்படம் முற்றுப்பெறுகின்றது.

பொதுவாக இத்திரைப்படம் ஆரம்பகாலத்தில் எடுக்கப்படும் தரமான ஹொலிவூட் திரைப்படத்துடன் இணங்கிச்செல்லும் விதத்தில் கறுப்புவெள்ளையில் எடுக்கப்பட்டது.வழக்கமான குறும்படங்களில் காணப்படுகின்ற கதை கூறும் பாணியில் திருப்பத்தை (Twist) படத்தின் இறுதிக்காட்சியில் கொண்டுள்ளவாறான யுக்தியே இப்படத்திலும் கையாளப்பட்டுள்ளது.

இந்த குறும்படம் ஒற்றை கேமரா கோணத்தில் (single camera angle) எமிலியை  மாத்திரம் மையப்படுத்தி  பார்வையாளர்களது கவனத்தை குவிக்க எடுக்கப்பட்டிருக்கும்.இதை எவ்வாறு பார்வையாளர்கள் உணர்வார்களெனில் இயக்குனர் கேட்கும் கேள்விகள் பார்வையாளர்கள் எமிலியிடம் கேட்பது போல தோன்றும்.அதற்கான பதிலும் பார்வையாளர்களை நோக்கியே இருக்கும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் செயற்பாடு இடைக்கிடை உதவியாளர் Take one, Take two, cut போன்ற வற்றை நிகழ்த்தும்போதுதான் எமிலி தேர்வில் உள்ளாள் என்பதை பார்வையாளர்களுக்கு நியாபகமூட்டும்.

கதை சொல்லும் முறையை பொறுத்தவரை ஒற்றை கதாபாத்திரத்துடன் மிக எளிதில் அமைந்துள்ள நேரியலான கதை கூறும் பாணி (Linear Narrative Style) கையாளப்பட்டுள்ளது.எமிலியின் விவரணப்பேச்சிலும் விளக்கத்திலும் நம்பகத்தன்மையை உருவாக்கி படம் நிதானமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும்.கைப்பையில் இருந்த எதுவுமே எமிலிக்கு சொந்தமானதல்ல என்பதும் ஒவ்வொரு பொருளுக்கும் கொடுக்கும் விளக்கங்கள் கற்பனை என்பதும் இறுதியில்தான் பார்வையாளர்களுக்கு புரிய ஆரம்பிக்கும்.மறுபடியும் மறுபடியும் என்று அந்த குறும்படத்தை பார்க்க ஆர்வம் உண்டாகும்.நானே இதனை 5 தடவைக்கு மேல் பார்வையிட்டேன்.அப்படி பார்க்க காரணங்கள் பல உண்டு. அவற்றில் சிலவற்றை முன் வைக்கிறேன்.

1.எமிலிக்கு தெரியாத பொருட்களை பையிலிருந்து எடுக்கும்போது அந்த பொருளுக்கு பொருத்தமான விளக்கங்களை தானாகவே உருவாக்கி வைத்திருப்பாள்.

2.எமிலியின் முக பாவனை மற்றும் உடல் மொழிகள் மிகவும் யதார்த்தமாகவும் ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.

3.எமிலியின் விவரணப்பேச்சு அவளது சுவாரஷ்யமான இருப்பை நியாயப்படுத்துவது போல அமைந்திருக்கும்.

4.தனது குறிப்பில் எழுதி உள்ள வாசகம் ஒன்றை கூறுவாள், இந்த இடங்களில் பார்வையாளருக்கு சந்தேகம் ஏற்படலாம் இந்த வாசகம் இவளே உருவாக்கியதா?அல்லது அந்த குறிப்பு புத்தகத்த்தில் எழுதப்பட்ட ஒன்றா?என்று இது போல பல காரணங்களை அடையாளப்படுத்தலாம்.

இந்த குறும்படத்தைப்பார்க்கும் போது என்கண் முன் நிழலாடும் விடயம்,தமிழில் ஏன் இது போன்ற புத்தாக்க சிந்தனையை தோற்றுவிக்கும் சுவாரஷ்யமான குறும்படங்களை எடுக்க பெரிதாக முன் வருவதில்லை? தமிழ்க் குறும்படங்களைப் பொறுத்தவரை ஒன்று கண்ணீர் விட்டு,அல்லது பிறரை கண்ணீர் வடிக்கவைத்து பச்சாதாபங்களை ஏற்படுத்தியே ஒரு செறிவான கருத்தை சொல்ல முயலும் நிலை காணப்படும்.அடுத்து அதிகமான மனிதாபிமான உணர்வுகள் நிரம்பி வழிந்ததாக இருக்கும்.அல்லது சகிக்க முடியாத நகைச்சுவை, காதல் காட்சி,உறவுநிலைகள்,திகில் போன்றவற்றை மையப்படுத்தி முழு நீள திரைப்படத்தை 15 அல்லது 20 நிமிடத்திற்குள் சுருக்கி எடுக்கப்பட்டிருக்கும்.இதற்குப் பெயர் குறும்படமா? இதிலும் இன்னும் சில அரை வேர்க்காடுகள்,கேமரா இருந்தாலே குறும்படம் தயாரிக்க  முடியும் என்னும் நோக்கோடு எதை எதையோ காட்சிப் படுத்தி அதற்கு ஆதரவு வேறு வழங்குமாறு நம்மைபோட்டு திணிப்பார்கள்.மனசாட்சிக்கு விரோதமாக நடக்க முடியாதல்லவா?ஆயிரம் குறும்படங்களை எடுத்து விட்டு திரிந்தாலும், ஒரு சம்பவத்தை சுவாரஷ்யமாக காட்சிப்படுத்தலே என்றும் கலையாக எல்லோர் மனதிலும் பேசக்கூடிய ஒன்றாக இருக்கும்.

அந்த அடிப்படையில்  ஒரு குறுந்திரைப்படத்திற்கு கதை சொல்லும் விதம் எவ்வளவு முக்கியமானது என்றும் கதாப்பாத்திர உருவாக்கம் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதற்கும்  Emilie Muller  குறும்படம் ஒரு பாரிய  எடுத்துக்காட்டாகும்.பிரதானமாக ஒரு நடிகருக்கு இருக்கவேண்டிய திறன்களை லாவகமாக அடையாளப்படுத்தும் ஒரு கலைப்படைப்பாகவே இக்குறும்படம் என்றும் நிலைத்திருக்கும். 


- அத்தியா -

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

About Me

My photo
"வாழ்வெனும் கங்குலை புரிந்து கொள்ளத்துடிக்கும் மின்மினி இவள்"
Copyright © மின்மினி |